“அவள் வருவாளா” என கைகளை குவித்து காதலியை அழைக்க கூட சரியாக வராது தடுமாறினார் சரவணன் எனும் சூர்யா. நேருக்கு நேர் படத்தின் ஒளிப் பதிவாளர் ‘கே.வி ஆனந்த்’ பேட்டியொன்றில் ” சத்தியமாக இந்த பையன் எல்லாம் பணக்கார நடிகர் வீட்டுல பொறந்துட்டு வராத நடிப்பை செய்யறேன்னு வந்துட்டு ஏன் நம் உயிரை வாங்கறானுக…னு தா நினைச்சேன்.” என பேசியிருந்தார். சூர்யாவுடன் ஜோடி போட்ட சிம்ரனுக்கும் கிட்டதட்ட (விஐபி லேட் ரிலீஸ்) அது முதல் படம் தான் எனினும் சிம்ரன் தன்னுடைய பெர்பாமன்சில் வெளுத்து வாங்கியது வேறு சூர்யாவை தியேட்டர்களில் கேலி பொருளாக்கி யிருந்தது. மணிரத்னமின் பேனர், உடன் நடித்த விஜயின் மாஸ், அட்டகாசமான பாடல்கள், வசந்தின் ஜனரஞ்சக இயக்கம் அனைத்துமாக இணைந்து படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டன. சூர்யா தமிழகத்துக்கு அறிமுகமாகினார். சிவக்குமாரின் “உள்ளத்தை அள்ளித்தா ஜெய்கணேஷ்” தனமான மிலிட்டரி வளர்ப்பில் வளர்ந்த பிள்ளை இது என்பது சூர்யாவின் ஆரம்பகால படங்களில் அப்பட்டமாக தெரிந்தது. தோள்களை குறுக்கி மார்பை விரித்த படி தான் நடந்து வருவார். முகம் வடிவாக இருந்தாலும் தோற்ற அளவில் சூர்யாவிற்கும் நகைச்சுவை நடிகர் சத்யனிற்கும் அதிக வித்தியாசங்கள் தெரியாது. காமெடிக்காட்சிகளிலும் காதல் காட்சிகளிலுமே கூட முகத்தில் அந்த இறுக்கம் தெளிவாகவே தெரிந்தது.
97 ல் அறிமுகமான சூர்யாவிற்கு 2001 வரை வந்த படங்களில் பேர் சொல்லும் படியான படங்கள் எனில் பூவெல்லாம் கேட்டு பார் மற்றும் ப்ரெண்ட்ஸ். ஓரளவிற்கு தோற்ற அளவில் தேறியிருந்தார். பெண் ரசிகைகள் கிடைத்திருந்தார்கள். இதில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் உடன் நடித்த ஜோதிகா சூர்யாவிற்கு மிக சிறந்த தோழியாக அமைந்து போனார். அந்த கால இடைவெளியில் ஜோதிகாவுடன் சூர்யா நடித்த உயிரிலே கலந்தது படம் வெளிவந்தது. படம் பெரிய கவனிப்பை பெறவில்லை ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயம் நடந்த சம்பவமொன்று தான் சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை கொண்டு வந்தது.
