ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்னியோட 24 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இப்படம் வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதைக் காணலாம்.

எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை குழப்பமில்லாத திரைக்கதையில் கொண்டுவந்ததன் மூலம் ஒரு திரைக்கதை ஆசிரியராகவும் கமல் தன்னை நிரூபித்திருப்பார். ஹே ராம் படம் இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடிப்பது போல் அமைந்திருப்பதாக சிலர் குற்றம் சாட்டினாலும் இந்தியப் பிரிவிணையை ஹே ராம் போல எந்த படமும் காட்சிப்படுத்தியதில்லை என்பதால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஹேராம் படத்தை தலைநிமிர்ந்து பார்க்கிறது. வெளியான காலகட்டத்தில் யாருக்கும் புரியாமல் தோல்வியைத் தழுவிய ஹேராம் திரைப்படம், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு இந்த படத்தில் கையாளப்பட்டுள்ள நுட்பங்களாலேயே சினிமா பாடமாக பார்க்கப்படுகிறது என்பதே நிஜம்.

முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை’ என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்’ டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று வரை, மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தை, திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரே இந்தியத் திரைப்படம் `ஹே ராம்’ மட்டுமே.

கமலின் பல படங்கள் ‘காலத்தால் முந்தியிருப்பவை’ என்று கூறப்படுவதுண்டு. இந்தக் கூற்று அவருடைய மற்ற படங்களுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ ‘ஹே ராமு’க்குக் கண்டிப்பாகப் பொருந்தும். இருபது ஆண்டுகளுக்கு முன், தமிழ்ச் சமூகம், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய வன்முறையை வெறும் செய்திகளாக வும் வரலாற்றுப் பாடங்களிலும் மட்டுமே அறிந்திருந்தது. பொதுவாக, மதவாத வன்முறையும் தமிழ் மண் ணுக்கு அந்நியமானதாக இருந்தது. “கோட்ஸே இந்தியனா சார். பேர வெச்சி அவர் வெளிநாட்டுக்காரர்னு நெனச்சிக் கிட்டுருந்தேன்” என்று படத்தில் பணியாற்றிய ஒரு இளைஞர் கமலிடம் கூறினாராம். மதவாத அரசியலின் கொடிய விளைவுகள் குறித்து எச்சரிப்பதற்காகவே வரலாற்றின் துணைகொண்டு இந்தப் படத்தை எடுத்ததாக கமல் கூறினார்.

கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஆடை வடிவமைப்பு செய்ய, ஸ்ருதிஹாசன் தன் அம்மாவுக்கு உதவியாளராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணிபுரிய, அக்‌ஷரா ஹாசனும் கலை இயக்குநர் சாபு சிரில்க்கு உதவியாளராக வேலை செய்தார். சரிகா, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதும் வென்றார். இப்படி மொத்தக் குடும்பமும் `ஹே ராம்’ படத்துக்காக உழைத்திருந்தது.

ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவானது `ஹே ராம்.’ ஷாருக்கான் தொடங்கி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், சம்பளம் ஏதும் பெறாமல் நடித்துக்கொடுத்தார். ஶ்ரீராம் அப்யன்கராக நடிக்க பிரபல இந்தி நடிகர் மோகன் கோகலேதான் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் படப்பிடிப்புகாக சென்னை வந்த இடத்தில் மாரடைப்பால் மறைய, அதுல் குல்கர்னி ஒப்பந்தமானார். அவரே குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதும் வென்றார்.

இன்று இந்தியாவின் பல பகுதிகளில் மதத்தின் பெயரால் வன்முறையும் கொலைகளும் நடக்கின்றன. இஸ்லாமியர் களுக்கென்று தனி நாடாக பாகிஸ்தான் பிரிந்து சென்றாலும் “நாங்கள் இங்கேதான் இருப்போம்” என்றும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் தாய் மண்ணைப் பிரியமாட்டோம் என்றும் இங்கேயே தங்கிய இஸ்லாமியர் களின் வழித்தோன்றல்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கி றார்கள். கோட்ஸேவை நாட்டுப் பற்றாளராகவும் தியாகியாகவும் கொண்டாடுபவர் கள் அதைப் பெருமிதத்துடன் பொதுவெளியில் பதிவு செய்கிறார்கள். உண்மையின் துணைகொண்டு ‘ஹே ராம்’ காட்சிப் படுத்திய சாகேத் ராமின் கற்பனை கலந்த வரலாறு, வேறு வடிவத்தில் இங்கே அரங்கேறிவருகிறது. அதன் சூடு, ஒப்பீட்டளவில் தமிழகம் போன்ற மதநல்லிணக்கம் மிக்க பகுதிகளிலும் உணரப்படுகிறது.

