கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

மா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் வீரன் குறிச்சு நம்ம  கட்டிங் கண்ணையா சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிறக்காக தயார் செய்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ”

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைஞ்சுது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் வெளியான தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைச்சிருந்தார். இந்த படம் வெளியாகி இன்றோடு (பிப்ரவரி 23) 15 வருஷங்கள் ஆகுது.

மெட்ராஸ் ஜெயிலைப் பார்ப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு ஊருக்குள் ஒரண்டை இழுத்துத் திரியும் சண்டியர் கேரக்டர் கார்த்திக்கு. “அப்பத்தா… இவன்தான் சிவக்குமாரோட இளையமகன்.. வெளிநாட்டுல படிச்சிருக்காப்ல” என்று பருத்திவீரன் போஸ்டரை தண்டட்டி கிழவிகளிடம் காட்டியிருந்தால் எந்தக் கிழவியும் நம்பி இருக்காது. அந்தக் கேரக்டருக்கு அப்படியே பொருந்தியிருப்பார். அழுக்கு லுங்கியும் ஷேவிங்கே பார்த்திராத தாடியுமாக ‘கண்ணை மூடுனா கனவுல நீதானே’ என்று ரவுசு காட்டிய கார்த்திக்கு சிட்டி பெண்களும் லவுசு காட்டினார்கள். ஒரு ஹீரோவுக்கு முதல் படம்னா தக்காளி இப்படி அமையணும்டா என்று இண்டஸ்ட்ரியவே பொறாமைப் பட வைத்தது பருத்திவீரன்.

இது பத்தி கார்த்தி, ‘‘தூங்கும்போது வருவது கனவு இல்லை. உன்னை தூங்க விடாம செய்யறதுதான் கனவுன்னு சொல்லுவாங்க. எனக்கு தூக்கத்துலகூட கனவு இருந்தது இல்லை. நல்லா படிக்கிற முதல் பெஞ்ச் பையனா இருந்துட்டா, எல்லாரும் கொண்டாடுவாங்க. எதுக்குமே அடங்காத கடைசி பெஞ்ச் பையனா இருந்தா, மத்தவங்க பார்வை உங்க மேல இருந்துக்கிட்டே இருக்கும். ரெண்டுலயும் இல்லாம, நடுவுல மாட்டிக்கற ஆவரேஜ் பசங்க நிலைமை பரிதாபம். அவங்களைப் பத்தி பாசிட்டிவா சொல்றதுக்கும் ஒண்ணும் இருக்காது; நெகட்டிவா சொல்றதுக்கும் ஒண்ணும் இருக்காது. நான் அப்படி இருந்தவன்தான். ஆனா இப்ப மனசுக்குப் பிடிச்ச துறையில, ‘நானும் இருக்கேம்பா’ன்னு எனக்கான இடத்தை பிடிச்சதுல இப்பதான் நிம்மதிப் பெருமூச்சே விடமுடியுது!’’அப்படீன்னாராக்கும்