சூர்யாவின் அது குறித்த பேட்டியை அவரது வார்த்தைகளிலேயே விவரிக்க முயல்கிறேன். ” நாங்கள் சாலக்குடி சென்று ரயிலில் திரும்பி கொண்டிருந்த சமயம். வழக்கம் போல சாப்பிட்டு விட்டு நேரத்திலேயே என்னுடைய பெர்த்தில் ஏறி படுத்து தூங்கியும் விட்டேன். சற்று நேரத்தில் என்னை யாரோ பலமாக உலுப்பினார்கள். திடுக்கிட்டு விழித்து பார்த்தால்..”ரகுவரன் சார்…” நின்று கொண்டிருந்தார். வலது கையில் கோப்பையுடனும் இடது கையில் பத்திரிக்கை ஒன்றுடனும் என்னை வெறித்து பார்த்த படி இருந்தார். நான் தயங்கிய படியே “என்னங்கண்ணா..” என கேட்க.. ” உன்னால எப்டி சரவணா நிம்மதியா தூங்க முடியுது..உங்க அப்பா பேரை எடுத்துட்டா நீ யாரு இங்க.. எத்தனை நாளு உங்க அப்பா நிழல்லயே இங்க சினிமால குப்பை கொட்டலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்க..” என அமைதியாக கேட்டார். என்னிடம் அப்போது அவரது எந்த கேள்விக்குமே பதிலில்லை. அதனால் அழுகை வந்தது. அழ விட்டு விட்டு விலகி போய் அமர்ந்து அவர் பாட்டுக்கு தொடர்ந்து குடிக்க தொடங்கி விட்டார். ஆனால் நிறைய யோசனைகளை தந்து விட்டு சென்றார். அன்று இரவின் மிச்சம் என்னால் தொடர்ந்து தூங்க முடியவில்லை.. என்ன செய்வது… எப்படி வெளிப்படுவது.. என்பதை குறித்த சிந்தனைகள் பலப்பட ஆரம்பித்த நிமிடம் அது தான்..” அன்று தொடங்கிய சூர்யாவின் உழைப்பிற்கு தோழி ஜோதிகாவின் ஆதரவும் கிடைத்திட நேரமும் கூடி வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சேதுவில் விக்ரமின் அண்ணனாக நடித்த சிவக்குமார்.. பாலாவிடம் தன்னுடைய புதல்வரை அறிமுகப்படுத்திட ‘நந்தா’ வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. நந்தா வணிகரீதியாக ஒரு ஆவரேஜ் படம். சூர்யாவின் இறுக்கமான தோற்றம் மற்றும் அவரது குணநலன்களாக ரசிகர்கள் நினைத்தவை அப்படியே திரையில் வந்திருந்த படியால் நந்தாவையும் சூர்யாவின் வழக்கமான படங்களில் ஒன்றாகவே பொதுஜனம் பார்த்தது தான் காரணம். தவிர சேதுவின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பாலாவின் மேல் மக்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கான தீனியை நந்தா வழங்கவில்லை. என்றாலும் லைலாவுடனான காதல் காட்சிகளிலும் ராஜ்கிரணுடனான காட்சிகளிலும் சூர்யா வேறானவராக தெரிந்தார். ரகுவரனுக்கு பிறகு பாலா சூர்யாவின் மற்றுமொரு ஆசானாகி போனார். இதற்கிடையே தான் உழைத்திட தயங்காத ஆள் தான்.. என்பதை தனக்கு தானே நிருபித்து கொள்ளும் முடிவில் கலா மாஸ்டரிடம் நடனமும் கனல் கண்ணனிடம் சண்டை பயிற்சியும் எடுக்க துவங்கி தன்னுடைய மைனஸ்களை களைந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.
நேரம் கூடி வந்தது சூர்யாவிற்கு என்று தான் சொல்ல வேண்டும். தன்னை முழுமையாக உணர்ந்து விட்ட ஒருவன் உழைக்கவும் தொடங்கி விட்ட பிறகு நேரம் அமைந்து தானே ஆகும். ஜோ, பாலா, பாலாவின் நண்பர் அமீர், ஜோவின் நண்பர் கௌதம் மேனன் என ஒன்றிணைந்து சூர்யா என்னும் நட்சத்திரத்தை செதுக்க தொடங்கினார்கள். அமீரின் இயக்கத்தில் வெளிவந்த மௌனம் பேசியதே வில் முதன்முதலாக உடற்மாற்றத்துடன் நடை உடை பாவனைகளில் கவனம் எடுத்தும் அசத்தினார் சூர்யா. காதல் செய்தால் பாவம் பாடலில் குறுந்தாடி, காதில் கடுக்கனுடன் ஆர்ம்ஸ் காட்டிய சூர்யாவை தமிழக ரசிகைகள் கடைக்கண் திறந்து நோக்கினார்கள். அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோவுடன் ஜோடி போட்ட காக்க காக்க சூர்யாவின் குபீர் பாய்ச்சலாக இருந்தது. கௌதம் மேனன் சூர்யாவின் ப்ளஸ்களாக அவரது ரசிகைகள் மத்தியில் பரவியிருந்த “பெண்களை நிமிர்ந்து பார்த்திடாத குட் பாய்..” எனும் குணாதிசயத்தை சரியாக மேட்ச் செய்து அன்புச்செல்வன் கேரக்டரை வடிவமைத்திருந்தார். சூர்யாவும் முதன்முதலாக தன்னுடைய தயக்கங்களை உடைத்து கொண்டு ஜோவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் அப்படி ஒரு இணக்கத்தை காட்டியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜின் ” உயிரின் உயிரே..” பாடலில் ” சுவாசம் இன்றி தவிக்கிறேனே..” எனும் வரிகளை பாடிய படி ஜோவை விரட்டி கொண்டு வந்த சூர்யாவை பார்த்த ரசிகைகள் மூச்சை இழுத்து பிடித்த படி தாங்கள் சுவாசிக்க மறந்தனர். ஆக்ஷனும் அட்டகாசமாக அமைந்து படம் பாக்ஸ் ஆபிசில் பற்றி கொண்டு சூர்யாவின் முதல் மெகா ஹிட்டாக அமைந்தது.
