டான் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி
தயாரிப்பு: லைகா புரொடக்‌ஷன், SK புரொடக்‌ஷன்
இயக்குனர்: சிபி சக்ரவர்த்தி
இசையமைப்பாளர்: அனிருத்
ஒளிப்பதிவு: KM பாஸ்கரன்
படத்தொகுப்பு: நாகூரான் ராமசந்திரன்

கல்லூரியில் யாருக்கும் அடங்காமல் தன் போக்கில் டானாக சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், தன்னை எப்படி கண்டுணர்ந்தான் என்பதே கதை.

படத்தின் மொத்த பலமும் சிவகார்த்திகேயன் தான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தனது திரை ஆளுமையால் படத்தை கட்டி இழுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட், காதல் என மூன்றும் கலந்து அமைந்த திரைக்கதையில் ஹீரோவுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான அளவு வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்முலா மறைந்து போய், வேறு பக்கம் திசை திரும்பியிருந்த படங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒரு முழுக்க முழுக்க கமர்சியல் எலமெண்ட்க்குகளை அள்ளி அணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது டான்.

படத்தின் ஒரு முகம் சிவகார்த்திகேயன் என்றால் இன்னொருமுகம் அனிருத். அனிருத்-ன் இசை இளைஞர்களுக்கான துள்ளல் வேகம் குறையாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய முகவரியாகவும், தூணாகவும் இருக்கிறது.

எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி என நடிப்பு அரக்கர்களை கமர்சியல் திரைப்படத்தில் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரம் எஸ் ஜே சூர்யாக்கு கை வந்த கலை என்றாலும், அவரை ஸ்கோர் செய்யவிட்டு, அதற்கு பதிலடியாக சிவகார்த்திகேயன் அங்கங்கு ஸ்கோர் செய்கிறார்.

பிரியங்கா மோகன் மற்று சிவகார்த்திகேயன் உடைய பள்ளி பகுதி ரசிக்கும் படியாகவும் ஏற்றுகொள்ளும் படியாகவும் இருக்கிறது. கல்லூரி கதை என்பதால், ஏராளமான நபர்களுக்கு மத்தியில் தான் கதை நகர வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி என அனைவருக்கும் காட்சிகள் வைத்து அதனை ஹீரோவுடன் பயணிக்கும் படியான திரைக்கதையை அமைத்தது இயக்குனர் சிபியின் தந்திரம். இதன் மூலம் அவர்களும் தெரிவார்கள், ஹீரோ ஜொலிப்பார் என்ற கமர்சியல் சினிமாவின் சூட்சமத்தை சரியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். அறிமுக இயக்குனரிம் அருமையான கமர்சியல் படம் இந்த டான்.