இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக சாதித்த தமிழர் ராஜா சாண்டோ!

பி. கே. ராஜா சாண்டோ

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.

சலனப் படங்களில் நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் பெயர் பெற்றார். ஆரம்பகால இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். அக்காலத்தில் திரைப்பட தயாரிப்பு களுக்கு முக்கிய கேந்திரமாக சென்னை விளங்கியது. இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த கலைஞர் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னையில் முகாமிட்டு தங்கள் படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக பம்பாயும், கல்கத்தாவும் சினிமா தயாரிப்புகளுக்கு உகந்ததாக விளங்கியது. திரைப்பட தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப காரணங்களுக்காக பம்பாய், கல்கத்தா என அக்காலத்தில் கலைஞர்கள் உழலவேண்டியிருந்தது. அப்படி பம்பாய் செல்லும் தமிழக கலைஞர்களுக்கு நெருடலான ஒரு விஷயம் உண்டு. அது அங்குள்ளவர்கள் அவர்களை “சாலா மதராஸி” என அழைத்து கேலி செய்வது. தமிழர்கள் என்றால் அத்தனை இளக்காரம் பம்பாய் ஸ்டுடியோவாசிகளுக்கு.

மும்பைவாசிகளின் இந்த கேலி வார்த்தை சென்னையிலிருந்து செல்பவர்களை மிகுந்த எரிச்சலாக்கும். ஒருமுறை தமிழக கலைஞர் ஒருவர், மும்பைவாசி ஒருவரால் இப்படி அவமானப் பட்டதை நேரில் கண்டார் ஒரு மனிதர். குஸ்திக்கலைஞரும் விளையாட்டு வீரருமான அந்த மனிதர், கிண்டல் செய்த அந்த மும்பைவாசிக்கு தன் பாணியில் பதில்கொடுத்துவிட்டு, உக்கிரமான குரலில், “ பம்பாய் ஸ்டியோகாரர்கள் இனி ‘சாலா மதராஸி’ என்று தமிழன் எவனையும் பார்த்து விளிக்கக் கூடாது” என்றார். அன்றோடு சென்னைவாசிகளை கேலி செய்வது நின்றுபோனது. அதன்பின் தமிழக கலைஞர்களுக்கு பம்பாயில் உரிய மரியாதை கிடைத்தது.

தமிழருக்கு நேர்ந்த அவமானத்தை போக்கி மரியாதை கிடைக்கச் செய்த அந்த மனிதர் வேறு யாருமல்ல…..ராஜா சாண்டோ.

அத்துடன் சிறந்த டைரக்டர், திறமையான நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் விளங்கி, வட இந்தியாவில் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுப் பெற்ற முதல் தமிழர். ஊமைப்படங்களிலும், பேசும் படங்களிலும் சிறப்பாக நடித்து புகழ்பெற்றவர்.

ராஜா சாண்டோ தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி. கே. நாகலிங்கம். உடற்பயிற்சியாளராகத் தேர்ச்சி பெற்றிருந்த இவர் பம்பாயில் எஸ். என். பதங்கரின் நேஷனல் பிலிம் கம்பனியில் சண்டை நடிகராகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். இவரது கட்டுமஸ்தான உடற்கட்டிற்காக ஜெர்மானிய பயில்வான் ஆய்கன் சாண்டோவின் பெயரால் ”ராஜா சாண்டோ” என்றழைக்கப்பட்டார். 1922ல் பதங்கரின் பக்த போதனா படத்தில்தான் இவருக்கு முதன்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்கு இவருக்குக் கிடைத்த வருமானம் ரூபாய் 101.

வீர் பீம்சேன் (1923), தி டெலிபோன் கேர்ல் (1926) போன்ற சலனப்படங்கள் இவருக்கு நல்ல நடிகரெனப் பெயர்வாங்கித் தந்தன. சில சலனப்படங்களில் நடித்த பின்னர் ரஞ்சித் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் இயக்குனராக மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார்.