நடிகர் கார்த்திக்கு முதன் முதலில் படத்தில் இயக்குனராக வேண்டும் என்பது தான் கனவு. பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார். அதனால் தான் இவர் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் கார்த்தி சினிமாவிற்கு போவேன் என்று அடம் பிடிச்ச சுவாரஸ்யமான விஷயங்களை சொன்னது நினைவுக்கு வருது “சின்ன வயசில் இருந்தே கார்த்திக்கு சினிமாவில் தான் அதிக ஆர்வம். ஒரு முறை அவன் லீவுக்காக சென்னைக்கு வந்து இருந்தான். அப்போது விக்ரமோட காசி படம் வெளியாகி இருந்துச்சு. அந்த படத்தை பார்த்து விட்டு அவனுடைய மைன்ட் செட்டு ஃபுல்லா சினிமா துறை என்று முடிவு செஞ்சிட்டான். அப்போ வெளிநாட்டுக்கு படிக்க போக மாட்டேன்னு சொன்னான். நான் என்ன பாவம் பண்ணுனேன். போய் படி படின்னு சொல்றீங்களே. நான் எதை நோக்கி போக நினைக்கிறேன். ஆனால், இப்படி நீங்க பண்றீங்களேன்னு சொன்னான். உடனே நான் உங்க அண்ணனுக்கு நடிக்கணும்னு ஆசை இல்லை. ஆனால், அவனுக்கு வாய்ப்பு தானா தேடி வந்தது. உனக்கு ஆசை இருக்கு. ஆனால், உனக்கு வாய்ப்பு வரல. இயக்குனர் பாலா, சங்கர் யாராவது வந்து ஆறு மாசத்துக்குள்ள உன்னை ஹீரோவாகுக்கிறேன் என்று சொல்ல சொல்லு நான் இப்போவே பாஸ்போர்ட்டை கிழித்துப் போட்டுறேன் என்று சொன்னேன். உடனே அவன் படிக்க வெளிநாட்டிற்கு போயி படிப்பையும் பக்காவா முடிச்சிட்டான். அங்கே அவனுக்கு மாசம் 1 லட்ச ரூபாய் சம்பளம். ஆனால், அவன் இந்தியா தான் என்னுடைய நாடு, சினிமா தான் என்னுடைய உலகம் என்று சொல்லிட்டு வந்துட்டான் “ ன்னு சொன்னார்.

அதே சமயம் தன் வாழ்க்கைப் பயணம் குறிச்சு கார்த்தி, “‘முதல் பையன்ங்கிறதால அம்மாவுக்கு அண்ணன்தான் அதிக செல்லம். ஒரே பொண்ணுங்கிறதால அப்பாவுக்கு தங்கச்சி அதிக செல்லம். ரெண்டு பேருக்கும் நடுவுல நான். நடுவுல சிக்கறது அங்க இருந்து ஆரம்பிச்சது. நான் படிச்ச ஸ்கூல் விளையாட்டுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும். படிப்பு, விளையாட்டு – ரெண்டுல ஏதாவது ஒண்ணு இருந்தாதான் மத்தவங்க பார்வையே பசங்க மேல விழும். நண்பர்கள்னு பார்த்தா, என் ஏரியாவுல இருந்த எல்லாரும் அண்ணன் வயசு பசங்க. அப்படி இல்லேன்னா, பந்தை உருட்டி விட்டு விளையாடுற சின்ன வயசு சுள்ளானுங்க. அண்ணனோட நண்பர்கள், ‘சின்ன பையன்’னு சொல்லி விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க. சுள்ளானுங்களோட போய் என்னால விளையாட முடியாது. கிட்டத்தட்ட எல்லா இடத்துலேயும் நான் இருப்பேன்; ஆனா, தனியா எந்த அடையாளமும் இல்லாம! அதுனாலே எனக்கான கற்பனை உலகத்தில் தனியா இருந்திருக்கேன்.

ஆனாலும் ஏதாச்சும் கதையா மத்தவங்களுக்கு எதைச் சொன்னாலும், வார்த்தை களால இல்லாம விஷுவலா சொல்வேன். என்னோட தனித்திறமைன்னு சொன்னா, இது மட்டும்தான். சினிமா பார்க்க ரொம்ப பிடிக்கும். அதுலேயும் தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னால ‘பிரிவ்யூ’ பார்த்துட்டு மத்தவங்களுக்கு கதை சொல்லப் பிடிக்கும். சினிமா என்னுடைய ஆர்வம்னு வீட்ல காட்டிக்கிட்டதுகூட இல்லை. எல்லாருடைய வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியமான பால்ய காலத்தில், எனக்குன்னு எந்த அடையாளமும் இல்லை. வீட்டைப் பொறுத்தவரைக்கும் சமத்து பையன். பிஸிக்கல் ஆக்டிவிட்டி எதுவும் இல்லாம கொஞ்சம் குண்டா, மொழு மொழுன்னு இருப்பேன். யார்கிட்டேயும் வெளிப்படுத்தாத தாழ்வு மனப்பான்மை எனக்குள்ள இருந்துச்சு.

மத்தவங்க கிண்டல் பண்ணாலும் ‘வலிக்கவே இல்லையே’ங்கிற மாதிரி நடந்துக் கிட்டேன். தாழ்வு மனப்பான்மை போறதுக்கு தன்னம்பிக்கை புத்தகங்கள் ஏகப்பட்டது படிச்சேன். அதெல்லாம், ‘கோபப்படாதே, முன்னேறு, தடைகளை உடை’ன்னு கரடுமுரடா இருக்கும். கோபப்பட்டா குறைக்கலாம்; கோபமே படமுடியாத வயசுல ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ படிச்சு என்ன பண்றது? படிச்சதை எப்படி, எங்க அப்ளை பண்றதுன்னு தெரியாது. ஆனா, படிச்ச விஷயம் எப்பவும் வீணாகாதுங்கறது இப்போ புரியுது. அப்போ படிச்ச விஷயங்கள், இப்போ வரைக்கும் உதவியா இருக்கு” என்று மெச்சூரிட்டியா சொன்னார்

கூடவே அப்பா சிவகுமார் கூறியது பற்றி கேட்டப் போது, ” சினிமா என்னுடைய எதிர்காலம்னு பள்ளிப் பருவத்தில் நினைச்சதில்லை. ஆனா, ஒரு படம் விடாம எல்லாத்தையும் பார்த்துட்டு நண்பர்கள்கிட்டே பேசுறது மட்டும் நடந்து அதுக்குன்னு பேன்ஸ் கூட எனக்குண்டு என்பது தனிக்கதை. அப்போ அண்ணன் சூர்யா கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்குப் போயிட்டிருந்தார். அவர் ஒரு மில் எப்படியும் ஆரம்பிச்சுடுவாரு. படிப்பு முடிச்சிட்டு ‘சின்ன முதலாளி’ங்கிற அந்தஸ்தோட போய் பிசினஸ் பார்க்கப் போறேன்னு நம்பிட்டு இருந்தேன். திடீர்னு அவரும் நடிக்கக் கிளம்பிட்டார். ‘நேருக்கு நேர்’ ஆரம்பிச்ச பிறகு டான்ஸ், ஸ்டன்ட்னு பிஸியா ஆனாரு. நானே பார்க்காத அளவு, என் சினிமா கனவு எனக்குள்ள விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சது. ஒரு ஃபேக்டரில வேலைக்கு சேர்ந்து, ஒரு ஃப்ளாட், கார் எல்லாம் வாங்கி, கல்யாணம் செஞ்சிக்கிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆக என்னால முடியாதுன்னு தோணுச்சு. ஆனாலும், படிப்பை கண்டிப்பா முடிச்சிடணும்னு உறுதியா இருந்தேன்.

ஆனா படிப்பு முடிச்சதும், மேல்படிப்புக்கு வெளிநாடு போகலாம்னு சொன்னாங்க. அப்பதான் அப்பாகிட்டே முதல்முறையா உட்கார்ந்து பேசினேன். ‘நானும் சினிமாவுக்குப் போறேன்’னு சொன்னது அவருக்கு அதிர்ச்சியா இருந்திருக்கலாம். ஆனா, வெளில காட்டிக்கலை. அப்பா நடிக்கிறதை குறைச்சிக்கிட்டே வந்தார். அதனால் வருமானம் குறைஞ்சது. அண்ணன் அப்பதான் அறிமுகம் ஆனதால அவருக்கும் வருமானம் இல்லை. எஞ்சினியரிங் முடிச்சு நான் வேலைக்குப் போய் குடும்பத்துக்கு உதவியா இருப்பேன்ங்கிற எதிர்பார்ப்பு அவருக்குள்ள இருந்திருக்கலாம்.

