டைரக்டராக முதல் இரண்டு படங்களிலேயே அழுத்தமான தடம் பதிச்சு ஹீரோவா நடிக்கத் தொடங்கி முதலில் வெற்றி பிறகு தொடர் தோல்வி ஒரு இடைவெளிக்குப் பிறகு துணை நடிகரா ரீ எண்ட்ரீ . வில்லனாக பதவி உயர்வு. மறுபடிம் நாயகனாக வெற்றிப் படங்கள் என்று ஏற்றம், இறக்கம் மீண்டும் படிப்படியாக முன்னேற்றம் என்று சூர்யாவின் திரைப்பயணம் அவருடைய திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமானது, தன்னுடைய நடிப்புப் பயணம் பற்றிப் பேசும்போது இலக்கை நோக்கிய பயணத்தில் எது கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டுமே தவிர நான் இதைத்தான் செய்வேன் அதைத்தான் செய்வேன் என்று காத்துக்கொண்டிருந்தால் முன்னேறவே முடியாதுன்னு சொன்னார்,
1966இல் அப்போதைய நெல்லை டிஸ்டிரிக்கான வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் பிறந்தவர். அவரது நிஜப் பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்றபோதிலும் அப்பா ஆடியோ கேசட் கடை வைத்து நடத்திவந்துள்ளார். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்து அட்ராக்ட் ஆகி ஸ்கூல் டேஸிலேயே நடிகனாக வேண்டுமென்ற ஆசையை தனக்குள் வளர்த்துக்கிட்டார்.
சென்னை லயோலா கல்லூரியில் தனது டிகிரியை முடிச்ச எஸ் ஜே சூர்யா, சினிமாவில் வலம் வர வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அதுவும் ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தபடியே பல சினிமா இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைஞ்சார். அதன் பின்னர் பாக்கியராஜ், பாரதி ராஜா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்படியே ஒரு சில படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் நடிச்சு வந்துள்ளார்.ஆசை படத்தின் போது எஸ் ஜே சூர்யா சொன்ன ஒரு கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” அப்படீங்கற பெயரில் அந்த படம் கமிட் ஆனபோது இவரிடம் பைக் கூட இல்லை. இதனால் தன் டைரக்டர் நடந்து வரக்கூடாது -ன்னு அஜித் இவருக்கு ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார். வாலி படம் ஹிட் ஆனதும் கார் ஒன்றையும் வாங்கி கொடுத்தார் அஜித்.(கட்டிங் கண்ணையா)
பின்னாளில் ஆசைப்பட்டப்படியே நடிகராகி இப்படி இப்படி இருந்தா…அப்படி அப்படி இருக்கலாம்…அப்படி அப்படி இருந்தா…இப்படி இப்படி இருக்கலாம்…இப்போ….இருக்கா…இப்போ இல்லையா….அப்படினா…இருக்கு…ஆனா…இல்ல… என்று கேட்டு நம் தலையையே தன் அதீத நடிப்பாற்றலால் ஒரு சுற்று சுற்ற விட்டு அசத்துவதில் ஸ்கோர் செய்து விடுகிறார். கோமாளியா புத்திசாலியா…என தெரியாத அளவில் இரண்டுக்கும் இடைப்பட்டவராக நடிச்சு அசத்தி வாரார்.. இவரது படங்கள் பார்ப்பதற்கு என தனி ரசிகர் வட்டாரமே உள்ளது. என்ன ஒன்று டபுள் மீனிங் இவரது படங்களில் தூக்கலாக இருக்கும்.எப்படியோ பல ரசிகர்களை கவர்ந்த, எஸ்.ஜே.சூர்யா 2010-க்குப் பின் பல படங்களில் முத்திரை பதித்திருக்கலாம். ஆனால் டைரக்டரா அவர் 90களிலேயே மெகா வெற்றியை ருசிபார்த்தவர். அஜித், விஜய் மாதிரியான இன்றைய உச்சநட்சத்திரங்களுக்கு, அவர்களின் தொடக்க கால வெற்றியை பதிவு செய்த பெருமை இவருக்குண்டு. போலவே 90களின் இறுதியில் முன்னணியில் இருந்த ஜோதிகா, சிம்ரன் போன்றோருக்கும் எஸ்.ஜே.சூர்யாதான் நல்லதொரு பிரமாண்ட அறிமுகத்தையும் ஸ்க்ரீன் ஸ்பேசையும் கொடுத்தார்.
