T.S.பாலையா..one and only…!
“அசோகரு நம்ம மகருங்களா?”…என்று கேட்கும் காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் ஆகட்டும், பிலிப்பைன்ஸ் போயிருக்கான் என்று சொன்னால், “என்னது புலிகிட்ட பேசிட்டு இருக்கானா”?ன்னு தனக்கு தோன்றியதை கேட்கிற ஊட்டிவரை உறவு, வேதாசலம் ஆகட்டும்.. ஒரு கட்டத்தில் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான தொழிலதிபர் வேடங்களில் பாலையா நடித்தார் என்பதைவிட, அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தார்.காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் சீன் எவ்வளவு பிரபலமோ, அதற்கு நிகரானது ஊட்டிவரைஉறவு படத்தில் காதலியை பற்றி சொல்ல ஆரம்பித்த மகன் சிவாஜியை ஒட்டியபடியே பாலையா செய்யும் அட்டகாசம். அந்த காட்சியையெல்லாம் பார்க்கும்போது தமிழ் சினிமா உண்மையிலேயே பேரதிஷ்டம் செய்த ஒன்றுதான் என்று தோன்றும்.. பாலையாவின் நடிப்பை வில்லன், குணச்சித்திரம் என இருகூறுகளாக போட்டால் அதில் எது அட்டகாசம் என்பது கண்டுபிடிப்பது கஷ்டம்.,’
எம்கேடி பாகவதர்-பியு சின்னப்பா சகாப்தத்தில் துவம்ம் செய்த பாலையாவை பலருக்கும் தெரியாது.1936 லிருந்து 1950 வரை, சதிலீலாவதி, அம்பிகாபதி, மீரா, மந்திரிகுமாரி என பல புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன்.. எம் கே ராதா எம்ஜிஆர் பாலையா என பெரிய பட்டாளத்தையே சதிலீலாவதி படத்தில் அறிமுகப்படுத்தியவர். உலக சினிமாக்களை கரைத்து குடித்தவர். அவரிடம் ஒருமுறை, நீங்கள் பெரிய அளவில் பார்த்து வியக்கும் நடிகர் யார் என கேட்டபோது சொன்னார், அவர் வேறு யாருமல்ல, டிஎஸ் பாலையாவைத்தான். “மனுசனாய்யா அவன் என்ன ரோல் கொடுத்தாலும் அசத்துற அவ்ளோ டேலன்ட்டான ஆளு….” என்று விளக்கமும் கொடுத்தார் டங்கன். இந்த காலகட்டத்தில் சிவாஜி திரைப்பட உலகில் அறிமுகம் ஆகவில்லை.
ஸ்டண்ட்டை தொடாமல் வெறும் உடல் மொழியாலும் வசனத்தாலும் மட்டுமே படு பயங்கரமான வில்லத்தனத்தை அசால்ட்டாக செய்து காட்டியவர் ஜாம்பவான் பாலையா. ஆர்பாட்டம் இல்லாமல் கழுத்தறுக்கும் கலையை படங்களில் அற்புதமாக நிலைநிறுத்துவதில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது .
எம்ஜிஆரின் அந்தமான் கைதி (1952)படம்.. கதையில், சொந்த தங்கையின் மகளையே மணந்து பெண்டாள துடிப்பார் காமுகனான கே.சாரங்பாணி. தாய் மாமனின் முறையற்ற செயலை தட்டிக்கேட்டு போராடுவார், அண்ணனான எம்ஜிஆர். இத்தனைக்கும் நடுவில் நின்று வில்லனுக்கு தூபம் போட்டு மேலும் மேலும் ஏற்றிவிட்டு சகல சாசகங்களையும் செய்வார் பாலையா. சாராங்கபாணியே சோர்ந்துபோனாலும் பாலையா சோரவே மாட்டார். எதைப்பற்றியும் கவலைப்படாத பாத்திரம் அது.. காரணம் முதலாளி கே சாரங்கபாணியை சாக்கு வைத்து எம்ஜிஆரின் தங்கையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பார்.
அறிஞர் கதை வசனம் எழுதிய வேலைக்காரி (1949) படத்திலும் இப்படித்தான்.
அடுத்து கெடுக்கும் படலம்..
பணம் பாழாக்கும் படலம்..
மானம் பறிக்கும் படலம்..
கண் குத்தும் படலம்..
இப்படி நான்கு வகை பழிவாங்கல் பற்றி நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியிடம் பாலையா விவரிப்பதை கேட்கவே வேண்டுமே… படத்தை பார்த்தவர்களால் மட்டுமே உணரமுடியும்..
இன்று வரை எல்லோராலும் பேசப்படுகிற புகழ்பெற்ற வசனமான கத்தியை தீட்டாதே.. உன் புத்தியை தீட்டு என்பதை வேலைக்காரி படத்தில் பேசியவரும் பாலையாதான்..கே.ஆர் ராமசாமி- பாலையா காம்பினேஷன் என்றதும் நினைவுக்கு வரும் செல்லப்பிள்ளை(1955). “மதனா எழில் ராஜா, நீ வாராய் என்று செமை ஹிட் பாடல், சாவித்திரி ஆடியபடியே பாட, அருகில் பாலையா கிடார் வகையறாவில் ஒரு இசைக்கருவியை கொண்டு அவ்வளவு ஸ்டைலாக வாசிப்பார். பாட்டுக்கு நடுவே திடிரென்று துப்பாக்கியுடன் புகுந்து இருவரையும் மிரட்டி கேஆர்.ராமசாமி பேசும் வசனங்கள் ரேடியோ விரும்பிகளுக்கு பாதாம் அல்வா மாதிரி என்பது தனிக்கதை.
