10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்-டைட்டிலுடன் ரிலீஸாகும் க/பெ ரணசிங்கம்!

5 இந்திய மொழிகளில் வரும் வெள்ளியன்று க/பெ ரணசிங்கம் வெளியாவதை கோலிவுட்டையும் தாண்டி பல உட்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 2ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ் படமாக அமைந்துள்ளது.

இதனிடையே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘க/பெ ரணசிங்கம்’ வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப்-டைட்டில் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

இது தவிர்த்து 150 நாடுகளில் ஒரே சமயத்தில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளம் இந்தளவுக்குப் பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளதால் ‘க/பெ ரணசிங்கம்’ படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.