`ஹே ராம்’ படத்தின் பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட். முதலில் இப்படத்துக்கு இசையமைத்தது வயலின் கலைஞரான எல்.சுப்ரமணியம். ஆஸ்கருக்காக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் விருதுக்கு நாமினேட்டான `சலாம் பாம்பே’ எனும் இந்திப் படத்துக்கு இசையமைத்தவர். பிறகு, எல்.சுப்ரமணியத்துக்கும் கமலுக்கும் இடையே சம்பள ரீதியாகக் கருத்து வேறுபாடு ஏற்படவே, இளையராஜாவை அணுகினார் கமல்.படத்துக்காக ரீரிக்கார்டிங்கை ஹங்கேரியின் பூடாபெஸ்ட் சிம்பனியைக் கொண்டு அமைத்திருப்பார் இளையராஜா. வெளிநாட்டு இசைக்குழுவினரைக் கொண்டு இவ்வாறு ரிக்கார்டிங் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் `ஹே ராம்’தான். படத்தில் வரும் `இசையில் தொடங்குதம்மா’ பாடலுக்கு இளையராஜாதான் முதலில் ஐடியா கொடுத்திருக்கிறார். கமல் அதில் பெரிதாய் ஆர்வம் காட்டாமல்போக, வற்புறுத்தி அப்பாடலை இணைத்திருக்கிறார் இளையராஜா. (கட்டிங் கண்ணையா)

படத்தில் அம்ஜத் கான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாருக் கான். பாலிவுட்டில் தனது நடிப்பு வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார் ஷாருக்கான். ஹே ராம் படத்தில் நடிக்க சம்மதித்ததுடன் அந்த படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாக வாங்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் கமல்ஹாசன். ” ஷாருக் கானை அனைவரும் ஒரு வணிக நோக்கம் கொண்டவராகவே பார்க்கிறார்கள். இந்தத் தகவலை நான் சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்பாமல் இருக்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஹே ராம் படத்தின் கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது மட்டுமில்லாமல் சம்பளம் வாங்கவும் மறுத்துவிட்டார். ஏதாவது ஒரு வகையில் இந்தக் கதையில் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். “ என்று கமல் தெரிவித்தார்.

மேலும் , மகாத்மா காந்தியின் சிந்தாந்தம் மீதிருந்த தனது மாற்றுக் கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவே இந்த ‘ஹே ராம்’ படத்தை இயக்கியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் இளம் பருவத்திலிருந்தபோது எனது சூழ்நிலை மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சிக்க வைத்துவிட்டது. அப்போது என் தந்தை என்னிடம் வரலாற்றை படிக்கச் சொன்னார்.

வழக்கறிஞராக இருந்த என் தந்தை, என்னிடம் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க விரும்பவில்லை. சுமார் 24-25 வயதில் நான் காந்திஜியை சுயமாக படித்து அறிந்து கொண்டேன். அதன்பின் நான் அவரின் ரசிகனாகிவிட்டேன். என்னைத் திருத்திக்கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் நான் ‘ஹே ராம்’ படத்தை இயக்கினேன். காந்திஜியைக் கொல்ல விரும்பும் ஓர் இணை கொலையாளியாக நானும் படத்தில் நடித்திருந்தேன். காந்திக்கும், உண்மைக்கும் அருகில் அந்த கொலையாளி செல்ல செல்ல மாறிவிடுகிறார். ஆனால், அது மிகவும் தாமதமான மாற்றம். அவர் செய்ய நினைத்த காரியத்தை மற்றொருவர் செய்துவிடுவார். இருப்பினும் அங்கே அவரின் மன மாற்றம் நிகழ்ந்துவிடும்படி கதை அமைக்கப்பட்டிருக்கும். இதுதான் ‘ஹே ராம்’ படத்தின் கதை. இதை மன்னிப்பு கேட்கும் வழியாக நான் கருதினேன்” அப்படீன்னார்

இந்த படத்தின் யூ ட்யூப் லிங்க் இதோ: