எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதாகவும், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் செசன்ஸ் ஜட்ஜ் லட்சுமணன் இதே நவம்பர் 4ம் தேதிதான் தீர்ப்பு கூறினார்.
அன்றைய நிகழ்வு நம் சினிமா பிரஸ் கிளப் நண்பர்களுக்காக கட்டிங் கண்ணையா வழங்கும் நேரடி ரிப்போர்ட் இதோ:

நீதிபதி சரியாக 3 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். தனது வக்கீல் நடராஜனுடன் பேசிக்கொண்டிருந்த ராதா, குற்றவாளி கூண்டில் ஏறி நின்றார். தீர்ப்பு 200 பக்கங்களுக்கு மேல் இருப்பதால் முழுவதையும் படிக்காமல் தண்டனை என்ன என்பதை மட்டும் அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

“எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்ற குற்றத்துக்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தற்கொலை செய்ய முயன்றதற்காக 6 மாத வெறுங்காவல் தண்டனையும், லைசென்சு இல்லாத துப்பாக்கியை வைத்து இருந்ததற்காக 2 ஆண்டு கடுங்காவலும், துப்பாக்கியை போலீசில் ஒப்படைக்காததற்காக 2 ஆண்டு கடுங்காவலும், துப்பாக்கியை சட்ட விரோதமாக பயன்படுத்தியதற்கு 3 ஆண்டு கடுங்காவலும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.இந்த தண்டனையை ஏக காலத்தில் (அதாவது மொத்தம் 7 ஆண்டு கடுங்காவல்) அனுபவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பு கூறப்பட்டபோது எம்.ஆர்.ராதாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே இருந்தார். பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்கனவே 6 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தண்டனையை அனுபவித்து வருகிற எம்.ஆர்.ராதா இப்போது சிறையில் “ஏ” பிரிவு வகுப்பில் இருந்து வருகிறார் என்பதால், “ஏ” பிரிவு வகுப்பு கொடுப்பதற்கு இல்லை. “பி” பிரிவு வகுப்பு கொடுக்கும்படி அரசுக்கு சிபாரிசு செய்கிறேன் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும் தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தவைகளின் சாராம்சம் இதுதான்:

“இது ஒரு வினோதமான வழக்கு. இந்த வழக்கில் குண்டடிபட்ட எம்.ஜி.ஆர். பெரிய நடிகர். சட்டமன்ற உறுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட எம்.ஆர்.ராதா, திராவிடக்கழக உறுப்பினராக இல்லாவிட்டாலும், பெரியாரின் தொண்டர். அவரும் ஒரு நடிகர். எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்து இருக்கிறது. காரணங்கள் எம். ஆர். ராதா மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக்கின்றன. எம்.ஆர்.ராதா அந்த குற்றங்களை செய்வதற்கு 3 காரணங்கள் அரசு தரப்பில் கூறப்படுகின்றன.

அவை: 1. தொழில் பொறாமை. 2. அரசியல் காரணம். 3. பொருளாதார நெருக்கடி. முதலில் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்ய முயன்றதற்கு காரணம் என்ன என்பதை கவனிப்போம். சம்பவத்திற்கு முன்னாலேயே எம்.ஆர்.ராதாவுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு கடன் இருந்தது, சாட்சியங்களின் மூலம் விளங்குகிறது.

மேலும் அந்த சமயத்தில் அவர் மீது கைது வாரண்டுகளும், திவால் மனுக்களும் கோர்ட்டில் இருந்து இருக்கின்றன. மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வந்ததாகவும், தன்னிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்ததாகவும், தான் பண நெருக்கடியில் இல்லை என்றும் எம்.ஆர்.ராதா கூறுகிறார். அவர் கூறுகிறபடி அவருக்கு பண வசதி இருந்து இருந்தால், இவ்வளவு பெரிய தொகை கடனாக வெளியே நிற்காது. அதை எப்படியும் அடைத்து இருப்பார். எனவே சம்பவ தினத்தில், அவர் பண நெருக்கடியில் இருந்து இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். இது அவரை தற்கொலைக்கு தூண்டிய காரணங்களில் ஒன்றாகும்.

2 வதாக எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது தொழில் சம்பந்தமாக பொறாமை இருந்தது என்று கூறப்படும் காரணத்தை கவனிப்போம்.எம்.ஜி.ஆருக்கு 50 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான பணமும் சம்பாதித்து வருகிறார். அவருக்கு பட உலகில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பதை சாட்சியங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதே சமயத்தில் எம்.ஆர். ராதாவுக்கு பட உலகில் மார்க்கெட் “டல்” என்றும், அவருக்கு ஏராளமான கடன் இருந்ததாகவும் சாட்சிகள் கூறுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது, எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பொறாமை இருந்ததாக கூறப்படும் காரணத்தை தள்ளிவிட முடியாது.

இந்த காரணத்தை நம்புகிறேன். குற்றத்துக்கு அரசியல் காரணம் உண்டா என்று கவனிக்கும்போது, எம்.ஆர். ராதாவின், “என் மடிவு” கடிதம் நம் கவனத்துக்கு வருகிறது. இந்தக் கடிதம் எம்.ஆர். ராதாவால் தயாரிக்கப்பட்டது என்றும், அந்தக் கடிதத்தை அவரே சம்பவத்தன்று குண்டடிபட்ட பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் கொடுத்தார் என்றும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அந்தக் கடிதங்களில் உள்ள வாசகம் எம்.ஆர்.ராதா, எம்.ஜி. ஆர். மீது அரசியல் கருத்து வேறுபாடு கொண்டு இருந்தார் என்பதை காட்டுகிறது. குண்டர்களை வைத்து காமராஜரை கொலை செய்ய எம்.ஜி.ஆர். திட்டமிடுவதாக எம்.ஆர்.ராதா நினைத்து இருக்கிறார். இதுவும் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆருடன் அரசியல் விரோதம் கொண்டு இருந்தார் என்பதை காட்டுகிறது. எனவே, எம்.ஜி.ஆரை சுடுவதற்கு, தொழில் பொறாமையுடன், அரசியல் காரணமும் இருந்து இருக்கிறது.

எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர். கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிசுட்டு, அது தற்செயலாக எம்.ஜி.ஆர். மீது பட்டுவிட்டதா? அல்லது எம்.ஆர்.ராதா தற்காப்புக்காக சுட்ட பிறகு, அவரை பிறகு வேறொருவர் சுட்டாரா என்று நாம் ஆராய வேண்டும். எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆர். சுட்டாரா என்பதை எம்.ஆர். ராதாவால் சரிவர சொல்ல முடியவில்லை. மேலும் சம்பவத்தின்போது இருந்த எம்.ஜி.ஆர்., வாசு ஆகியோரின் சாட்சியங்கள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கிதான் குற்றத்துக்கு உபயோகிக்கப்பட்டதாக கூறுகின்றன.எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியைத்தான் வாசு எடுத்து காரில் சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார். மேலும் சம்பவத்தன்று வரவேற்பு அறைக்கு எம்.ஜி.ஆர். வந்தபோது, “வணக்கம் அண்ணே” என்று கைகளைக் கூப்பி கும்பிட்டதற்கு சாட்சியம் இருக்கிறது. அந்த கைக்குள் துப்பாக்கி இருந்ததா என்பது பற்றி எதிர் தரப்பினர் எந்தவித கேள்வியும் எம்.ஜி.ஆரிடம் கேட்கவில்லை.

மேலும் எம்.ஜி.ஆர். தன் துப்பாக்கியை உடலில் எந்த பகுதியில் செருகி இருந்தாலும் அவர் போட்டு இருந்த மெல்லிய டெர்லின் சட்டை காட்டிக் கொடுத்துவிடும். ஏன் என்றால், அவர் டெர்லின் சட்டைக்கு மேல் எம்.ஆர்.ராதாவை போல் சால்வை போர்த்திக் கொண்டு வரவில்லை. எனவே, சம்பவத்தன்று எம்.ஜி.ஆர். தன் அலமாரியில் இருந்த தன்னுடைய துப்பாக்கியில் “உயிருள்ள” குண்டுகளை போட்டுக்கொண்டு சம்பவ இடத்துக்கு வந்தார் என்று கூறுவதற்கு எந்தவித சாட்சியமும் இல்லை.