சினிமாவில் வெற்றி எப்பவும் நிலையில்லை. ஜெயிச்ச பிறகும், ரெண்டு படம் ஒழுங்கா ஓடலைன்னா வீட்ல உட்கார வச்சுடுவாங்க. சம்பாதிக்க வேண்டிய மூன்று பேரும் சினிமாவில் இருப்பது அறிவுப்பூர்வமான முடிவா எனக்கே படலை. எல்லாத்துக்கும் மேல நான் சினிமாவுக்குப் போனா கண்டிப்பா ஜெயிப்பேன்னு சொல்ற மாதிரி அதுவரைக்கும் எதுவுமே பண்ணலை. சினிமா வெறும் ஆசையா மட்டும் இருந்துட்டா, அதைவிட பெரிய ஆபத்து எதுவும் இல்லை. என் முன்னால இருந்தது ரெண்டே சாய்ஸ்தான். மனசு விரும்பின சினிமாவை எதிர்காலமா தேர்ந்தெடுக்கிறதா? இல்லை கையில இருக்கிற எஞ்சினியரிங் படிப்பை வச்சு வாழ்க்கையில செட்டில் ஆகிறதா? சினிமா குழப்பத்தின் உச்சமாவும், படிப்பு தெளிவின் ஆரம்பமாவும் இருந்தது. அமெரிக்காவுக்குப் போய் எம்.எஸ். படிக்க முடிவெடுத்தேன். வாழ்க்கையில் சில நேரம் குழப்பம் நல்லதாவும், தெளிவு கெட்டதாவும் இருக்கும்னு காலம் உணர்த்திச்சு(கட்டிங் கண்ணையா)

இத்தனைக்கும் அப்பா தெளிவா ஒரு விஷயம் சொன்னார்… ‘சினிமாவுக்குதான் வரணும்னு நினைச்சா, இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வா. வெளிநாட்டுக்குப் போய் படிக்கிற வாய்ப்பு ஆயிரத்துல ஒருத்தருக்குத்தான் கிடைக்கும். உனக்குக் கிடைச்சிருக்கு. போய்ப் படி. அனுபவத்தைத் தொலைச்சிடாத’ன்னு அவர் சொன்னது சரின்னு தோணுச்சு. சினிமா கனவை உள்ளுக்குள்ளேயே வச்சிக்கிட்டு, வெளிநாட்டில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வு எழுதத் தயாரானேன். அப்படியே, சென்னையில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தேன். 4,300 ரூபாய் மாத சம்பளம். ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்கிறதுக்கும் எவ்ளோ கஷ்டப்படணும், எத்தனை பேருக்கு பதில் சொல்லணும்னு அப்பதான் தெரிய ஆரம்பிச்சது. ‘எனக்கு இது எதுவும் வேண்டாம். என்னை சினிமாவுல விட்டுடுங்க. நான் ஏதாவது பண்றேன்’னு சத்தமா கத்தணும்னு அப்பப்ப தோணும்’

அந்த வகையில் அது இது எதை எல்லாமோ செய்து திரைப் படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்த நடிகர் கார்த்தி முதன்முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2004 ஆம் ஆண்டு தனது அண்ணன் நடித்த ஆயுத எழுத்து திரைப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் தனது அண்ணனின் தோழனாகவும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்த இத்திரைப்படம் கார்த்தி வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது

ஆனா சில பிச்சைக்கார ஊடகம் சொன்னது போல் ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் ‘பருத்திவீரன்’ பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம்’ என்பதெல்லாம் டுபாக்கூர் கார்த்தி தன் நிலை மறந்து பல காலமாயிற்று என்பதும் தன்னை புரொமோட் செய்யும் ஊடகவாசிகளை ஒரு முறை கூட பிரத்யேகமாக மீட் செய்யாதவர் என்றாலும் தன் பீ ஆர் ஓ மூலம் சில டெய்லி உள்பட மீடியாவாசிகளுக்கு மாச சம்பளம் கொடுத்து தன்னை லைம் லைட்டில் அப்டேட் செய்து கொள்கிரார் என்பதும் தனி சோக எபிசோட்

இப்ப இந்த ப.வீ. கதைக்கு வருவோம்.. டைரக்டர் அமீர், கதாநாயகன் அமீருக்கு அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படமென்றும் இந்த சினிமாவை அடையாளப்படுத்தலாம். அதுவரை மேலைநாட்டுப் பாணியை ஒத்திருக்கும் இசைக்காக மட்டுமே அறியப் பட்டிருந்த யுவன் தன்னால் நாட்டாரியல் இசைக் கருவிகளில் கிராமத்து மண்மனம் வீசும் இசையைக் கச்சிதமாகவும் அற்புதமாகவும் அளிக்க முடியும் என்று பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசை மூலமாகவும் நிரூபித்து அனைவரையும் வியக்க வைச்சார். ‘அறியாத வயசு’, ‘அய்யய்யோ’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் கிராமத்துக் காதல் பாடல் தொகுப்புகளில் என்றென்றும் தவிர்க்க முடியா இடம் பிடித்தன. ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல். அந்தப் பாடலும் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்று. படம் முழுக்கவே தமிழ் நாட்டாரியல் இசையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக யுவன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெறுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நிகழவில்லை .

