சந்தேகப்படுங்கள்; ஆனால் தீர்ப்பு எழுதாதீர்கள் ! -இயக்குனர் அமீர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை என்.சி.பி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பதாலும், சாதிக்குடன் நெருக்கமான நண்பராக அமீர் இருந்திருக்கிறார் என்பதாலும், என்சிபி அதிகாரிகள் அவரிடம் டெல்லியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் பற்றி, இயக்குனர் அமீர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார். சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் அவர் விளக்கமளித்துள்ளார். அதில்….

””கருத்தியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாத, போரிட முடியாத அனைவருமே எனக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவர்கள்தான் என்னைப் பற்றிய வதந்திகளைத் தீவிரமாகப் பரப்ப ஆரம்பித்தார்கள். அமீர் தலைமறைவு என்று அவர்கள் என்னைப்பற்றிய தகவல்கள் பரப்ப ஆரம்பித்தபோது ”நான் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறேன்” என்று பதில் அளித்தேன்.

பத்திரிக்கையாளர்களை மிகவும் மதிக்கக் கூடியவன் நான். ஆனால் யூ டியூப் வைத்திருப்பவர்கள் அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று, எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நெருக்கமாக உறவு பாராட்டியவர் நான் தம்பி என்று பொதுவெளியில் அழைத்தவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதா ? ஆமாம். அவரை பத்து வருடங்களாகத் தெரியும்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்குத் தொடர்பிருக்கிறதா ? என்று கேட்டால் இல்லடா வெண்ணைகளா என்று என்னால் தைரியமாகச் சொல்லமுடியும்.

என் மீது சந்தேகத்தின் நிழல் விழலாம். அதில் தப்பில்லை. ஆனால் தீர்ப்பு எழுதுகிறீர்கள் பாருங்கள் ? அது மிக ஆபத்தானது. நீங்கள் யார் ? நீதிபதிகளா ? எந்த அடிப்படையில் தினம் ஒரு செய்தியும், தினம் ஒரு தீர்ப்பும் அளிக்கிறீர்கள் ?

பருத்தி வீரன் முடித்தபோது ரஜினிகாந்த் தன்னுடன் படம் பண்ணுமாறு அழைத்தார். கமல்ஹாசன் தனக்குப் படம் பண்ணித்தரச் சொன்னார். ஆனால் பெரிய நடிகர்களுடன் படம் பண்ண முடியாது என்று விலகி,எனக்குப் பிடித்த படங்களைச் செய்துகொண்டிருக்கிறேன்.

பணம் சம்பாதிப்பது அல்ல என்னுடைய நோக்கம். ஆனால், ஜாபர் வந்த பின்னால்தான் அமீரின் வாழ்க்கை வசதியாக மாறியது என்று கூறுகிறார்கள்.

ஜாபர் வந்தது 2014-ம் ஆண்டில்தான். ஆனால் ‘விருமாண்டி’ படத்தைப் பார்ப்பதற்காக ராம் திரைப்பட ஷூட்டிங்கை ஒரு நாள் நிறுத்திவிட்டு கொண்டாட்டமாக அந்தப்படம் பார்த்தவன். அந்த நாளுக்காக இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்தவன் நான். ஜாபர் பணத்தில் நான் வாழவில்லை.

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுடன் எனக்கு என்ன தொடர்பு என்று கேட்டால் நான் பதில் சொல்லப் போகிறேன். ஆனால் என்னுடைய சொத்துக்களைப் பற்றி இவர்கள் எப்படி கேள்வி கேட்கிறார்கள் கதை திரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் அண்ணன் வழக்கறிஞர். என் இன்னொரு அண்ணன் காண்டிராக்டர்.

பணம் சம்பாதிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. எனக்குப் பிடித்த திரைப்படங்களைப் பண்ணுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.

யூ டியூபில் ஒருவர் கூட உண்மை பேசவில்லை.டெல்லியில் உள்ள source மூலம் வந்த தகவல் என்று கூறிக்கொண்டே அத்தனை பொய்களைப் பேசுகிறார்கள்.

சரி அப்படி என்ன source என்று பார்த்தால், தினமலர் செய்தித்தாளைப் புரட்டிப் பார்த்துக் கதை சொல்கிறார்கள்.

இப்படி இவர்கள் யூ டியூபில் பேசுவதைத் தினமும் இரண்டு லட்சம் பேர் பார்க்கிறார்கள். அந்த வீடியோக்களின் கீழே ‘எப்போது அமீரைக் கைது செய்வீர்கள் ; மூன்று மாதமாக ஏன் அமீரைக் கைது செய்ய மாட்டேன் என்கிறார்கள் ?’ என்று எல்லாரும் கமன்ட் கேட்கிறார்கள்.

எனக்குச் சிறை செல்வது பிரச்சனை இல்லை. ஆனால் நான் வெறுக்கிற ஒரு குற்றத்தை என் மீது சுமத்துவதுதான் எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. சிகரட் குடித்துவிட்டு வரும் என்னுடைய உதவி இயக்குநர்களை, அலுவகத்திற்குள்கூட நுழைய விடமாட்டேன்.அப்படி நான் வெறுக்கிற குற்றத்தை என் மீது சுமத்தாதீர்கள்.

என்னைச் சந்தேகப்படுங்கள். ஆனால் என் மீது தீர்ப்பெழுதாதீர்கள்.

ராமாயணத்தின் சீதையைப் போல, ஆனால் வாரா வாரம் நான் தீக்குளித்து என் கற்பை நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

இதுவும் கடந்து போகும்.
இதையும் கடந்து வருவேன்”””’ என்று அமீர் கூறியுள்ளார்.