காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ஸ்பைடர்மேன் ?!

SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE திரை விமர்சனம் !!

இயக்கம் – Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson

திரைக்கதை – Phil Lord & Christopher Miller & David Callaham, based on Marvel Comics.

பின்னணிக் குரல்- Shameik Moore (voice of Spider-Man), Hailee Steinfeld (Gwen Stacey), Brian Tyree Henry, Luna Lauren Velez, Jake Johnson, Jason Schwartzman, Issa Rae, Karan Soni, with Daniel Kaluuya and Oscar Isaac.

முதல் பாகத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பிறகு பல ஆச்சர்யங்களுடன் வந்திருக்கிறது SPIDER-MAN:ACROSS THE SPIDER-VERSE கார்டூன் படம்.

3டி க்ளாஸ் வரை படம் காட்டும் நவீன உலகில் கார்டூன் படத்திற்கு என்ன வரவேற்பு இருந்துவிடப் போகிறது என்று நினைத்தால் அது படு முட்டாள்த்தனம். ஸ்பைடர் மேன் பிரபஞ்சத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் நொடிக்கு நொடி விசில் சத்தத்தை பறக்க விடுகிறது.

உலகம் முழுக்க புகழ் கொண்ட மார்வலின் ஸ்பைடர்-மேன் காமிக்ஸ் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இப்படம் அமைந்துள்ளது.

ஸ்பைடர்-வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல யுனிவர்ஸ் ஆகும். இந்த கார்டூன் படத்தின் கதை நிகழும் இடமும் இது தான். இப்படம், 2018 இல் வந்த ‘ஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ எனும் படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது. அடுத்த பாகமும் இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டது.

மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கணினி அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர். கணினியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களை (CGI) ஸ்டாப்-மோஷன் அனிமேஷனாக எடுக்கப்பட்ட முதல் ஸ்பைடர்-மேன் தொடர் இதுவே! இப்படம், மூன்று பாகங்கள் கொண்ட அத்தொடரின் 2 ஆவது படம் இது.

பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும், ப்ரூக்ளினின் நகர முழு நேர ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸ், தன் தோழியான க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பின், மல்டிவெர்ஸில் சிக்கி, பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் சொசைட்டியை சேர்ந்த பல ஸ்பைடர்மேன் வில்லன்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சொசைட்டியில் உள்ள ஸ்பைடர்-மக்கள், பிரபஞ்சங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், புதிதாய் முளைக்கும் அச்சுறுத்தலை எப்படிக் கையாள்வதென, ஸ்பைடர்-மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இந்த நேரத்தில் மைல்ஸ் மொரால்ஸ், உலகையும், தன் குடும்பத்தையும், ஒன்றாக காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொள்கிறார். ஸ்பைடர் சொசைட்டியை எதிர்த்து அதை அவர் சாதிக்கிறாரா என்பதே கதை.

Miles Morales (Shameik Moore) and Gwen Stacy (Hailee Steinfeld) take on The Spot (Jason Schwartzman) in Columbia Pictures and Sony Pictures Animation’s SPIDER-MAN™: ACROSS THE SPIDER-VERSE.

முழுக்க அனிமேசனில் காமிக்ஸை கண்முன் கொண்டு வந்து ஒரு மிகப்பெரும் பிரமாண்ட விருந்து வைத்துள்ளது இந்தப்படம்.

இந்திய இளைஞனின் குரலில் மைல்ஸ் மொரால்ஸ் ஸ்பைடர்மேன் வருவது அட்டாகாசம். காமிக்ஸில் மட்டுமே பல கேரக்டர்கள் படத்திற்குள் வந்து ஆச்சர்யம் தருகிறார்கள். காமிக்ஸ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்.