முன்னொரு காலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள். மனதை லேசாக்கும் இசை, லேசாகவும் எளிமையாகவும் கிடைக்க, அதில் கிறுகிறுத்துப் போனான் ரசிகன். ரசிக மனங்களுக்கும் சினிமா இசைக்கும் ஓர் உறவு அங்கே பூத்தது. அப்படி உறவைப் பூக்கச் செய்தவரையே உறவாய்க் கொள்ளத் தொடங்கினார்கள் மக்கள். அவர்… எம்.எஸ்.வி. என்று எல்லோராலும் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இசைக்கு தலையாட்டலாம். ஆனால் அந்த உணர்வை முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ளமுடியாது என்பதாகவே திரையிசையும் அந்தக் காலத்தில் இருந்தது. எப்பேர்ப்பட்ட பாட்டாக இருந்தாலும் அதில், கர்நாடக சங்கீதத்தின் சாரமும் தாக்கமும் நிறைந்திருக்க, பாட்டைக் கேட்டு ரசித்தார்களே தவிர, அதை ராகம் பிசகாமல் சேர்ந்து பாடமுடியாத நிலைதான் இருந்தது. பிறகு அதை உடைத்து, எல்லோருக்குமான இசையாக மாறியதுதான் தமிழ் சினிமா இசையின் ஆரம்பம். அந்த இசைக்குச் சொந்தக்காரர்கள்… விஸ்வநாதன் – ராமமூர்த்தி. பிறகு இருவரும் தனித்தனியே இசையமைத்தார்கள். இதில் எம்.எஸ்.வி. தன் இசையால், திறனால், தனி ராஜாங்கமே நிகழ்த்தினார்..
எம்.எஸ்.விஸ்வநாதன். மனயங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன். கேரளாதான் பூர்வீகம். சிறுவயதில் அப்பாவைப் பறிகொடுத்தவருக்கு இறையருள் தந்த வரம் இசை ஆர்வம். முறைப்படி சங்கீதம் பயின்றார். எல்லோரும்தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இயல்பாகவே இருக்கிற ஆர்வமும் ஞானமும் ஈடுபாடும்தான் அவர்களை மிகப்பெரிய கலைஞர்களாக்கும். எம்.எஸ்.வி.க்கும் இந்த மூன்றும் இருந்தது. இசை மேதை சி.ஆர்.சுப்பராமன் குழுவில் ஆர்மோனியம் வாசிக்கும் பணியில் ஈடுபட்டார் எம்.எஸ்.வி. திடீரென சுப்பராமன் மறைந்தார். அவர் ஒப்புக்கொண்ட படங்களை விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசையமைத்துக் கொடுத்தார்கள். பிறகு சேர்ந்து இசையமப்பது என முடிவு செய்தார்கள். இரட்டைஇசை அமைப்பாளர்களானார்கள். பாடல்களை, எல்லோருக்குமான பாடல்களாக்கினார்கள். பாடலைக் கேட்டு, பரவசமானார்கள் ரசிகர்கள். திரும்பத் திரும்ப முணுமுணுத்தார்கள். பாட்டும் இசையும் மனனமாயிற்று. கூடவே அந்த இசையைத் தந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியைக் கொண்டாடினார்கள். மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டார்கள்.
ஒரு கட்டத்தில், இருவரும் தனித்தனியே இசையமைக்கத் தொடங்கினார்கள். சிவாஜியின் ‘பணம்’ படத்தில் சேர்ந்து இசையமைக்கத் தொடங்கியவர்கள், எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்துடன் சேர்ந்து பணியாற்றுவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனாலும் எம்.எஸ்.வி. ராஜ்ஜியம் ஆட்டம் கண்டுவிடவில்லை. இன்னும் ஒளிர்ந்தார்; உயர்ந்தார்..பாடல்களில் ஏதேனும் நகாசு பண்ணுவது எம்.எஸ்.வி. ஸ்டைல்; பாணி. ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில், ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ’ பாட்டில், ‘அ ஆ இ ஈ’ சொல்லித்தருவது போல் பாடல் அமைந்திருக்கும். அதில் ஒரு வயலினை இழையவிட்டிருப்பார். அமர்க்களம் அது.‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாட்டிலும் ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ பாட்டிலும் மங்கலகரமான இசையைத் தவழவிட்டிருப்பார். டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி. ‘பொன்னொன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’ ஆகச்சிறந்த உதாரணம். ‘பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று…’ என்ற பாடல் துள்ளவைத்துவிடும். தாழையாம்பூமுடிச்சு’ பாட்டுக்கு முன்னே ஒரு ஹம்மிங். ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ பாட்டுக்கு முன்னதாக, ஒரு ஹம்மிங். ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ பாடலின் இடையே ஓர் ஹம்மிங். ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?’ பாடலை டி.எம்.எஸ். பாட, நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார். அது நம்மை கட்டிப்போட்டுவிடும். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்றொரு பாடல். அந்த ஹம்மிங், உயிரைக் கரைத்துவிடும். ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடலின் ‘ம்ம்.. ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்’என்றொரு ஹம்மிங்கில் ஜிம்மிக்ஸ் செய்யும் ஜாலம் மெல்லிசை மன்னருக்கே உரித்தானது. ’வாராதிருப்பானோ…’, ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’, ‘துள்ளுவதோ இளமை’, ‘என்ன பார்வை உந்தன் பார்வை’, ‘ரோஜாமலரே ராஜகுமாரி…’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘கேள்வியின் நாயகனே’, ‘வான் நிலா நிலா அல்ல…’, ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல…’, ’அவளுக்கென்ன அழகிய முகம்…’ என்று எத்தனை பாடல்கள்; எவ்வளவு வெரைட்டிகள்!
கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள். கண்ணதாசனைக் கொஞ்சுவார் எம்.எஸ்.வி. கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார். இருவருக்கும் அப்படியொரு பந்தம். இந்தக் கால பாஷையில்… கெமிஸ்ட்ரி! எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டு, ‘முத்துக்களோ கண்கள்’ என்பார். ஏகப்பட்ட கருவிகளையும் மெட்டுகளையும் இணைத்து, ‘ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசைகொண்டான்’ என்று மிரட்டுவார். அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்.
‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார்
.கர்நாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரின் முடிவில் 1965ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடியவர்.
நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன். இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்..
மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
தமிழ் சினிமா உலகில், இசையில் தனித்துவத்துடன் பீடுநடை போட்ட மெல்லிசை மன்னர், சகாப்தம். இன்னும் பல நூற்றாண்டுகளின் சாதனை. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு நாள் இன்று (14.7.2015). அவரைப் போற்றுவோம். சாகாவரம் பெற்ற அவர் பாடல்கள், நமக்கெல்லாம் வரம். வரம் தந்த எம்.எஸ்.வி.யின்… வரமாகவே வந்த எம்.எஸ்.வி.யின் பாடல்களைக் கேட்டு அகம் மகிழ்வோம்!