நக்கல் மகாராஜா கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

வுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்💐

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் பகுதியில் பிறந்தவரின் நிஜப் பெயர் சுப்ரமணி. திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான ‘ராமன் எத்தனை ராமனடி’ கவுண்ட மணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே ‘சர்வர் சுந்தரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் கவுண்டமணியாக அறிமுகம் ஆனார்.

முன்னதாக மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், சக நடிகர்களுக்கு கவுன்ட்டர் கொடுப்பதில் வித்தகர். அதனால் கவுன்ட்டர் மணியாக அறியப்பட்டார். அதுவே பின்னாளில் கவுண்ட மணியாக நிலைத்தது. கவுண்டமணி ஒரு சீனில் இருக்கிறார் என்றால் அவரது குரலை மட்டுமே தான் நமது காதில் விழுந்துகொண்டிருக்கும். சத்தமே இல்லாமல் உடல் மொழியால் மட்டுமே நம்மை சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். கவுண்டமணியின் நகைச்சுவை சற்று நாடகத் தன்மை மிகுந்தது. வசனங்களை மேடையில் பேசுவது போன்ற பாணியில் பேசுவது அவரது வழக்கம் ஆனால் தனது குரலை தனது இருப்பை நிலைநாட்ட அவர் சத்தமாக பேசுவது அவர் கத்தி பேச வேண்டியதாக இருக்கிறது. இது திரையில் ஒரு தரப்பான ஒரு நகைச்சுவையாக மாறிவிடுகிறது.

அதிகாரவர்க்கத்தைத் தோலுரிப்பதாக இருந்தாலும் சரி; மோசமான அரசியல்வாதிகளை துவைத்துக் கட்டுவதாக இருந்தாலும் சரி, நகைச்சுவையில் கவுண்டமணியின் பாணியே தனிதான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதிய வாதத்துக்கு எதிராகவும் தனது கருத்துகளைப் படங்களில் விதைக்கவும் அவர் தவறியதில்லை. நட்சத்திர நடிகர்களைத் திரையில் ஓட்டும் அளவு சுதந்திரத்தைப் பெற்றிருந்தார். அதை அவர்கள் அனுமதிக்கும் அல்லது வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொள்ளும் அளவுக்குத் திரைத் துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார் கவுண்டமணி. இந்த விஷயத்தில் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை என்று சொல்லலாம்.

அதேநேரம், காமெடி எனும் பெயரில் உருவ கேலியைப் பரவலாக்கியது, வயதில் மூத்தவர்களை இழிவுபடுத்துவது, எளிய மனிதர்களைக் கிண்டலடிப்பது என மக்களிடையே கவுண்டமணிமீது சில விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக கவுண்டமணியை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கவும் முடியாது. அதுதான் கவுண்டமணி!

எது எப்படியோ ஒரு காலத்தில் கவுண்டமணி இல்லாமல் திரைப்படங்கள் வெளியாகவே இல்லை என்று சொல்லாம். இதுவரை அவர் நடித்துள்ள 750-க்கும் மேற்பட்ட படங்களில் 450-க்கும் மேற்பட்ட படங்கள், செந்திலுடன் கூட்டணி அமைத்து நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆக ‘பார்த்தால் காமெடியன், பேச்சில் அறிவாளி’ என்று கவுண்டமணி குறித்து இயக்குனர் மணிவண்ணன் கூறுவது வழக்கம். உலக சினிமா மீதும் தத்துவங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர் கவுண்டமணி. அதனால்தான் சினிமாவில் அரசியல் நையாண்டி வசனங்களை அதிகமாக பயன்படுத்துவார்.அதேபோல கவுண்டமணியின் உடல்மொழியும் அவரது நகைச்சுவையில் ரசிக்கும்படியான விழிப்புணர்வு கருத்துகளும் பிரபலம் வாய்ந்தவை. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் சினிமாவில் தொடர்ச்சியாக நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதாவது , நகைச்சுவை நடிகருக்கு துளிர் விடும் ஹீரோ கதாபாத்திரம் கவுண்டமணிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? படையப்பா வில்லி ரம்யா கிருஷ்ணன் உடன் ஜோடியாக நடித்த ராஜா எங்க ராஜா, நீங்களும் ஹீரோதான், பிறந்தேன் வளர்ந்தேன் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த கவுண்டமணி சறுக்கலை மட்டுமே சந்தித்தார்.எனினும், அதனையும் தாண்டி பல வெற்றிப் படிகளை தமிழ் சினிமாவின் தடங்களாக மாற்றிய கவுண்டமணிக்கு ஆனால் இன்றும் மீம்ஸ் போடும் இணையவாசிகளின் ஆதர்சநாயகனே கவுண்டமணிதான். அதனால் தான் தலைமுறைகளை கடந்து இன்றும் அவர் பிரபலமாக இருக்கிறார்.

கோலிவுட் சினிமாவின் மறக்க முடியா கலைஞனுக்கு பிறந்தநாளில் வாழ்த்துவதில் சினிமா பிரஸ் கிளப் பெருமை கொள்கிறது