ஆட்டம் போடும் பாலையாவை ரசிக்கவேண்டும் என்றால் கவிதா படத்தில் மணக்கும் மை லேடி பாடலை சொல்லியே ஆகவேண்டும். ஜெயலலிதாவின் சொந்த சித்தியான வித்யாவதியுடன் பாலையா ஆடும் காஷ்வலான டான்ஸ்.. கலக்கலான ரகம். இருந்த இடத்திலேயே ஆடுவதும் வில்லத்தனம் செய்வதும் என ஒரு தனி கலையை தனக்கென வைத்திருந்தார் பாலையா.
“எங்கு பார்த்தாலும் ஒரே தண்ணீர் தண்ணீர், இருபுறமும் கரைபுரண்டோடுகிறது காவிரி வெள்ளம் ஆற்று வெள்ளத்திலே பொம்மி.. உயிரையும் பொருட் படுத்தாமல் படாரென்று குதித்தேன்.படபடவென்று நீந்தினேன். ஒரு சுழல் என்னை அமுக்கியது. பூவென்று ஊதினேன்..தூக்கினேன் பொம்மியை சேர்த்தேன் கரையில்..”. – மதுரை வீரன் (1956) படத்தில் எம்ஜிஆர் காப்பாற்றிய பானுமதியை தான் காப்பாற்றியதாக உதார் விட்டு தளபதி பாத்திரத்தில் பாலையா பேசிய மேற்படி வசனம்.. அவரது சினிமா பக்க ஹைலைட்களில் டாப் ஃபைலில் ஒன்றே என்றே சொல்லவேண்டும்.
கலைஞர் வசனம் எழுதிய எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் (1957) படத்தை தனது வில்லத்தனத்தால் பாலையா புரட்டி போட்ட விதம், படத்தைப் பார்த்து பார்த்து வியந்துகொண்டே போகவேண்டியதுதான்.
பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பணம் படைத்தவன், பாமாவிஜயம் போன்ற படங்களில் பாலையாவின் நடிப்பாற்றலை சொல்ல தனி புத்தகம்தான் தேவை.
“என் பாட்டுக்கு இந்த பாண்டியநாடே அடிமை” என எகிறும் திருவிளையாடல் ஹேமநாத பாகவதர்,
வண்டில இன்னைக்கு ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே என கலாய்ததபடி ரயில் பயணத்தில் தெறிக்கவிடும் தில்லானா மோகனாம்பாள் தவில் வித்வான்..
யாரால் மறக்கமுடியும். இன்றைய தலைமுறைகூட அசந்துபோகிறார்கள் இந்த பாத்திரங்களை பார்த்து
தில்லானாவில் நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக இவரின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனதெல்லாம் தனி வரலாறு
பாலையா எக்கச்செக்கமா தூள் கிளப்பிய இன்னாரு படம் சிவாஜியின் தூக்குதூக்கி.
கள்ளக்காதலனாய் வடநாட்டு சேட்டு பாத்திரத்தில் வந்து நம்பிள் நிம்பிள் என கலப்பு பாஷையில் பாலையா பிய்த்து உதறியவிதம், அதேபோல் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் மெட்ராஜ் பாஷையில் பாலையா கலக்கிய விதம்..
பணம் படைத்தவனில் கலப்புமணம் செய்ததால் மகன் எம்ஜிஆரை வீட்டை விட்டு விரட்டிவிட்டு பேரன் பிறந்திருக்கிறான் என்று தெரிந்ததும், பிஞ்சுவை பார்க்கத்துடிக்கும் அந்த கட்டங்கள்.. நிஜவாழ்வில் அப்படி ஒரு கட்டத்தில் தள்ளப்பப்பட்ட அனைவரையும், கண் கலங்க வைத்த பாலையாவின் மாஸ்டர் பீஸ் காட்சிகளில் ஒன்று அது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த ஒரு இயக்குனர், காதலிக்க நேரமில்லை படத்தை மறுஆக்கம் செய்ய அனுமதி கேட்டு டைரக்டர் ஸ்ரீதரை நேரில் அணுகியிருக்கிறார். ஹீராவோ யாரைப் போடப்போகிறீர்கள் என்று ஸ்ரீதர் கேட்க, அதற்கு இயக்குநர் ரவிச்சந்திரன் முத்துராமன் ரோலுக்கு இன்னாரை போடப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.கடுப்பான ஸ்ரீதர், காதலிக்க நேரமில்லை படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதலில் போய் டைட்டில் கார்டை பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பியிருக்கிறார்.
நீங்களும் போய் டைட்டில் கார்டை பாருங்கள்.
திருநெல்வேலி மண்ணின் மைந்தனான டி.எஸ்.பாலையா அவர்களின் 110 ஆவது பிறந்தநாள் இன்று