எனவே, வரவேற்பு அறைக்கு எம்.ஜி.ஆர். துப்பாக்கியுடன் வரவில்லை என்றே நான் கருதுகிறேன். அடுத்து எம்.ஆர்.ராதா சொல்வது போல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது தற்செயலாக நடந்ததா என்பதை பார்ப்போம். அன்று எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் 2 நிமிடம் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள். இந்த நேரத்துக்குள் எம்.ஆர்.ராதா எளிதாக தன் துப்பாக்கியை எடுத்துக் கொள்ள முடியும்.

எம்.ஆர்.ராதா கூறியதுபோல், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரிடம் இருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்கி சுட்டால் 2 பேரில் ஒருவர் எப்படியாவது இறந்துபோய் இருப்பார்கள். ஏனென்றால் துப்பாக்கியில் 2 குண்டுகள் இருந்து இருக்கின்றன. 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கி சூடு நடந்திருக்கும் என்றால், எல்லா குண்டு களும் வெடித்து ஒருவர் உயிரையாவது குடித்து இருக்கும்.எம்.ஆர்.ராதா சொல்வது போல், அன்று அவர் அந்த துப்பாக்கியை காலியாகக் கொண்டு வரவில்லை. எம். ஜி.ஆர். வீட்டுக்கு வந்த பிறகு தன் துப்பாக்கியில் குண்டுகளை போடவில்லை. எம்.ஜி.ஆர். வீட்டுக்கு வந்து, துப்பாக்கியில் குண்டை நிரப்பினால், அது எம்.ஜி.ஆருக் கும், வாசுவுக்கும் தெரிந்திருக்கவேண்டும். அப்படி எதுவும் நடை பெறாதது எம்.ஆர்.ராதா வீட்டில் இருந்தே குண்டுகள் அடங்கிய துப்பாக்கியுடன் தயாராக வந்து இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

சம்பவத்தன்று போராடி எம்.ஜி.ஆரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி இருந்தால், எம்.ஜி.ஆர். அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதாவிடம் இருந்து கைப்பற்ற முயன்றிருப்பார்; இல்லாவிட்டால் குண்டுக்கு இரையாகாமல் தப்பி ஓட முயன்று இருப்பார். அல்லது குண்டு தன் தலையில் படாமல் தன்னைக் காத்துக் கொண்டு இருப்பார். ஆனால், அன்று அப்படி ஒன் றும் நடைபெறவில்லை.எம்.ஜி. ஆரின் மிக அருகில் இருந்து குண்டு பாய்ந்து இருக்கிறது. எனவே, இது தற்செயலாக நடந்தது அல்ல என்றே நான் கருதுகிறேன். மருத்துவ நிபுணரின் சாட்சியமும் இதையே உறுதிப்படுத்துகிறது. எம்.ஆர். ராதா போராடி துப்பாக்கியை பிடுங்கியதாக கூறுவது, இயற்கைக்கு விரோதமானது; நம்ப முடியாதது. சம்பவத்தன்று முதலில் சுட்டது எம்.ஆர்.ராதாதான், எம்.ஜி.ஆர். அல்ல என்று நான் கருதுகிறேன்.

எம்.ஆர்.ராதாவின் நெற்றிப்பொட்டில் இருந்த காயமும், தோள் பட்டையில் இருந்த காயமும் வேறு யாராலும் சுடப்பட்டது அல்ல என்று நம்புகிறேன். ஏனென்றால் எம்.ஆர்.ராதா குப்புற கீழே விழுந்து கிடந்து இருக்கிறார். அவரது காயத்தின் தன்மையைப் பார்க்கும்போது, அப்படி கீழே விழுந்தவரை 3வது மனிதர் சுட்டு இருக்க முடியாது. எனவே, சம்பவங்களைப் பொறுத்தவரை அரசு தரப்பில் கூறப்படுவதை ஒத்துக்கொள்கிறேன்.

