மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பீர்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞான வித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் ” ஆந்தை சினிமா  பிரஸ் கிளப்” பெருமை கொள்கிறது!!🙏

லாங்க் ட்ராவலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில் திரை தீப்பிடிக்காத காலகட்டத்தின் நாயகர்களின் அறிமுகப் பாடல் மூலம் ரசிகர்களுக்கு தீயைக் கடத்தியதும் அந்தக் குரல்தான். இப்படி இருவேறு தொனிகளில் ஜாலங்களை நிகழ்த்தி, பலரது மனங்களை மயக்கிய அந்த மாயக்குரல் மலேசியா வாசுதேவனுடையது.

16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை மாறுபட்ட குரலில் பாட வேண்டும். அப்போது எஸ்பிபிக்கு தொண்டை கட்டி குரல் கம்மி போயிருந்தது..

“என்னய்யா இது.. பாலுக்கு இப்பப் போய் உடம்பு சரியில்லையாமே..என்ன செய்ய” என்று பாரதிராஜா டென்ஷனனார்..

ஏன் புலம்பறே.. அமைதியா இரு” என்று சொல்லி பின்னாடி திரும்பினார் இளையராஜா..

அங்குக் கூட்டத்தில் ஒருவராக இருந்தவரிடம் “வாசு.. டிராக் ஒன்னு பாடணும்.. சரியா பாடிடுடா.. அப்படி பாடிட்டா, இந்த பாட்டில இருந்து உனக்கு எல்லாமே வெற்றிதான்” என்று இளையராஜா சொன்னதுதான் மலேசியா வாசுதேவனின் ஏணிப்படியின் துவக்கப்புள்ளி!!

தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆயின.

80களில் வானொலியில் இவர் பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். ‘மலர்களே நாதஸ்வரங்கள்’, ‘கோடைக்கால காற்றே’, ‘இந்த மின்மனிக்கு கண்ணில் ஒரு’, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘ஆகாய கங்கை’, ‘கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ’, ‘பூவே இளையபூவே’ என அடுத்தடுத்த மெஹா ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் காதுகளில் இசைத்தேனை பாய்ச்சினார்.

அதிலும் ‘முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே நீர் கொடுத்த நீரையெல்லாம் நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன் சீராக ஏரோட்டி பார் முழுக்க சோர் கொடுத்து காக்க போறேன் ஆதரிக்க வேனும்மையா…’என்றொரு தொகையறாவைப் போட்டு விட்டு ‘ஏத்தமையா ஏத்தம் ஏலேலங்கடி ஏத்தமய்யா ஏத்தம்’ என்று பாடும் போது அச்சொட்டாகக் களத்து மேட்டில் சேற்று மண்ணால் ஊத்தை படிந்த கமக்காரன்தான் நினைவுக்கு வருவான். அதிலும் அந்தப் பாட்டில் நாயகியின் எள்ளலுக்கு முகம் கொடுத்து ‘கோவணமும் இல்லை கையில் காசுமில்ல பாட்டு வருதே என்ன புள்ள’ என்று வெள்ளாந்தியாகப் பாடும் போது வயல்காட்டில் வழிந்தோடும் தண்ணீரில் கால் அலம்பும் போது குளிர்விக்கும் இன்பம். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரின் படங்களில் இந்தப் பாடகர் கண்டிப்பாக இருப்பார் எனும் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை. பாலுமகேந்திரா, ஃபாசில் போன்ற இயக்குநர் படங்களில் எப்படியொரு கே.ஜே.ஜேசுதாஸ் இருப்பாரோ அதுபோலவே பாரதிராஜாவுக்கு எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவனும்.

ஒரு பேட்டியின் போது “யாரிடமும் நான் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்ததுமில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் ம்லேசியாவிலிருந்து இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன்” என்று சொன்னார் அவர்.

ஆனால் 2003 ஆம் ஆண்டில் மூளையில் ஏற்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். சொல்லும்படியாக சினிமாத் துறையினரிடமிருந்து ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவில்லை. நலம் விசாரிக்கக் கூட எவரும் முன் வரவில்லை! மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிந்தது. ஆனால் ஒரு சுரத்தைக் கூட அவரால் பாட முடியவில்லை. தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவந்திருக்கலாம் தான் ஆனால் அதற்க்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இருந்த்தில்லை. யாருமே உதவவுமில்லை.

அவர் இறந்த செய்தி கேட்டவுடன் போட்டி போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய இசைமேதைகள், பல பல பாடல்களில் அவரது குரலுக்கு வாயசைத்த் திரை நட்ச்த்திரங்கள் போன்ற ஏறத்தாழ அனைவருமே கடந்த இருபது ஆண்டுகளாக அவரை முற்றிலுமாக புறக்கணித்தவர்கள். எப்போதாவது நிகழும் ஒரு தொலைபேசி அழைப்பையோ ஒரு சந்திப்பையோ தவிர இவற்களிடமிருந்து எதையுமே அவர் எதிர்பார்த்த்தில்லை.

மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை பாடிய பாடகர் மலேசியா வாசுதேவன். திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் உயிருடன் இருக்கும்போது நாம் அவரை கொண்டாடவேயில்லை.

ஹூம்.. இதனால்தான் இந்த சினிமாவை கனவுலகம் என்கிறார்கள் போலும்..காலன் அவரை கொண்டு போனாலும் நடிப்பிலும் வில்லனாக, குணசித்திர நடிகராக பல கேரக்டர்களில் வாழ்ந்த மலேசியாவுக்கு இன்று நினைவு நாளில் அவர் இல்லையென்றாலும் அவர் குரல் வழியே என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நம்பி அஞ்சலி செலுத்துகிறது