ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

பேட்டைக்காளி

இயக்கம் – ராஜ்குமார்
நடிப்பு – கலையரசன், லீலா

அண்ணனுக்கு ஜே மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பேட்டைக்காளி எடுத்திருக்கிறார்.
ஒரு படமாக வந்திருக்க வேண்டியது கதையின் டீடெயில்களால் வெப் சீரிஸாக மாறியிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு அதன் பின்னணி அதிலுள்ள வன்மம் அன்பு நடைமுறை பழக்க வழக்கம் இதெல்லாம் இணைந்தது தான் இந்த சீரிஸ்.

பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது கதை. நிலம் கேட்ட கூலிப்பணியாளர்களை விரட்டியடிக்கும் பண்ணையாரின் பகை, தலைமுறைகளாக தொடர்கிறது. நிலமின்றி, பணியின்றி அகதிகளாக தனித்து வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.

 

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், கவுரவம், ஆதிக்கம் என மூதாதையர் பாணியில் வாழ்வியலை தொடர்ந்து கொண்டிருக்கிறார் மணியக்காரரான வேல.ராமமூர்த்தி. தன் வீட்டு காளையில் கூட தனது கவுரவம் இருப்பதாக எண்ணும் அவர், தன் மூதாதையரால் விரட்டப்பட்ட விவசாய கூலிகளை இன்னும் அந்த கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்.

இதற்கிடையில், விவசாய கூலிகளின் தலைவனாக இருக்கும் கிஷோரின் அக்கா மகனாக வரும் கலையரசன், சிறந்த மாடுபிடி வீரராக இருக்கிறார். மாடு பிடிப்பதும், கபடி விளையாடுவதுமே அவரது முழு நேரத்தொழிலாக உள்ளது. இந்த நேரத்தில் அஞ்சு நாடு மஞ்சுவிரட்டு அறிவிக்கப்படுகிறது. விவசாய கூலிகள் வசிக்கும் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும், மணியக்காரரின் காளையை தொடவோ, அடக்கவோ கூடாது என தண்டோரா இசைக்கப்படுகிறது. அதை அந்த ஊர் காரர்களும் ஏற்கிறார்கள். ஆனால், ஊர் பெரியவர்களின் எச்சரிக்கையை மீறி, எப்படியாவது மணியக்காரர் காளையை அடக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார் கலையரசன்.

 

வழக்கமான மாடு பிடித்தால் பெண் கிடைக்கும் எனும் கதையில் ஜாதி பின்னணி கலாச்சாரம், ஜல்லிக்கட்டு பண்ணையார் என நம் கிராமத்து முகங்களை பேசுகிறது இந்த தொடர் கதை முழுக்க மதுரை மற்றும் மாடுபிடி மனிதர்களின் வாழ்வை நான் லீனியரில் சொல்கிறது.

ஒரிஜினல் ஜல்லிக்கட்டை எடுத்து இருக்கிறார்கள். இதுவரை இந்த அளவுக்கு எந்த தமிழ்ப்படத்திலும் இது காட்சிப்படுத்தியதில்லை எனவே பார்க்க அது அருமையாக இருக்கிறது.
மாடு பிடிப்பது தமிழர் கலாச்சாரம் , வீரம் என்பதைத்தாண்டி அதற்குள் நுழைந்து சில உண்மையான விசயங்களை காட்சிப்படுத்தியிருப்பது அழகு

படத்தின் கதை மிகப்பெரியது ஆனால் அதை குறைந்த பட்ஜெட்டிற்குள் சொல்ல முயற்சித்திருப்பது உறுத்திக்கொண்டே இருக்கிறது.

வேல.ராமமூர்த்தி , கிஷோருக்கு ஈடு கொடுக்க. கலையரசன் நன்றாக நடித்துள்ளார்கள் ஆனால் மற்றவர்களிடம் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருக்கிறது

ஒளிப்பதிவு இசை எல்லாம் தரமானதாக இருக்கிறது இன்னும் கொஞ்சம் பட்ஜெட்டும் நல்ல நடிகர்களும் அமைந்திருந்தால் ஒரு அட்டகாசமான சீரிஸாக அமைந்திருக்கும்