மெமரீஸ் மெமரியில் நிற்கிறதா?

இயக்குநர்கள் – ஷியாம் மற்றும் ப்ரவீன்
நடிகர்கள் – வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக்

கதை – மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நாயகன் தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு நடந்த கதையாக ஒரு கொலை விசாரணையை கூறுகிறான். ஒருவனின் மெமரியை அறிவியல் மூலம் அழித்துவிட்டு தப்பிக்கும் கொலையாளியை பிடித்த கதையை கூறுகிறான் ஆனால் உண்மையான கதை வேறு மாதிரியாக இருக்கிறது.

 

8 தோட்டாக்கள், ஜீவி, என திரில்லர் படங்களில் அசத்தும் நாயகன் வெற்றி நடிப்பில் வெளிவந்துள்ள படம். “மெமரீஸ்” படமும் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் தான் உருவாகியுள்ளது. ஷ்யாம் மற்றும் பிரவீன் என்ற மலையாள இரட்டை இயக்குநர் இயக்கியுள்ளார். வெற்றியை நம்பி போனால் குழப்பம் தான் மிச்சமாகிறது.

ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார். இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?” என கேட்கிறார்.

 

ஹீரோவை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா? அவரை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நோக்கி நகர்கிறது திரைக்கதை.


கேடபதற்கு நன்றாக இருக்கும் கதை படத்தில் பார்க்க அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. ஒருவர் மாற்றி ஒருவர் கொலையாளி என கதையில் வரும் டிவிஸ்ட்கள் நமக்கு எந்த ஆச்சர்யத்தையும் தருவதில்லை.

 

மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டலாம் முடிந்துள்ளது. ஆனால் அதை புரியும்படியான திரைக்கதையில் சொல்ல வேண்டுமே? படம் முழுக்க லாஜிக் மிஸ்டேக்குகள் அமெச்சூர் மேக்கிங்க் படத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது. படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

 

டைம்-ட்ராவல், சைக்காலஜி த்ரில்லர் படங்களில் கதைக்குள் கதை வைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், அப்படி படத்திற்குள்ளே சொருகப்படும் கதைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. இப்படத்தில் அந்த எல்லையை மீறி உள்ளனர். வெற்றி ஓரளவு நன்றாகவே நடிக்க முயற்சித்துள்ளார் ஆனால் தொடர்ந்து இப்படியான படங்கள் செய்தால் அவருக்கு அது மைனஸாகவே அமையும்.

இசை ஒளிப்பதிவு என எதுவும் படத்திற்கு எந்த பலமும் சேர்க்கவில்லை.மொத்தத்தில் மெமரீஸ் பெரும் குழப்பம்