எதிர் தரப்பில் கூறப் படுவதுபோல், சம்பவம் நடக்கவில்லை. எம்.ஜி.ஆரின் ரத்தம் பட்ட துணி அவர் வீட்டு சலவை தொழிலாளியாலேயே சலவை செய்யப்பட்டு விட்டதை குறித்து எம்.ஆர்.ராதா தரப்பில் சந்தேகம் கிளப்பப்படவில்லை. சம்பவத்தன்று கைகலப்பே நடக்காதபோது, எம்.ஜி.ஆர். சட்டையில் எம்.ஆர்.ராதாவின் ரத்தம் பட்டிருக்க முடியாது. எனவே, எம்.ஆர்.ராதா தரப்பு வாதம் பலகீனம் அடைந்து வருகிறது.

அடுத்து எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பிறகும் எம்.ஆர்.ராதாவை போலீசில் ஒப்படைக்காமல் எம்.ஜி.ஆர். வீட்டில் உள்ளவர் களும், அவருடைய வேலைக் காரர்களும் இருந்தது ஏன் என்று கேட்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அந்த வீட்டின் குடும்பத் தலைவர். குடும்பத் தலைவருக்கு ஆபத்து ஏற்படும் போது அவருடைய உடல் நலத்தில்தான் அவரை சார்ந்தவர்கள் அக்கறை காட்டுவார்களே தவிர, குற்றவாளியை பிடித்து போலீசில் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

எனவே, இந்த விவாதமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அடுத்து, “எம்.ஜி.சக்ரபாணி, வாசுவை தன் காரிலேயே அழைத்துக்கொண்டு ஏன் வக்கீல் வீட்டிற்குப்போக வேண்டும்? தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளத்தான் சக்ரபாணி அவ்வாறு கூட்டிக் கொண்டு சென்றார்” என்று, எதிர்தரப்பில் கூறப்படுகிறது. இந்த வாதத்தை பொறுத்த வரையில், வாசு சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சி ஆவார்.

குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அவர் அன்று வைத்து இருந்து இருக்கிறார். இந்த நிலையில், அவர் மிகவும் பதட்டம் அடைந்து இருக்கலாம். தன்னையும் எம்.ஆர். ராதாவோடு சேர்த்து குற்றவாளியாக ஆக்கிவிடுவார்களோ என்று பயந்து இருக்கலாம். எனவே, துப்பாக்கியை எந்த போலீசில் ஒப்படைக்கலாம் என்று ஆலோசனை கேட்க சக்ரபாணியுடன் வக்கீல் வீட்டுக்குப் போய் இருக்கலாம்.

சம்பவத்தை பொறுத்தவரையில் எம்.ஆர்.ராதாவின் பொருளாதார நெருக்கடியும், அவர் மீது இருந்த கைது வாரண்டுகளும், 8167ந்தேதி பெரியார் திடலில் அவர் பேசிய பேச்சும் அவருடைய எண்ணத்தை வெளிக்காட்டுகின்றன. “என் மடிவு” கடிதத்தில், “கத்தியை வைத்துக்கொள் என்றால் பூட்டியா வைத்துக் கொள்வது? அந்த கத்தியால் ஒன்று, இரண்டு பேர் உயிரையாவது எடுத்துச்செல்ல வேண்டும்” என்றும் “ஆரியத்தை ஒழிக்கவும், காமராஜரை ஒழிக்க திட்டமிடுபவர்களை அழிக்கவும் உயிர் தியாகம் செய்யும் படை தயாராக வேண்டும்” என்றும் எம்.ஆர்.ராதா கூறி இருக்கிறார்.©️கட்டிங் கண்ணையா

