விடுதலை – விமர்சனம்!

டிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும். இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்!

கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது.

முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக மாற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
டைட்டில் இசையில் ’கேப்டன் பிரபாகரன்’ பார்க்கும் உணர்வை ஏற்படுத்துபவர், கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முந்தைய காட்சிகளில் வன்முறையை அழகுபடக் காண்பிக்கத் துணை நிற்கிறாரோ என்று சந்தேகப்பட வைக்கிறார். நமது புரிதல் தவறு என்பதை உணர்த்துகிறது அதற்கடுத்த சில நொடிகளில் பின்தொடரும் பின்னணி இசை. அதன்பிறகு, கிளைமேக்ஸ் மோதல் முழுக்க கேமிராவோடு சேர்ந்து இசையும் பயணிக்கிறது.

’அருட்பெருஞ்சோதி’ பாடல் நம் காதுகள் உணரும் முன்பே முடிந்துவிடுகிறது. ’காட்டுமல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் முழுதாக ஒலித்து அந்த குறையைத் தீர்க்கின்றன.

நிதானத்திலும் அவசரம்!

‘அசுரன்’ படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் வெற்றிமாறன் அவசர அவசரமாகப் படமாக்கினாரோ என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால், ‘விடுதலை’ படமாக்கப்படுவதற்கே இரண்டரை ஆண்டுகள் பிடித்திருக்கிறது. படப்பிடிப்பு நடந்த நாட்கள் குறைவுதான் என்றாலும், அதற்கான முன், பின் தயாரிப்புப் பணிகள் நிகழ்ந்த காலம் அதிகம். அதையும் மீறி, திரையில் சில ‘அவுட் ஆஃப் போகஸ்’ காட்சிகள், தரநிலை குறைவான பிம்பங்கள் தென்படுகின்றன.

பாடல் காட்சிகளில் சூரியின் கைபடும் தாவரங்கள் வனத்தில் வளர்பவையா என்ற சந்தேகம் எழுகிறது. அதையெல்லாம் விட, கவுதம் மேனன் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சுனில் மேனன் என்று வசனங்களில் குறிப்பிடப் படுகிறது. ஆனால், அவரது காக்கி உடையில் மீதிருக்கும் பட்டையில் சுனில் மேனன், சுனில் சர்மா என்ற இரு பெயர்கள் மாறி மாறி வருகின்றன. அதனை மங்கலாக்கிக் காட்டினால், அனேக யூகங்களுக்கு வழி வகுக்கும் என்று அந்த தவறை அப்படியே விட்டிருக்கின்றனர் இயக்குனர் குழுவினர். கண்டிப்பாக, நிதானத்திலும் அவசரம் எனும் வகையில் அது அமையப் பெற்றிருக்காது என நம்பலாம்!

தமிழ் தேசியமோ, பொதுவுடைமைச் சித்தாந்தமோ, சமூக நீதியோ பேசும் வசனங்கள் ‘விடுதலை பாகம் 1’இல் இல்லை. ஆனால், ஏழை மக்கள் படும் வேதனைகள், அதிகாரபீடத்தின் கீழ் நசுக்கப்படும் அவலங்கள் இப்படத்தில் சொல்லப்படுகின்றன. ‘என்னோட அப்பா, அம்மாவுக்கு இந்த மாதிரி நடந்திருந்தா எந்த போலீஸ்காரனையும் மன்னிச்சிருக்க மாட்டேன்’ என்பது போன்ற பல வசனங்கள், காட்சிகள் காவல் துறையின் அத்துமீறல்களை அப்பட்டமாகச் சொல்கின்றன; அதைச் சமன் செய்வது போல சூரியின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வரும் ரயில் பெட்டி தடம்புரளலும், கிளைமேக்ஸில் வரும் துப்பாக்கி மோதலும் திரையில் பிரமாண்டத்தைக் காட்டுகின்றன; ‘அன்று சிந்திய ரத்தம்’ என்று வரலாற்றில் மறைக்கப்பட்ட வலிகளைச் சொல்கிறது. அந்த ரணத்தை உணர்கையில், சட்டென்று படம் முடிந்து விடுகிறது. அது மட்டுமே இப்படத்தின் பெருங்குறை, மற்றபடி, கருத்துரீதியாக எதிர்ப்பவர் களுக்கு பிடி கொடுக்காமல் நழுவியிருக்கிறார் வெற்றி மாறன் என்றே சொல்ல வேண்டும்!

ராம் சுகுமார்