குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

நம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான நாலு துண்டுச் சீட்டில் நாலு விதமான கதைகளைப் படித்த பின்னர் அந்த பேப்பர்களை கசக்கி தூர எறிந்து விட்டு வருமோமில்லையா? அப்படியான மன நிலையை ஏற்படுத்திய படம்தான் ‘குட்டி ஸ்டோரி’. ஆம்.. ஒரு ஷார்ட் ஃபிலிமை கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து இரண்டு மணி நேர சினிமா கொடுத்து வரும் சூழலில் நாலு ஷார்ட் ஸ்டோரியை தொகுத்து ஒரு ஃபிலிமாக கொடுத்து இருக்கிறார்கள். நான்கு குட்டி கதைகளுக்கும் ஒரேயொரு மையப் புள்ளி முறை பிசகிய காதல் என்பதுதான் ஹைலைட்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொல்லி ஐசரிகணேஷ் வணங்கி விட்டு போனவுடன் தொடங்கும் முதல் குறுங் கதை கெளதம் மேனன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் சப்ஜெக்ட். காலேஜில் தன்னுடன் நெருங்கிப் பழகிய சிநேகிதியுடனான அனுபவமே கதை.. அதாவது காதல்.. காதல் காதல்.. காதல் போயின் காதல் என்று எடுத்துக் காட்டி இருக்கிறார். சிநேகிதியாக அமலா பால்;, சின்ன வயது கெளதம் மேனனாக வினோத் ஆகியோரைக் கொண்டு பேசி, பேசி., பேசி., பேசியே மொத்த எபிசோட்டை முடிக்கிறார்,,. நடிப்பை கொஞ்சம் ஓரங்கட்டி வைத்து விடலாம் கெளதம் மேனன்.. செயற்கைதனத்துடன் மிக அதிகம்.

அடுத்து ’தியா’ புகழ் ஏ.எல். விஜய் இயக்கிய துண்டுப்படம்.. இள வயசு பெண் ஒருத்தி (மேகா ஆகாஷ்) எல்லை மீறி கொண்ட உறவால் பிறந்த குழந்தை ஒன்றின் போக்கிடம் குறித்து சொல்கிறது. கொஞ்சம் கூட நம்பகத்தன்மை இல்லாத காட்சி அமைப்புகளுடன் அரத பழசான க்ளைமேக்ஸ் காட்சியுடன் முடிந்து போனதும் ரிலாஸாக இண்டர்வெல் எல்லாம் விடுகிறார்கள்..

ரிலாக்ஸாக ரெஸ்ட் ரூமுக்கு போய் விட்டு வந்த நம்மை வெங்கட் பிரவு-வின் அனிமேஷன் ரூம் ,கேம் ,காதல் என்று ஏதோவொன்றை காட்டி விட்டு போகிறார்.

முத்தாய்ப்பாக நலன் குமாரசாமியின் துண்டு படைப்பு. ஆடல்,பாடல் என்பதுதான் தலைப்பு -ஆனால் ஒரு தம்பதிக்குள் நிகழும் கள்ள உறவு, ஊடல், கூடல் என்பதை மிக இலகுவான பாணியில் வெளிக்காட்டி அசத்தி இருக்கிறார். அதிலும் பிரச்னையை புரிந்து கொண்ட நிலையில் சின்னக் குழந்தை பார்வை, புன்னகையுடன் எபிசோட்டை முடித்து நிறைவைக் கொடுத்திருக்கிறார். இதில் கள்ள காதலில் மாட்டிக் கொண்ட விஜய் சேதுபதியை விட மனைவியாக வரும் அதிதிபாலன் பர்ஃபாமென்ஸ் ஆஹா – சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் ‘எதிர்பாரா முத்தம்’, ‘அவனும் நானும்’, ‘லோகம்’, ‘ஆடல்-பாடல்’ என குட்டி. குட்டி கதைகளை கொண்டு கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் கோர்த்து தந்துள்ள இந்த முழு நீள படம் கோலிவுட் சினிமா கணக்கில் எக்ஸ்ட்ரா ஒரு படம். அவ்வளவே!

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்