நல்லவை நடக்க துவங்கி நம் எண்ணங்களும் சரியாக அமையும் பட்சத்தில் அவை தொடர்ந்து சூழ்வது இயற்கை தானே. பாலாவின் பள்ளியில் மீண்டும் பாலபாடம். இம்முறை விக்ரமையும் சேர்த்துக் கொண்டு பிதாமகன். முதல் தடவை நந்தாவில் சூர்யாவை சீரியசாகவே காட்டியிருந்த பாலா தன்னால் ஒரு நடிகனை எப்படி வேலை வாங்க முடியும் என்பதை நிருபிக்கும் விதமாக களமாடியிருந்தார். சூர்யாவின் அமைதியான அசல் கேரக்டருக்கு அப்படியே நேரெதிரான கதாபாத்திரமாக வந்து அமைந்தான் பிதாமகன் சக்திவேல். ஒரு ஜாலி திருடன்.. பல வேலைகளையும் பார்த்து பணம் பண்ண தயங்காத பக்கிரி, ஊர்பக்கம் சூட்டிங் வரும் நடிகையை நண்பர்கள் உதவியுடன் கடத்தி வந்து காமெடி டான்ஸ் போட சொல்லி அலும்பு பண்ணுவான். ஆனால் நல்லவன்.என்கிற மாதிரியான பட்டாசான பாத்திர வடிவமைப்பில் முழுக்க முழுக்க இறங்கி அடித்தார் சூர்யா. அந்த சிம்ரனுடன் ஆடும் பாடலில் ” குங்குமப்பூவே” என சந்திரபாபு அபிநயத்தை அழகாக பிடித்து விட்டு மறுகணம் “நான் சக்ரவர்த்தியடா..” என கம்பீர சிவாஜி கணேசனாகவே மாறி நின்ற கணம் மொத்த தமிழ்நாடும் சூர்யா என்னும் நடிகனின் திறமையை இனம் கண்டு கொண்டது. அதே வருடம் மணிரத்னமும் சூர்யாவை தனது படத்தில் நடிக்க அழைக்கும் அளவிற்கு பிதாமகனின் வெற்றி இருந்தது. அடுத்தடுத்து வந்த ஆயுத எழுத்து, பேரழகன், மாயாவி படங்களுக்கு பிறகு முருகதாசுடன் இணைந்தார் சூர்யா.
