கடந்த 1996இல் காலமான இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள். ரசிக்கும்போழுது அந்தப் பாடல்கள் வேறு ஒரு இசையமைப்பாளருடயது என்ற நினைவுடனேயே ரசித்திருப்பார்கள்., இதற்கு நானும் விதி விலக்கல்ல.. பிறகு நான் நினைத்த இசையமைப்பாளரின் இசையில் அமைந்த பாடல் இது இல்லை, இது வேறு ஒருவர் என்று அறியும் போது ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.பெரும்பாலும் இவ்வாறு நான் MSV , இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்த பல பாடல்களுக்கு இசை அமைத்திருந்தவர் வி. குமார்.
மெல்லிசை மன்னர்கள் பிரிந்து அவர்களில் எம்.எஸ்.வி. உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் அறிமுகமான ஏனைய இசையமைப்பாளர்களில் வி.குமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் மெலடிப்பாடல்கள் எம்.எஸ்.வியின் பாணியிலிருந்து வித்தியாசமாக இருந்தன. உன்னிடம் மயங்குகின்றேன், என்ற ஜேசுதாசின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்கும் பாடலை உருவாக்கியவர் இவர்தான். ஆனால் வி.குமார் தமிழ்ச் சமூகத்தால் பெரிதும் கொண்டாடப்படாதவர்.
இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்தி வந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.மாநில கணக்காயர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனந்த சயனம் என்ற நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.
நீர்க்குமிழி நாடகத்தைப் படமாக்க, அதன் கதையை கே.பாலசந்தரிடமிருந்து ஏ.கே.வேலன் வாங்கியிருந்தார். கதையைப் பற்றி விவாதிக்க, பாலசந்தர் வேலனைச் சந்திக்கப் போவார். அவருடன் இவரும் அடிக்கடி உடன் செல்வார். திடீரென்று ஒரு நாள் பேச்சுவாக்கில் திரு.ஏ.கே.வேலன், இந்தப் படத்திற்குக் குமாரையே இசை அமைக்கச் சொன்னால் என்ன என்று கேட்டார். ’நீர்க்குமிழி’ நாடகத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். இதைக் கவனத்தில் கொண்டுதான் வேலன் பாலசந்தரிடம் கேட்டார். ‘பாலசந்தர் அப்படியே செய்யலாம் என்றார்’. அவ்வாறு நீர்க்குமிழி இவருக்கு முதல் படமானது.
‘”நீர்க்குமிழி”யில் மூன்றே பாடல்கள்தான். மூன்றுமே வெவ்வேறு விதங்களில் நன்றாக அமைந்துவிட்டன. முதலிடம் பெற்றது ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’; ’கன்னி நதியோரம் வண்ண விழிமேடை’ என்ற ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய பாடல் இளமைத் துள்ளலுடன் வரும் காதல் பாடல். மேற்கத்திய பாணியைச் சேர்ந்த மெட்டு. ‘நீரில் நீந்திடும் மீனினமே’ என்ற பெண்மையின் கண்ணியமான குரலாக ஒலிக்கும் சுசீலாவின் பாடல்.வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார் என்பது விஷேட அம்சம்.இப்பாடலை இப்போதும் அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பி வருகிறது.
தமிழ் சினிமாவில் சுமார் 150 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் வி.குமார். நடிகர் சிவாஜி கணேசனின் `நிறைகுடம்’ திரைப்படத்திற்கும் இவரே இசையமைப்பாளர். இந்தத் திரைப்படம் மட்டுமே வி.குமாரும், சிவாஜி கணேசனும் இணைந்த ஒரே திரைப்படம் ஆகும். பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி முதலானோருடன் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் வி.குமார்.
இவர் இசையமைத்த பிரபல பாடலான `காதோடு தான் நான் பாடுவேன்’ பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது. சத்தமாக, ரகளையான பாடல்களைப் பாடி பிரபலமான எல்.ஆர்.ஈஸ்வரியை மெல்லிசைப் பாடலைப் பாட வைத்த வி.குமார், மென்மையான குரலின் அனைவரையும் கவர்ந்த பி.சுசிலாவை `நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்’ என்ற பாடலைப் பாட வைத்தார். மறைந்த மூத்த நடிகை மனோரமா பாடிய `வா வாத்தியாரே வூட்டாண்டே’ பாடலும் வி.குமார் இசையமைத்து இன்றும் மிகவும் விரும்பி கேட்கப்படும் பாடல். 1977ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் வி.குமாருக்குத் தமிழக அரசால் `கலைமாமணி விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இவருக்கு `மெல்லிசை மாமணி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் பழைய சஞ்சிகையொன்றில் ஒரு பேட்டி படித்த நினைவு. . அது வி.குமாரின் மனைவி திருமதி.சொர்ணாவினுடையது. இவரும் ஒரு பாடகியாக அறிமுகமாகி வி,குமாருடன் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தவுடன் பாடுவதை நிறுத்தியவர் .அந்தக் கட்டுரையில் சொர்ணாவும் அவரது மகனும் தமிழ்த் திரையுலகை மிகவும் வெறுப்பது அப்பட்டமாக் தெரிந்தது. அமெரிக்காவில் செட்டிலாக முயற்சிக்கும் மகனுடன் எப்படியாவது போய்த் தங்கி விட வேண்டும் என அந்தத் தாய் ஆதங்கப்பட்டிருந்தார். (விருப்பட்டது போலவே usa-யில் செட்டிலானார்) அந்த வெறுப்புக்கான காரணம் வி.குமார் என்ற இசையமைப்பாளரின் இறுதிக் காலத்தில் அவருக்கு சினிமா உலகம் இழைத்த அநீதியெனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்து பல நடிகர்களை உயர்த்தி விட்ட இந்தக் கலைஞன் தனக்குக் கிடைத்த ஏமாற்றத்தாலோ என்னமோ 80 களில் ஒருநாள் திடீரென வந்த மாரடைப்பால் தனது குடும்பத்தை தவிக்க விட்டு இறந்து போனார்.விருதுகளையும், பட்டங்களையும் கடந்து, தற்போதைய தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் கொண்டாடப்படாத இசையமைப்பாளர் வி.குமார். அவரது நினைவு நாளான இன்றும், அவரது பாடல்கள் தமிழ்நாட்டில் எங்கேனும் ஒரு மூலையில் யாரையோ மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. அதுவே அவருக்குத் தமிழ்ச் சமூகம் செய்யும் அஞ்சலி.
இத்தனைக்கும் எம்.எஸ்.வி. கோலோச்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில் பாலசந்தரால் “நீர்க்குமிழி” படத்தில் அறிமுகமாகி அவரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருந்தவர், நீர்க்குமிழியில் சீர்காழி நாகேஸுக்காகப் பாடும் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற பாடல் இன்றும் ஒலித்தபடியேதான் இருக்கின்றது. பி.பி.ஸ்ரீவாஸின் “தாமரைக் கன்னங்கள்.. தேன் மழைக் கிண்ணங்கள்…” என்ற அதி அற்புதமான பாடலும் வி.குமாரின் இசையில் வெளி வந்ததுதான்.