முத்தாய்ப்பாக இப்படத்தின் டைரக்டர் அமீரிடம் இப்படம் பற்றி கேட்டப் போது , “பருத்திவீரனைப் பற்றி கூறவேண்டுமென்றால் நான் கிராமத்தில் பிறந்து வளர வில்லை என் நண்பர்கள் பலர் கிராம பின்னணியிலிருந்து வந்தவர்கள். அப்படி கிராமங்களுக்கு பயணப்படும் போது அந்த வாழ்வியல் என்னை அப்படியே ஈர்த்துவிட்டது. அந்த மனிதர்கள். அவர்களின் அன்பு அதை வெளிக்காட்டும் விதம் அனைத்தையும் நான் உள்வாங்கி எனக்குள்ளேயே ஒழித்து வைத்திருந்தேன். இதை எல்லாம் நான் சேர்த்து கொண்டுவந்த இடம் தான் பருத்திவீரன். அதற்கடுத்ததாகவும் எனக்குள்ளே பல கிராமத்து கதைகள் வைத்திருந்தேன்.

இச்சூழலில் படத்தின் இயக்குநர் அமீரிடம் பேசிய பேசிய போது, “ “பருத்திவீரனுக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வலி இருக்கிறது. ஒரு அப்பள கம்பெனி பத்திரிகை ஒன்றில் பருத்திவீரனின் திரைக்கதை புத்தகம் வெளிவந்தபோது அதன் முன்னுரை யில் இத்திரைப்படத்தை நான் எடுத்திருக்கவே கூடாது என்று குறிப்பிட்டுள்ளேன். அப்படம் எனக்கு அங்கீகாரம், அடையாளத்தை கொடுத்தாலும் ஒரு மனிதனாய் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரலை வலிகளை மட்டுமே தான் தந்துசுன்னு சொல்லணும். அந்த வலிகளை பற்றிக் கூறினால் அதற்கு காரணமானவர்களை பற்றி கூறவேண்டும். அவர்களின் பின்புலத்தை கூறவேண்டும். அதனால் அதைப் பற்றி பேச வேண்டாம். ஆனாலும் பருத்திவீரனைப் பற்றி கூறவேண்டுமென்றால் நான் கிராமத்தில் பிறந்து வளரலை . ஆனா என் நண்பர்கள் பலர் கிராம பின்னணி யிலிருந்து வந்தவர்கள். அப்படி கிராமங்களுக்கு பயணப்படும் போது அந்த வாழ்வியல் என்னை அப்படியே ஈர்த்துடுச்சுது. அந்த மனிதர்கள். அவர்களின் அன்பு அதை வெளிக்காட்டும் விதம் அனைத்தையும் நான் உள்வாங்கி எனக்குள்ளேயே ஒழித்து வைத்திருந்தேன். இதை எல்லாம் நான் சேர்த்து கொண்டுவந்த இடம் தான் பருத்திவீரன். அதற்கடுத்ததாகவும் எனக்குள்ளே பல கிராமத்து கதைகள் வைத்து இருந்தேன்.ஆனால் பருத்திவீரனின் வெற்றியினால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட பல கிராமத்து கதைகள் வெளிவர தொடங்கின. சுமார் பத்து வருட காலத்திற்கு இதே போல படங்கள் வெளியாகி மக்களை படாத பாடு படுத்திவிட்டன. இதைக்கண்டு எனக்குள்ளும் ஒரு சோர்வு உண்டாகி சில வருசம் சினிமா பக்கமே எட்டிப் பார்க்காம இருந்தேன்” என்று சொன்னதுதான் ஹைலைட்

✍️கட்டிங் கண்ணையா