திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் பா.இரஞ்சித் துவக்கிய நூலகம்!

இயக்குநர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு  உதவும் வகையில் ‘கூகை  திரைப் பட இயக்கம்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தி  இருக்கிறார்.  இதற்காக  பெரும் நூலகம்   உருவாக்க  வேண்டும்  என்கிற  நோக்கில்  நண்பர்கள் உதவியோடு  நூலகம்  ஒன்றை  துவக்கியிருக்கிறார். சென்னை, வளசரவாக்கம், ஜானகி நகரில் அமைந்துள்ள ‘கூகை  திரைப்பட  இயக்கம்’ அமைப்பின் அலுவலக திறப்பு விழா அணமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரபல மராத்திய படமான ‘சாய்ரட்’  படத்தின் இயக்குநரான நாகராஜ் மஞ்சுளே,  நடிகை குஷ்பு,  இயக்குநர்கள் ராம்,  லெனின் பாரதி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைத்துறை  சார்ந்த இயக்குநர்கள், மற்றும் உதவி இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

director nagaraj manjula

விழாவில் மராத்தி இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே பேசும்போது, “மராட்டிய மாநிலத்திலிருந்து  தமிழ்நாட்டுக்கு  வந்து  இப்படி  ஒரு  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  இயக்குநர்  இரஞ்சித்,  மாரி  செல்வராஜ்,  ராம்  உள்ளிட்ட நண்பர்களுக்கு  எனது  நன்றிகள். 

இங்கு  வந்ததும்  ‘பரியேறும் பெருமாள்’  படம்  பார்த்தேன்.  இந்தியாவில்  எல்லா மாநிலங்களிலும்  சாதி  ஒரே  மாதிரிதான்  இன்னமும் தனது  வன்மத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.  கலைஞர்களாகிய  நாம்  சாதி  ஒழிப்பைக் குறித்து  நமது  படைப்புகள் மூலமாக  ஒரு உரையாடலை  நிகழ்த்த  முடியும்.  அந்த  வகையில்  ரஞ்சித்தையும்,  மாரி செல்வராஜையும் நான் மனதாரப்  பாராட்டுகிறேன்.  இப்போது இந்த சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் என்னோடு  பயணிக்க, இந்த தமிழகத்தில்  எனக்கு இரண்டு தோழர்கள் இருக்கிறார்கள்  என்பதில் எனக்கு பெரும்  மகிழ்ச்சி.

இந்த ‘கூகை  திரைப்பட  இயக்கம்’  அமைப்பு  மூலமாக  நூலகம்  திறந்திருப்பது  நல்ல முயற்சி.  இந்த நூலகம் இயக்குநர்கள்,  உதவி இயக்குநர்களுக்கு  பெரும்  உதவியாக இருக்கும்.  வாசிப்பு  என்பது  திரைப்படத் துறையில்  இருப்பவர்களுக்கு  மிக,  மிக அவசியம். புத்தகம்  உங்களை  செழுமைப்படுத்தும்.  இந்த  நிகழ்வுக்கு  என்னை  அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி…”  என்றார்.

kushboo

விழாவில் நடிகை குஷ்பு பேசும்போது, “இந்த  நூலகம்  உதவி  இயக்குநர்களுக்கு மட்டுமல்ல  இயக்குநர்களுக்கும்  அவசியமான  ஒன்று.  என்  குழந்தைகளுக்கும்  வாசிப்பு பழக்கம் இருக்கிறது.  புத்தகம்  படிப்பது  நம்மை  தைரியமானவர்களாக்கும்.  யாரையும், எதையும் பயமின்றி தைரியமாக  எதிர்கொள்ளும்  ஆற்றலைத் தரும்.  இந்த  நூலகத்தை திறந்திருக்கும்  இயக்குநர்  பா.இரஞ்சித்திற்கு  எனது  வாழ்த்துக்கள்..”  என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “புத்தகங்கள்  மூலம்தான்  உலகை  அறிய  முடியும் என்பதை  நான்  உறுதியாக  நம்புகிறேன்.  நான்  புத்தகம்  மூலம்தான்  பலவற்றைத் தெரிந்து கொண்டேன். 

pa ranjith

உதவி  இயக்குநராக  இருந்தபோது  ஒவ்வொரு  புத்தகங்களையும்  தேடித் தேடி  வாசித்தேன். அப்போதுதான்  எனக்குள் ஒன்று  தோன்றியது.  உதவி  இயக்குநர்களுக்கு  என்று  ஒரு  நூலகம்  அமைக்க  வேண்டும்  என்று..! 

வாசிப்பின்  வழியாகவும், வாசித்ததை  உரையாடுவதின்  வாயிலாகவும்  ஒரு  படைப்பாளி நிறைய  கற்றுக் கொள்ள  முடியும்.  ஒரு  படத்தைப்  பார்த்தால் அதில்  காட்சி  வழியாக நமக்கு  எல்லாமே  காட்டப்பட்டுவிடும்.  ஆனால்,  ஒரு புத்தகத்தைப்  படித்தால்தான்  அந்த எழுத்துக்கேற்ப  நாம்  கற்பனை செய்ய முடியும். 

இந்த நல்ல விழாவிற்கு  வருகை  தந்த  ‘சாய்ரட்’  இயக்குநர்,  இயக்குநர்  ராம்  சார்,  தோழர் குஷ்பு  உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி…” என்றார்.