மேலும் இந்த கடிதத்தில், “உயிர்த்தியாகம் என்பது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொள்வது அல்ல. ஒருவர், இருவர் உயிரை எடுத்துச்செல்ல வேண்டும்” என்று எழுதி இருக்கிறார். இந்த கடிதமும் வாசு, எம்.ஜி. ஆர். ஆகியவர்களின் சாட்சியங்களும் சம்பவத்தை நிரூபிக்க போதுமானவையாக இருக்கின்றன. எம்.ஆர்.ராதாவின் “என் மடிவு” கடிதம் அவரால் சொல்லி எழுதப்பட்டதுதான் என்று நான் கருதுகிறேன். அந்தக் கடிதமும், எம்.ஆர். ராதா பெரியார் திடலில் பேசிய பேச்சும் சம்பவத்திற்கு முன் எம்.ஆர்.ராதாவின் மன நிலை எவ்வாறு இருந்தது என்பதையும், அவருடைய திட்டத்தையும் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா தற்காப்புக்காகவோ அல்லது தவறுதலாகவோ சுடவில்லை. எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்டி விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.

எனவே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்கிறேன். இந்த குற்றங்களுக்கான தண்டனை பற்றி முடிவு செய்யும் போது, தண்டனையை குறைத்து அளிக்க வேண்டும் என்ற எதிர்தரப்பு வாதத்தை, எம்.ஆர்.ராதாவின் முதிய வயது (57) தவிர வேறு காரணங்களை கொண்டு வரமுடியாது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின் பின்புறம் மிகவும் அருகில் இருந்து சுட்டு இருக்கிறார்.அதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். உயிர் தப்பி இருக்கிறார். ஆகவே, இது கடுமையாக தண்டிக்கவேண்டிய ஒரு செயல் ஆகும். குற்றத்தை குறைப்பதற்கு வயது தவிர வேறு எந்த காரணமும் இல்லை. எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் ஒரு “திராவிடக் கழக தியாகி”யாக மடிய திட்டமிட்டு இந்த காரியத்தை செய்து இருக்கிறார்.

எம்.ஆர்.ராதா திராவிட கழகத்தின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் உறுப்பினர்களைவிட அந்த கட்சியின் தலைவர்களின் பொறுமை, திட்டம் முதலியவை குறித்து பொறுமை இழந்து திட்டங்களை நிறைவேற்று வதில் அதிக தீவிரம் உள்ளவராக இருந்து இருக்கிறார். அவர் கட்சியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்து, தனது எதிரி கட்சியை சேர்ந்தவரை சுட்டு கொல்லும் கொடுமையான ஒரு முடிவை எடுத்து செயல்பட்டு இருக்கிறார்.ஜனநாயக அமைப்பில், கட்சி பிரச்சினைகளை கொடுமையான செயல்களால் தீர்த்துவிட முடியாது. பல படங்களிலும், நாடகங்களிலும் பல ஆண்டுகளாக வில்லனாக நடித்து இருக்கும் எம்.ஆர்.ராதாவின் உடலில், வில்லன்தன்மை ஒரு பகுதியாக அமைந்துவிட்டது. அந்த வில்லன் நடிப்பை, உண்மையான வாழ்க்கையில் செய்து இருக்கிறார். அதற்கு அவர் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியது அவசியமாகும்.

எம்.ஆர்.ராதா குற்றதுத்துக்காக பயன்படுத்திய துப்பாக்கியை அரசு பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன். எம்.ஜி.ஆரின் துப்பாக்கியை, அப்பீல் முடிந்தவுடன் அவரிடம் திருப்பி கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறேன். இந்த வழக்கில் குற்றத்துக்கு “பாயிண்டு 320” குண்டுகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.பாயிண்டு 32 குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. எம்.ஆர்.ராதா தன்னிடம் “பாயிண்டு 320” குண்டுகளே கிடையாது என்று கூறுகிறார். ஆனால் அவர் “பாயிண்டு 320” குண்டு வாங்கியதற்கு அத்தாட்சி இருக்கிறது. எனவே, எம்.ஆர்.ராதா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் எம்.ஆர். ராதாவுடையவைதான்.”என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

©️கட்டிங் கண்ணையா