இவர் இயக்கிய முதல் படம் சினேஹ் ஜோதி (1928).தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின் ஆர். பத்மநாபனின் அசோசியேட் பிலிம் நிறுவனத்திற்காகப் பல சலனப் படங்களை இயக்கி, நடிக்கவும் செய்தார்.] பேயும் பெண்ணும் (1930), நந்தனார் (1930), அனாதைப்பெண் (1931), பிரைட் ஆஃப் ஹிந்துஸ்தான் (1931), சதி உஷா சுந்தரி (1931) போன்ற இவரது பெரும்பாலான சலனப் படங்கள் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தன.

1931ல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியவுடன் மறுபடியும் பம்பாய்க்குச் சென்று ஹிந்தி மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்தார். பெரும்பாலும் கோஹர், சுலோசனா (ரூபி மையர்ஸ்) போன்ற நடிகைகளுடன் ஜோடியாக நடித்தார்.] 1932 முதல் 1935 வரை ஷியாம் சுந்தர் (1932), தேவகி (1934), இந்திரா எம்.ஏ (1935) போன்ற பல சமுதாயப் படங்களில் நடித்தார்.

1935ல் தமிழ்த் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்ததால் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் பேசும்படம் மேனகா. தொடர்ந்து பல தமிழ் மற்றும் ஹிந்திப் படங்களை இயக்கி நடித்தார். வசந்தசேனா (1936), சாலக் சோர் (1936), சந்திரகாந்தா (1936), விஷ்ணு லீலா (1938), திருநீலகண்டர் (1939), சூடாமணி (1941) ஆகியவை அக்காலகட்டத்தில் இவர் இயக்கி நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை.

ராஜா சாண்டோதான் முதன்முறையாக திரைப்படங்களின் பெயரோடு நடிகர்களின் பெயரையும் இணைத்து வெளியிடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அந்தக் காலத்திலேயே திரைப்படங்களில் முத்தக்காட்சிகளும் நடனக் கலைஞர்களின் ஆடைக்குறைப்பும் இவரால் துணிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன. புராணக் கதைகளை மட்டுமே திரைப்படமாக்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி சமூகக் கருத்துகளைக் கொண்ட கதைகளையும் திரைப்படங்களாக உருவாக்குவதில் இவர் முன்னோடியாக விளங்கினார். வை. மு. கோதைநாயகி அம்மாளின் கதையை அதே பெயரில் அனாதைப் பெண் என்ற திரைப்படமாக 1931ல் எடுத்தார். புதினம் ஒன்று திரைப்படமாக எடுக்கப்பட்டது அதுவே முதன்முறையாகும்.

பெண்கள் கூச்சப்பட்டு நடிக்க முன்வராத அந்தக் காலத்தில், நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிக்கும் முறையைப் பின்பற்றி டி.கே.சண்முகத்தின் சகோதரர் முத்துசாமி தலையை மழித்து விதவைப் பெண் வேடமிட்டு நடித்தார். அதேபோல வேலைக்கார ரங்கராஜனின் மனைவி மற்றும் மகள் வேடங்களிலும் முறையே டி.என். சுப்பையா, பி.எஸ்.திவாகரன் என்ற ஆண்களே நடித்தனர் என்பதும், அவ்வை சண்முகி போன்ற வேடங்களுக்கு இதுவே முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்படிப்பு தளங்களில் ராஜா சாண்டோ ஒரு கறாரான மனிதர். தான் விரும்பியபடி காட்சி சிறப்பாக வரும் வரையிலும் நடிகர்களை உண்டு இல்லையென்று செய்து விடுவார். அந்த சமயங்களில் அவர்கள் ராஜா மீது கடும் எரிச்சல் அடைவார்கள். ஆனால் காட்சி திரையில் வரும்போது அவர்கள் ராஜா சாண்டோவின் திறமையை எண்ணி வியப்பிலாழ்ந்துவிடுவர்.இந்த காரணங்களால் பி.யு சின்னப்பா மட்டுமின்றி மக்கள் திலகம் எம்.ஜி. ஆரும் அவரை தன் குரு என போற்றினார். என் திரைப் படங்கள் ராஜா சாண்டோ பாணியை பின்பற்றியது என ஒருமுறை குறிப்பிட்டார் எம்.ஜி. ஆர். சாண்டோ அவருக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர், நடிகர், தயாரிப்பாளர். சாண்டோவை அவரது ஒவ்வொரு கோணத்திலும் ரசித்து சிலாகித்தவர் எம்.ஜி.ஆர்.(கட்டிங் கண்ணையா)