கோலிவுட்டில் இனி எம்புட்டு டைரக்ட்ர்கள் வேண்டுமானாலும் வரலாம். எத்தினி புதிய முயற்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இந்த எஸ்.ஜே.சூர்யாவின் ”கதை கேட்டுவிட்டு படம் பார்” என்ற ஸ்டைலை தொட அம்புட்டு பேரும் அச்சப்படுவாய்ங்க. ஏனெனில் அதற்கு தன் மீது தன் படைப்பு மீதும் வெறி பிடித்த நம்பிக்கை வேண்டும். ரஜினிக்கு எப்படி ஒரு ஸ்டைலோ, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் போன்றோர்களுக்கு எப்படி ஒரு ஸ்டைலோ அதுபோலதான், கதையை கேட்டுவிட்டு படத்தை பார் என்ற ஸ்டைலும் தனி அடையாளம். ஏனெனில் அது எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்டைல்…
அறிமுகம் ஆன யார், எப்போ மீட் செஞ்சாலும் அன்போடு பேசும் குணமுடையவர்.. “நம் எல்லோருடையை லைப்பிலும் மன அழுத்தம் வரும், போகும். என் வாழ்க்கையிலும் அப்படித்தான். மன அழுத்தத்துல இருந்த காலத்தை இப்போ நினைச்சுப் பார்க்குறப்போ, ‘அழகான சம்பவம் அது’னு தோணுது…’’ என்பார். வாழ்க்கையில் மன அழுத்தத்திலிருந்த அந்த நேரம், அதற்குக் காரணமான சம்பவம், அதிலிருந்து வெளியே வந்தது… எல்லாவற்றையும் ஓப்பனா பகிர்ந்து சியர்ஸ் செல்வார்
அப்படி ஒரு முறை ஷேர் செஞ்ச சேதி இது:
‘` `கிழக்குச் சீமையிலே’ படத்துல பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டென் டைரக்டரா சேரணும்னு ஆசைப்பட்டேன். டெய்லி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிடுவேன். பாரதிராஜா சாரைப் பார்ப்பேன். `ஒருநாள் நாமும் உதவி இயக்குநரா ஆகிடுவோம்’னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா , அப்போ என்னால உதவி இயக்குநரா சேரவே முடியலை. எனக்குப் பக்கத்துல நின்னுட்டு இருந்த ஒருத்தர் வேலைக்குச் சேர்ந்துபுட்டார். அவர் டெய்லி காலையிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளாப் போர்டு அடிச்சிட்டு நிப்பார். எனக்கு அதைப் பார்த்தாலே அழுகையா வரும். உடனே, யாரும் பார்க்காத இடத்துக்குப் போய் ஓரமா நின்னு அழுதுட்டு வருவேன். இப்படித்தான் அந்த நாள்கள் இருந்தன. அப்படி அசிஸ்டென்ட் வாய்ப்பு கிடைக்கலையே தவிர, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வாய்ப்பு கிடைச்சது. ‘கிழக்குச் சீமையிலே’ படத்துல ஒரு சீன்ல தலைகாட்டியிருப்பேன். ஒரு நாள் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா வேலை பார்த்திருந்தாலும், மற்ற நாள்கள்லயும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தவறாம போய் நின்னுருவேன். என் கவனமெல்லாம் பாரதிராஜா சார் மேலயேதான் இருக்கும். அவரும், கேமராமேன் கண்ணன் சாரும் இன்னாப் பேசிக்குறாங்கனு கேட்டுட்டிருப்பேன். அப்படித்தான் டைரக்ஷன் கத்துக்கிட்டேன். அமெரிக்காவுக்குப் போய் சினிமா பற்றிப் படிச்சாக்கூட இந்த விஷயங்களையெல்லாம் கத்துக்க முடியுமா என்ன?. ஆண்டவன் அப்போவே எனக்குப் பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்கான். அது நல்லதுக்குனு தெரியாம நான்தான் அழுதிருக்கேன், மன அழுத்தத்தில் தவிச்சிருக்கேன். அன்னிக்கு என் அழுகைக்கும் மன அழுத்தத்துக்கும் காரணமாக இருந்த அதே விஷயத்தை இன்னிக்கு நினைச்சுப் பார்க்குறப்போ அற்புதமான விஷயமா தோணுது. என் வாழ்க்கையில நடந்த எல்லாமே நன்மைக்காகத்தான்னு தோணுது. வாழ்க்கையில் எப்போதும் மன அழுத்தம், கஷ்டம் வர்றப்போ, ‘ஐயோ… எனக்கு ஏன் இப்படி ஆகணும்’னு புலம்பப்படாது. அதுக்குள்ள ஏதோ ஒரு நல்லது இருக்கும். அதைத் தேடிப் பிடிச்சிக்கலாம்னு நினைக்கணும். கஷ்டத்தை மறந்துட்டு, சந்தோஷத்தை அனுபவிக்கணும்னு நினைக்குறது முடியாத விஷயம்தான். ஆனா, கஷ்டத்துல இருந்துதான் சந்தோஷம் கிடைக்கும்.’’ அப்படீன்னவருக்கு இன்னிக்கு சினிமா பிரஸ் கிளப் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி🌹🤝🥰