சேத்துமான்
இயக்கம் : தமிழ்
கதை : ‘வறுகறி’ – பெருமாள் முருகன் சிறுகதை
இசை பிந்து மாலினி
கேமரா – பிரதீப் காளிராஜ்
சேத்துமான் என தெரியப்படும் பன்றியை சமைத்து சாப்பிட சிலர் விருப்பபட அது எவ்வளவு பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது என்பது தான் கதை.
உணவு அரசியலை பற்றி பேசிய முக்கியமான படங்களில் சேத்துமான் திரைப்படமும் ஒன்று. ஒரு பன்றி கறியை சாப்பிட எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாக வேண்டியுள்ளது என்பதை காட்சிகள் மூலமாக விவரிக்க முயற்சி செய்துள்ளனர். அது பாராட்டுதலுக்கு உரியதே. பார்வையாளர்களும் பன்றி கறி மீதான அனுபவத்தை இந்த படம் மூலமாக தான் உணருவார்கள் என்னும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சுயாதீன திரைப்பட உருவாக்குதல் முயற்சியில் இந்த சேத்துமான் உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களின் வரவு என்பது ஒவ்வொரு மொழிகளிலும் தேவையான ஒன்று. அது தான் அந்த மொழி மக்களின் நுட்பமான வாழ்வியல் முறையை வெளிகொணர உதவும் அந்த வகையில் இது தேவையான ஒரு படம் தான்.
படத்தின் நடிகர்கள் பலரும் புதுமுகம், அவர்கள் அந்த ஊர்காரர்களாக வெளிப்படவே முயற்சித்து இருக்கின்றனர். ஆனால் அது முழுமையாக வெளிப்படவில்லை, ஒரு சில இடங்களின் நிலப்பரப்பின் மொழியை விட்டு வெளியே சென்று மீண்டும் அந்த பாதைக்கு திரும்புகிறது படம்.
படத்தில் முக்கியமான பாரட்டுதலுக்கு உரியது கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி தான். உண்மைக்கு எவ்வளவு நெருக்கமாக அமைக்கமுடியுமோ, அவ்வளவு நெருக்கமாக அமைத்துள்ளனர். காட்சியமைப்பும், நடிகர்கள் அதற்கு எடுத்துகொண்ட சிரத்தையையும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது. படத்தின் முக்கியமான சாராம்சமே அந்த சண்டைக்காட்சி தான்.
பெருமாள் முருகன் சிறுகதையை படமாக்கியுள்ளனர். ஆனால் சிறுகதையை படமாக்குவதில் உள்ள சிக்கல் இந்த திரைப்படத்திலும் உள்ளது. படத்தின் முற்பகுதியில் வரும் பல காட்சிகள் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம் நிரம்பிய ஒன்றாகவே இருக்கிறது. முற்பகுதி காட்சிகள் பல சோர்வை தருகின்றனர்.
அது போல படத்தின் கேமரா விஷயத்தில் படக்குழு ஒரு முயற்சியை எடுத்துள்ளனர். அது காட்சி எப்பொழுதும் ஆடிகொண்டே இருக்க வேண்டும் என்பது தான். அது ஒரு சில இடங்களில் தேவைப்படலாம், ஆனால் படம் முழுக அதனை பயன்படுத்தியது உறுத்தலாக தெரிகிறது.
படத்தின் அடுத்த பாராட்டுதலுக்கு உரிய விஷயம், படத்தின் கதைக்கு கீழே அமைக்கப்பட்ட உருவக கதை தான் . ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராகும் அந்த செயலை கதையோடு பயணிக்கவைத்தது, படம் பேசும் ஜாதி அரசியலின் ஒரு முக்கியமான நீட்சி தான். சமூகத்தின் இரு முரண்களையும் ஒரு சேர காட்ட முயற்சிப்பது ஒரு சர்வதேச பார்வையை கொடுக்கிறது. இது மிக சாதூர்யமான திரைக்கதை அமைப்பு.
படத்தின் இசை விஷயத்தில் படக்குழு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுயாதீன திரைப்படங்களும், நுட்ப அரசியலை பேசும் திரைப்படங்களும், கதையை மையமாகவே வைத்து இசை அமைக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் நிலப்பரப்பை மையமாக வைத்து இசையமைக்கப்பட்டுள்ளது. இது அந்த நிலப்பரப்பிற்குள் நம்மை இழுத்து செல்ல் படக்குழு செய்த நல்ல முயற்சி.
பார்க்ககூடிய சுயாதீன சினிமா தான் இந்த சேத்துமான்