தமிழ்சினிமாவிற்கு பெரும்பங்களிப்பு செய்த சாண்டோவிற்கு, நாடகங்கள் பிடிக்காது என்பது ஆச்சர்யமான தகவல். புராதன, இதிகாச கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அரதப்பழசான விஷயங்களை முன்னிறுத்துவதாக கருதிய அவர், திரும்ப திரும்ப அத்தகைய தகவல்களை காட்சிகளாக்குவதை வெறுத்தார். சமூக படங்களின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், புராண நாடகங்களின் மீது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒருமுறை பிரபல நாடக கலைஞர் எஸ். ஜி. கிட்டப்பா இவரை சந்திக்க அனுமதி கேட்டு, நாடக நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை சந்திக்க மறுத்தார் என்ற தகவல் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நாடகங்களின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.தமிழ்சினிமாவின் அந்நாளைய சாபக்கேடுக்கு ராஜாவும் தப்பவில்லை. சம்பாதித்த எதையும் சேமித்துவைக்கும் பழக்கம் இல்லாத ராஜா, தம் இறுதிக்காலத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார். நெருங்கிய நண்பர்கள் உதவியால் ஓரளவு சமாளித்தாலும், அவர் அல்லல்படும் அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது.

1942 ஆம் ஆண்டு, ராஜா சாண்டோ ஒரு விநோத நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் முதுகுப் பகுதியில் ஒரு கட்டி உருவாகி அவருக்கு தொந்தரவு அளித்தது. இதை எடுக்க அவர் புகழ்பெற்ற மருத்துவமனையை அணுகினார். ஆபரேஷன் செய்யப் பட்டது. அதற்கான செலவை நண்பர்கள் உதவியுடன் செலுத்தினார். இருப்பினும் அதே இடத்தில் அடுத்தடுத்து கட்டிகள் உருவாகி தொடர்ந்து சிகிச்சையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த முறை அவரது நண்பர்கள் உஷாரானார்கள். ராஜா உடல்நிலை முன்போல இல்லை. அவருக்கு செலவிடும் பணம் திரும்ப வராது என அவர்கள் முடிவெடுத்தனரோ என்னவோ, சத்தமில்லாமல் விலகிக்கொண்டனர். மருத்துவரும் அவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிவிட்டதாகவே ராஜாவின் மனைவி ஜானகியிடம் தெரிவித்தனர்.

ஆனால் உடல் வலிமை மட்டுமின்றி, மனவலிமையும் அதிகம் பெற்றவரான ராஜா, அதிலிருந்து அதிசயமாக மீண்டார். சகஜமாகி உலவத் துவங்கினார். சில காலம் அதிக உற்சாகத்துடன் காலம் கழித்த ராஜா, திடீர் மாரடைப்பு காரணமாக 1943 ஆம் ஆண்டு இதே நவம்பர் 25 ஆம் தேதி கோவையில் மரணமடைந்தார். தமிழில் ராஜா சாண்டோ கடைசியாக டைரக்ட் செய்த படம் “ஆராய்ச்சிமணி”.

அதீதி திறமையால், வட இந்தியாவில் கோலோச்சிய தமிழகத்தின் முதல் கலைஞனான ராஜா சாண்டோவின் சினிமா சேவையைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு அவரது பெயரில் “ராஜா சாண்டோ” நினைவு விருதொன்றை நிறுவியது. ஆண்டுதோறும் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அரும் பணியாற்றிய கலைஞர்களில் ஒருவருக்கு வழங்கி சிறப்பிக்கின்றது.

✍️©️கட்டிங் கண்ணையா