சூர்யா கொஞ்சம் குள்ளம், இயல்பான நடிகர் இல்லை. உடற்கட்டு இல்லை, நடனம் அவ்வளவு சிறப்பாக வராது என்பன போன்ற அதுவரை சூர்யாவின் மைனஸ்களை ஒரே படத்தில் உடைந்தெறிய உதவினார் முருகதாஸ். உண்மையில் அஜித்குமார் நடிக்கவிருந்த படம். மிரட்டல் என்னும் பெயரில் பூஜை போட்டு போட்டோஷுட் போய் போஸ்டர்கள் ஒட்டியதோடு நின்று போனது. அந்த வெறியில் இருந்த முருகதாஸ் தன்னை நிருபிக்க சூர்யாலை பயன்படுத்தி கொண்டார். அது சூர்யாவிற்கு மிகப்பெரிய பாய்ச்சலாக அமைந்து போனது. ஒரு இளம் தொழிலதிபர் தன்னுடைய அந்தஸ்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத குறும்பான இளம்பெண் ஒருத்தியின் மேல் காதல் கொள்வதாக துவங்கும் கதை. அசின் ஹீரோயின் வேடத்தில் பிளந்து கட்டியிருந்தார். சூர்யா அந்த பணக்கார வேடத்துக்காக செய்திருந்த ஹேர்ஸ்டைல் அவரை தமிழ் இளைஞிகள் மத்தியில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராக நிலைநிறுத்தியது. அதுவும் ” முதன்முதலாக சஞ்சயை மும்பை ஏர்போர்ட்ல தா பாத்தேன்பா..” என சொல்லும் அசினை பார்த்து சிரித்த படியே தலையை அசைத்த படி நடந்து செல்லும் சூர்யாவிற்கு அரவிந்த்சாமி, அஜித், என்னும் அழகு தமிழ் ஹீரோக்கள் வரிசையில் அம்சமாக இடம் கொடுத்தனர் இளம்பெண்கள். டான்ஸிலும் நடிப்பிலும் ஆக்ஷனிலும் சூர்யா பிரமாதமாக வெளிப்பட படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அடுத்து வெளிவந்த சில்லுன்னு ஒரு காதல், அயன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் அழகன் என்றால் சூர்யா தான் அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ள செய்தது. மற்ற தமிழ் ஹீரோக்கள் அதுவரை முயன்றிராத சிக்ஸ்பேக்கை வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா கொண்டு வந்தார். நண்பர் கௌதம் மேனன் சூர்யாவை பெண்கள் எப்படி எல்லாம் பார்க்க காத்திருந்தனரோ அப்படி எல்லாம் நடிக்க வைத்து ரசிகைகளை பித்தம் கொள்ள செய்தார். ஹாரிசின் மறக்க முடியாத பாடல்களின் பலம் சூர்யாவின் வெற்றிக்கு பலனாக அமைந்தது அந்த படங்களில். அயனில் காமெடியிலும் ஒரு கை பார்த்த சூர்யா புதிய வகை ஸ்டண்டுகளை ரிஸ்க் எடுத்து செய்து மற்ற ஹீரோக்களுக்கும் தன்னை நிருபித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி வசூல் நாயகர்கள் வரிசையில் இடம்பிடித்தார்.
ஏற்கனவே ஆறு படத்தில் ஹரியுடன் இணைந்திருந்தாலும் சூர்யாவிற்கு “சாமி” யை போல் ஒரு படம் ஹரியுடன் செய்ய ஆசை. ஹரிக்கும் அஃதே. கிடைத்தது அட்டகாசமான போலீஸ் கதாபாத்திரம். மளிகைக்கடைக்கார தகப்பனாரின் ஆசைக்காக போலீசாகும் கிராமத்து இளைஞன் ஒரு ஜகஜ்ஜால சென்னை கிரிமினலுடன் மோத நேர்ந்தால் நடப்பது என்ன என்பதை அழகான காதலுடன் கரம் மசாலா சேர்த்து செய்த சிங்கம் சூர்யாவை தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது. அதிரடியும் இனிமையுமான டிஎஸ்பியின் இசை , அழகான அனுஷ்காவுடன் கனமான திரைக்கதையும் ஹரியின் பரபர இயக்கமும் சேர சிங்கம் தமிழ்சினிமா ப்ளாக் பஸ்டர்களில் ஒன்றாகி போனது. இப்போது வரை வெளிவந்த மூன்று பாகங்களும் வசூல் மழை கொட்டிய படி தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவிடம் ரசிக்கும் மற்றொரு விஷயம் அவருடைய சமூக ஆர்வம். தன்னுடைய சொந்த பணத்தில் “அகரம்” என்னும் ட்ரஸ்ட் துவங்கி வசதியில்லாத பல்வேறு குழந்தைகள் உயர்படிப்புகளை தொடர சத்தமில்லாமல் உதவி வருகிறார். தந்தை சிவக்குமார் அந்த காலத்தில் பத்து பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு “பணமுடிப்பு” என தொடங்கி வைத்ததன் நீட்சி தான் சூர்யாவின் “அகரம்”.
இயல்பில் பெரிய திறமைகள் இல்லாவிடினும் உழைக்க தயார் என்றால் கட்டுப்பெட்டியாக வளர்ந்த “குட்பாய்” கள் கூட பெரிய அளவில் ஜெயிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய விதத்தில் சூரயா நம்மை மிக கவர்கிறார்….
பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா..❤