இயக்குநர் சுசீந்தரனின் ஜீனியஸ் விமர்சனத்துக்குள் போகும் முன் கொஞ்சம் நிஜமான புள்ளி விபரத்துடன் கூடிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். நவீன மயமாகி விட்ட சமூகத்தில் வளரும் நம் குழந்தைகளில் பலருக்கும் மன அழுத்தம் என்னும் எளிதில் கண்டுணர முடியாத, உடனடியாக தீர்க்க முடியாத நோய் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஸ்டெரெஸ் அல்லது டிப்ரெஷன் எனப்படும் மன அழுத்தம் ஏற்பட சில பல சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபு வழிப் பிரச்சினைகள் என ஏதேதோ காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட முதன்மை யானது இங்குள்ள கல்வி சார்ந்த பிரச்சினைகள்தான் .அதாவது நம் குழந்தைகளுக்கான கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும், விளையாட்டுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுகாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சி கட்டிலில் அமர்வோரின் அலட்சிய போக்கால கல்வி வணிக மயமாக்கப் பட்டதன் விளைவால் மாணவர்கள் இன்றளவும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாகவே ஆக்கப்பட்டனர்.
அவர்களின் வயதுக்குரிய இயல்புகளை அனுபவிக்க விடாமல் எந்த நேரமும் படிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவது தான் மாணவர்களிடையே மிக அதிகமாக மன அழுத்தத்தை ஏற்ப் படுத்துகிறது. ”காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா” என்று பாரதியார் பாடினார். ஆனால், இப்போது அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை விளையாட்டுக்கே நேரம் ஒதுக்குவதே இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் செல்போனில் முழ்கி விடும் போக்கே அதிகரித்துள்ள தால் அறிவையும், தெளிவையும் ஏற்படுத்த வேண்டிய கல்வி முறை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி மன நிலை பாதிக்கும் மாணவர்களும், தற்கொலை கூட செய்து கொள்ளும் ஸ்டூடண்டும் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் கூட கண்டறியப்பட்டுள்ளது.
ஆம்.. நம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களின்படி மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தம் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதை யாரும் உணர்ந்து திருத்துவதற்கான முயற்சியை எடுக்க வில்லை. அந்தக் குறையை போக்கவே வந்துள்ளது ‘ ஜீனியஸ்’
படத்தின் கதை என்னவென்றால் மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்த ஆடுகளம் நரேன் தன் மகன் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு கொஞ்சம் சலிப்போடு போகிறார். போன இடத்தில் இந்த பொடியன் அடுத்தடுத்து பல போட்டி மற்றும் தேர்வில் முதலிடம் பெற்று எக்கச்சக்கமான கப்-புகளை வாங்கியதைக் கண்டு பிரமிப்புக்குள்ளாகிறார். கூடவே அவரை மேடைக்கு அழைத்து சபாஷ் சொன்னதில் நெகிழ்ந்து போய் எடுக்கும் முடிவுதான் தப்பாகி விடுகிறது. அதாவது தன் தயவு இல்லாமலே இம்புட்டு நல்லா படிக்கும் மகனை தன் இஷ்டத்துக்கு பக்காவாக ஒரு சார்ட் போட்டு பல்வேறு ட்யூஷன், கோச்சிங் என்று போட்டு அவனை மேலே சொன்ன மார்க் வாங்கும் மெஷினாகவே மாற்ரி விடுகிறார். அதற்கு ஏற்றார் போல் வளரும் மகன் ரோஷன் பின்னளில் ஐ டி கம்பெனியில் பணி புரியும் போது ஏற்படும் ஸ்டெரெஸ்தான் கதையின் திருப்பமாகி போய் விடுகிறது. அதாவது இந்த ஆரம்பக் கால படிப்பும், பின்னால் வந்த ஐ டி வேலையும் அவனை மனச் சிதைவுக்குள்ளாக்கி விடுகிறது. இதை அடுத்து நடக்கும் சில சம்பவங்களே ஜீனியஸ் சினிமா.
எடுத்துக் கொண்ட விஷயத்தை சொல்ல பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுத்து , சரியான காட்சிகளை கோர்த்து, மிகச் சரியான வசனங்களை வழங்கி சபாஷ் பட்டம் வாங்கிறார் யதார்த்த இயக்குநர் சுசீந்தரன். ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் தம்பதி அம்புட்டு ஃப்ர்பெக்டா மிடில் கிளாஸ் பேமிலி ரியாக்ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜூனியர் ரோஷனாக வரும் ஆதித்யா மற்றும் யங் பாய்(?) ரோஷனான யோகேஷ் இருவரும் நம்ம வீட்டு அல்லது பக்கத்து வீட்டு பையனை அப்படியே உரித்து வைத்தது போல் நடிப்பை வழங்கி அசத்தி இருக்கிறார்கள். அதே போல் பள்ளி தோழி கேரக்ட்ரும், தாத்தா ரோலும் ரொம்ப நீட், ஷார்ட் & ஸ்வீட்.
ஆனால் மனச் சிதைவுக்கு ஆளான பையனை குணமாக்க கையாளும் வழிதான் கொஞ்சம் முகத்தை சுளிக்க வைக்கிறது என்றாலும் அதை விரசமில்லாமல் காட்சிப் படுத்தி ‘நல்ல ட்ரீட்மெண்ட்’தான் என்று ரசிகர்களை ஒப்புக் கொள்ள வைத்து விடுகிறார்கள். நாயகி ரோலில் வரும் பிரியா லாலின் மிகப் பெரிய கண்களே தனிக் கவனம் பெறுகிறது. சிங்கம்புலி ரோல் பொருத்தமாக அமைந்து ரசிக்க வைத்து விட்டது. யுவன்சங்கர் ராஜா இசையில் நான்கு பாடல்கள் … ‘சிலுசிலு சில் தூறல் போடுதே…’, ‘சிலுசிலு சில் காத்து வீசுதே…’ இரண்டும் படத்தில் சீனரிகளோடு பார்க்கும் போது ரசிக்க தோன்றியது. ஆனால் தியேட்டரை விட்டு வெளியேறும் போது ஹம்மிங் நினைவுக்குக் கூட வரவில்லை.
மிகக் குறைந்த – அதாவது ஜஸ்ட் ஒன்னே முக்கால் மணி நேரம் தான் இந்த ஜீனியஸ். அவ்வளவு குறைந்த கால அவகாசத்தில் மேலே சொன்ன கல்வித் திணிப்பு சமாச்சாரத்தால் விளையும் போக்கைச் சொல்ல சில நாடகத்தனமான காட்சிகளை கொண்டிருக்கிறதான். ஆனாலும் இன்றைய பெற்றோருக்கான ஒரு பாடத்தை சொல்லி இருக்கும் சுசீந்தரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மார்க் 3 / 5
நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்