கேரளாவில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் `புலிமுருகன்’. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகபதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. `புலிமுருகன்’ திரைப்படம் முதலில் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவுசெய்துவிட்டது.
தமிழில் ஜூன் முதல் வாரம் ரிலீஸ் செய்யப்படும் `புலிமுருகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. விழாவில் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.பிரபு, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், டப்பிங் யூனியன் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கே.டி.குஞ்சுமோன், நடிகர் நடராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் ரெண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் ஒரு பாடல் அம்மா சென்டிமென்ட் பாடல். இந்தப் பாடல் நிச்சயம் ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ”பாகுபலி திரைப்படம் அளவுக்கு இந்தப் படம் ஹிட் அடிக்கும். `புலிமுருகன்’ படத்தைத் தமிழில் டப்பிங் செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார். இவர் மட்டுமல்லாது பலரும் பேசும்போது பாகுபலி திரைப்படத்தை ஒப்பிட்டுப் பேசினார்கள்.
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, ”நான் இந்தப் படம் பார்த்தேன். படத்தில் மோகன்லால் தன் மாஸ் நடிப்பைk காட்டிவிட்டார். அதேபோல் இந்தப் படத்தில் மோகன்லாலின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்த குட்டிப்பையனும் நல்லா நடிச்சிருந்தான். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க, யாருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை’’ என்றார்.
`புலிமுருகன்’ படத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் ஆர்.பி.பிரபு. அவர் பேசும்போது, ”படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் நன்றாக வந்திருந்தது. அதற்குக் காரணம் டிசைனர் பவன்தான். இந்தப் படத்தில் எனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரபாகரன். தயாரிப்பாளர் டோமிச்சன் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. மலையாளத்தில், 2Dயில் வெளியான இந்தப் படம் தமிழில் 3D -யில் வெளியாகிறது. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் ‘புலிமுருகன்’ படம் ஹிட்டடித்தைப்போல் தமிழிலும் ஹிட்டடிக்கும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ”இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது நான் மறுத்தேன். `நீங்கள் பெரிய தயாரிப்பாளர். அதனால் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்’ என்றனர். நான் 33 வருடத்துக்கு முன்பு மோகன்லாலை வைத்து படம் தயாரித்தேன். இந்தப் படம் தமிழிலும் வெற்றி பெற வேண்டும் என்று நான் கடவுளை பிராத்தனை செய்து கொள்கிறேன்’’ என்றார்.
ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி(எ)நடராஜன், ”இந்தப் படம் முழுக்க மோகன்லால் உடன் புலியும் ஒரு கதாபாத்திரமாக வரும். அதற்காக படத்தில் 90 சதவீதம் ஒரு நிஜ புலியை நடிக்க வைத்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயம். புலியை நடிக்க வைப்பது சாதாரண காரியம் இல்லை. இந்தப் படத்தை தயாரித்தவருக்கு ஒரு பெரிய பாராட்டு. கண்டிப்பாக சினிமா மேல் தீராக்காதல் இருந்தால் மட்டுமே பணத்தை பற்றி கவலைப்படாமல் இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியும், படக்குழுவினருக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்