பூமராங் – திரைப்பட விமர்சனம்!

0
709
சினிமாக்களில் எக்கச்சக்கமான வெரைட்டி உண்டு.. அந்த கால படங்களை விடுங்கள்.., இன்றைய சூழ்நிலையில் காதல் படம், குடும்பப் படம், பேய் படம்,சிரிப்புப் படம், அடல்ட் படம், யூத் படம் என்ற வரிசையில் யூஸ்ஃபுல் மெசெஜ் சொல்லும் சினிமா என்றொரு வகை உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத் தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் படத்தைப் பாருங்கள்.  உண்மைதான் இன்னொரு உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ள தண்ணீர் பிரச்னைக் குறித்து இன்றைய இளைஞர் களும் ரசிக்கும் விதத்தில் படமாகி இருக்கிறது பூமராங். அதாவது நாட்டில் ஆங்காங்கே உள்ள நதிகளை இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக ஏட்டளவில் (இணைய அளவில் என்றும் கொள்ளலாம்) அலசப்பட்டும் விஷயம்தான், ஆனால் இந்த நதி நீர் இணைப்பிற்காக அரசாங்கம் கொஞ்சம் கூடஎதுவும் செய்ததில்லை. மக்கள் நலனுக்கான இந்த திட்டங்களை எல்லாம் நடக்காமல் இருக்க காரணம் இன்றைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்தான் என்பதை சகலரும் புரியும் வண்ணம் படமாக வந்துள்ளது என்பதுதான் சிறப்பு.

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான், சேட்டை, இவன் தந்திரன் உள்ளிட்ட வெரைட்டியான கதைகளம் கொண்ட படங்களை இயக்கித் தனிக் கவனம் பெற்ற இயக்குநர் கண்ணன் கதை, திரைக் கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான பூமராங் கதை என்னவென்று கேட்டால் டைட்டில் ஓடிக் கொண்டிருக்கும் போதே காட்டுத் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சிவா என்பவர். பின்னர் உயிர் பிழைத்தாலும் அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். இதனிடையே ஆகாஷூகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என அழகான ஒரு டாக்டரம்மா கூற, அதற்கு ஒப்புக்கொண்டு அதே டைனிங்கில் மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் சக்தி (அதர்வா)வின் முகத்தைப் பிய்த்து எடுத்து சிவா விற்கு வைக்கின்றனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புகிறார் அவர்.

இதனால் சுமார் மூஞ்சியாக இருந்து அழகாகி விட்ட சக்தி முகம் கொண்ட சிவா-வான அதர்வாவின் அழகை கண்டு காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். அதையடுத்து லவ் , ரொமான்ஸ் போன்றவைகளுக்கு ஆயத்தமாகும் அதர்வா வை கொலை செய்ய அடுத்தடுத்து சில முயற்சிகள் நடைபெறுகிறது. இதிலிருந்து உயிர் பிழைக்கும் அவர் தன்னு டைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்கார ரான அதர்வா யார்? ஏன் அவரை கொலை செய்தார்கள் என அறிய ஒரு பயணம் போகிறார்.

அந்த பயணத்தின் ஊடே சக்தியின் பிளாஷ்பேக் கதை ஓடுகிறது. ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றும் சக்தி (அதர்வா), RJ பாலாஜி, இந்துஜா உள்ளிட்டவர்கள் கூண்டோடு வேலையில் இருந்து நீக்குகிறது நிறுவனம். பின்னர் என்ன செய்வது என அறியாது நின்றிருக்கும் அவர்கள் அதர்வாவின் குடும்ப நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுக்கிறார்கள். ஆனால் அந்த ஊரில் சொட்டு தண்ணீர் கூட இல்லை. ஊருக்கு தண்ணீர் கொண்டுவர 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு ஆற்றில் இருந்து இந்த ஊர் அருகில் இருக்கும் ஆற்றை இணைத்தால் விடிவு பிறக்கும் என முடிவெடுத்து அதற்காக போராடுகிறார்கள். அப்ப்டி நதிகளை இணைக்கவேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேறியதா? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள், பிரச்னைகள் பலவற்றை அப்பட்டமாக வெளிச்சமிடுகிறது பூமராங்

அதர்வா இந்த சிவா & சக்தி ரோலுக்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். எப்போதும் குளோஸ் அப் விளம்பரத்துக்கு கமிட் ஆனது போல் பல்லைக் காட்டி சிரித்தாலும் செம அழகாக இருக்கும் மேகா ஆகாஷுக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாயகன் ஆகி இருக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜஸ்ட் காமெடி மட்டும் செய்து கொண்டிருந்தவர் தன்னால் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க வரும் நிரூபிக்க முயன்று உள்ளார்.சுஹாசினி, காமெடியன் சதிஷ், இந்துஜா தங்கள் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர். பிரசன்னாவின் ஒளிப்பதிவு அருமை.. இசையமைப்பாளர் ராதன் கைவண்னத்தில் இரு பாடல்கள் இனிமை மற்றும் அருமை.

மொத்தத்தில் மீம்ஸ் மயமாகி விட்ட இன்றைய ஹைடெக் உலகில் நாம் பேசாமல் ஒதுக்கி விட்ட நதிநீர் பிரச்னையையும், ஐ.டி-யின் வீழ்ச்சியையும் ஒரு சேர கொடுத்திருக்கும் பார்க்கக் கூடிய படம்தான் பூமராங்.