மாதவன் உடைய ராக்கெட்ரி சரியாக ஏவப்பட்டதா?

‘ராக்கெட்ரி’ திரைப்படத்தையை மாதவன் எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, கடினமாகவும், பல தடைகளை தகர்ந்தெரிந்தும் ஓடிகொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானியை பொய் வழக்கு போட்டு, அவரது வாழ்கையையே முடிக்கிறார்கள். விண்வெளியில் தன் சாதனைகளை புரிய வேண்டிய அவர் தன் மீது உள்ள கலங்கத்தை துடைக்க ஓட வேண்டியுள்ளது அவர் மேல் இருக்கும் கலங்கத்தை அவர் துடைத்தாரா, இந்தியாவின் விண்வெளி கனவு என்ன ஆனது என்பது தான் கதை.

முதலில் நம்பி நாராயணன் போன்ற விஞ்ஞானி பட்ட கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி எடுத்த மாதவனை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு உண்மை கதை என்பதாலும், நம்பி நாராயணன் போன்ற திறமைசாலிகள் நசுக்கப்பட்ட கதை என்பது மட்டும் தானா இந்த படம் சிறப்பாக அமைய காரணம் என்றால் அதையும் தாண்டி மாதவன் ஸ்கோர் செய்துள்ளார்.

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் உண்மைக்கதை என்பதை தாண்டி இந்த படத்தை பார்த்தாலும், இந்த படம் பாராட்டுகளை பெறக்கூடிய ஒரு படம் தான்.

உண்மைகதை என்பதால், பல சுவாரஷ்யமான தருணங்கள், முக்கியமான நிகழ்வுகள் நிறைந்து கிடக்கும். ஆனால் அதை எங்கு எப்படி கோர்க்க வேண்டும் என்பதே ஒரு சிறந்த திரைக்கதையாக மாறும். அந்த வகையில் திரைப்படத்தை ஒரு தனிமனிதனின் கதையாக கொண்டு செல்லாமல், இந்தியா ராக்கெட் சையின்ஸ்-ல் செய்ய போகும் சாதனை என்ன என்று பாருங்கள் என படம் ஆரம்பித்து, ஒரு விஞ்ஞானியை தவறாக சித்தரித்தால், இந்தியாவின் எதிர்காலமே என்ன ஆனது என தெரிந்து கொள்ளுங்கள் என திரைக்கதையை முடித்த விதம் நிச்சயம் சிறப்பான ஒன்று தான்.

இந்த கதையை இந்த பார்வையில் எழுத்தாளர் அணுகியதே, பார்வையாளர்களுக்கு சிறந்த திரைப்படத்தை கொடுப்பதற்கான முதல் வழி தான். கடினமான தொழில்நுட்ப வார்த்தைகளை எவ்வளவு எளிமையாக கடத்த முடியும் என அவர் முடிவெடுத்து அமைத்த காட்சிகளும், நறுக்கென அவர் அமைத்த பல முக்கியமான வசனங்களும், அவரது எழுத்து திறமையை பாராட்ட வைக்கிறது. ஒரு திரைக்கதை எழுத்தாளராக மாதவன் வெற்றி பெற்றுவிட்டார்.

அடுத்து எடுத்த காட்சிகளை, தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்களிடம் இருந்து நடிப்பு வாங்கிய விதத்திலும், லைவ் சவுண்ட் என்ற திரைப்பட அனுபவத்தை வழங்கியதன் மூலமாகவும் அவர் சிறந்த இயக்குனர் என்பதையும் நிரூபித்துவிட்டார். கடினமான திரைக்கதையும், எந்த இடத்தில் ஒரு காட்சி முடிய வேண்டும் என்பதிலும் மாதவன் உடைய முடிவுகளும், ஐடியாக்களும் சிறப்பாகவே இருக்கிறது.


அடுத்ததாக ஒரு நடிகராக மாதவன் பல படங்களில் தன் திறமைகளை காட்டியிருந்தாலும், இந்த படத்தில் ஒரு இளைஞரில் இருந்து முதியவராகும் திரைக்கதை அமைப்பில், ஒரு நடிகராக சபாஷ் வாங்கி இருக்கிறார். இளைஞனின் வேகம், விஞ்ஞானியின் கோபம், மனைவியிடம் பேசும் காட்சிகள் என உண்மை தருணங்களை பார்வையாளர்கள் உணரும் விதத்தில் அவரது நடிப்பு இருக்கிறது. ஒரு நடிகராகவும் மாதவன் இந்த படத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.

மொத்தத்தில் ஒரு சிறந்த திரைப்படத்தையும், ஒரு நல்ல அனுபவத்தையும், ஒரு முக்கியமான வரலாற்றையும் மாதவன் கொடுத்துள்ளார்.

பார்வையாளர்கள் படத்தை பார்த்து அவரை தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வைக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய முக்கியமான இந்தியப்பட இந்த ராக்கெட்டரி.