பாசமலர் படம் ரிலீஸ் ஆன தினமின்று!

கூத்து, நாடகம், மேடை ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சினிமா பக்கம் திரும்பிய காலம் அது. தெலுங்கு மற்றும் மலையாள பட உலகில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நடிகையர் திலகம் சாவித்திரி பாசமலர் படத்திற்காக தங்கை கதாப் பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஜோடி யார் தெரியுமா? உண்மை வாழ்க்கையிலேயே இவருக்கு கணவராக அமைந்த ஜெமினி கணேசன்தான்..!ஆனால் இக்கதை இவர்களது காதல் பற்றி அல்ல. அண்ணன் தங்கை பாசத்தை பற்றி. சாவித்திரிக்கு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். “என் தங்கைதான் எனக்கு எல்லாம்..என் உலகமே அவதான்..” வசனம் இன்றளவும் பல படங்களில் ரெஃபரன்ஸாக உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி… வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

’பாசமலர் படம் பாத்திருக்கீங்களா’ என்று நெருங்கியவர்களிடம் கேட்டால், நம் மேல் அவர்கள் கொண்ட பாசமே பங்கமாகிப் போனாலும் ஆச்சரியமில்லை. சுள்ளென்று கோபமாகி விடுவார்கள். . அந்தப் படத்தை பலமுறை பார்த்தவர்களே அதிகம். மன்னன், மந்திரி, நாடு, தேசப்பற்று, சுதந்திரம், போர், சண்டை என்று வந்துகொண்டிருந்த படங்களுக்கு இடையே, பராசக்திக்குப் பிறகுதான் உறவுகளின் அடர்த்தியையும் அதன் உன்னதங்களையும் மையப்படுத்திய படங்கள் அதிகமாக வரத்தொடங்கின. அந்த வகையில் அண்ணன் தங்கை உறவை உயிர்ப்புடன் சொன்னதில்தான் இன்றைக்கும் மலர்ந்து, மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது ’பாசமலர்’.

ஆம்.. பாசமலர் படத்தில் வரும் காட்சிகளும் அதன் வசனங்களும் அன்றைய பாலசந்தர் தொடங்கி, இன்றைய கார்த்திக் சுப்பராஜ் வரை, பல இயக்குநர்களின் படைப்புகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். சிவகார்த்திகேயனின் எங்க வீட்டு பிள்ளை படத்தில், பாசமலர் டைலாக்கை ஒரு பாட்டில் உபயோகித்திருப்பர். படத்தில் மட்டுமா? நிஜத்தில் கூட பாசமாக உள்ள அண்ணன் தங்கையை இந்த படத்தின் பெயரை வைத்துதான் குறிப்பிடுவர்.

தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படைப்புகளுள் இன்றைக்கும் ஒன்றாக பார்க்கப்படும் பாசமலர் படம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அது மட்டுமன்றி, இந்தி,தெலுங்கு,கன்னடம் மற்றும் சிங்களத்தில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 2013-ல் டிஜிட்டல் உருவாக்கம் செய்யப்பட்டு 70 திரையரங்குகளில் வெளியாகி ஒருமாத காலம் ஓடியிருக்கிறது. 50 ஆண்டு களுக்கு முன் பார்த்து அழுத ஆயிரக்கணக்கான கண்கள், திரையரங்குகளைத் தேடிவந்து ‘பாசமல’ரைப் பார்த்து மீண்டும் கண்ணீர் உகுத்தது, இன்றைய தலைமுறைக்கு அதிசய செய்தியானது.

அண்ணன் – தங்கையின் பாசத்துக்கும், திரையில் ‘பாசமல’ராக மலர்ந்தபோது, உச்சிமுகந்து கொண்டாடினார்கள் தமிழர்கள். ‘பாசமலர்’ படைத்த சாதனைகளால், என்றைக்கும் வாடாத மலராக மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த படைப்பின் பின்னால், தங்களுடைய ஆகச் சிறந்த பங்களிப்பைத் தந்த ஆளுமைகள் நம்முடைய நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார்கள். திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் சிவனாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருப்பர். இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் படத்தில் சிவன்-பார்வதி வேடத்தில் வரும் இவர்களது போட்டோவையே ஃப்ரேம் போட்டு கும்பிட தொடங்கினர். அந்த அளவிற்கு எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி நடிக்கக்கூடிய திறமைமிகு நடிகர்கள் இவர்கள். இதே போலத்தான், இவர்கள் இருவரும் பாசமலர் படத்தில் உண்மையிலேயே சகோதர சகோதரியாக நடிக்க உண்மையிலேயே இவர்கள் அண்ணன் தங்கை என்று கருதினர் அன்றைய ரசிகர்கள். இவர்களுக்குள் இருந்த பாசமும். அதுபோலத்தான். சிவாஜி, ஜெமினி கணேசனை உண்மையிலேயே “மாப்பிள்ளை..” என்று அழைப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்றைய மக்கள் பலர், தங்கள் வீட்டில் ஒரு ஆண் பிள்ளைக்கு அடுத்து பெண் குழந்தை பிறந்தால், அதற்கு ‘ராதா’ என சாவித்திரியின் கதாப்பாத்திர பெயரை வைத்தனர். இப்படி மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒரு படமாக பார்க்கப்படுகிறது பாசமலர்.

“என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..அதுல ஆனந்த கண்ணீரை மட்டும்தான் பாக்கணும்” என்ற வசனம் இன்று வரை பிரபலம். கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும். “நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் இப்படத்திற்கு பிறகு, பாசமலர் படத்தில் நான் தங்கையாக பார்த்த நடிகை சாவித்திரியுடன் இனி ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன்” என கூறயதாக பேசப்படுகிறது. பாசமலர்’ வெளியான தினத்தில் நடிகை சாவித்திரி மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்தாராம். அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பெண்கள் ‘பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் வந்த பிறகு, வீடுகளில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு சாவித்திரி போல் அன்புத்தங்கையாக இருக்கவேண்டும் என்று நினைத்து, ‘ராதா’ என்று பெயர்வைப்பது வழக்கமாக இருந்ததாம்..

பாசமலர்’ படத்துக்கான டைட்டிலில் முதலில் ‘கதை – கே.பி. கொட்டாரக்கரா’ என்று போட வைத்தார் இயக்குநர் பீம்சிங். அதன் பின்னர் பாடலாசிரியர், அடுத்து வசனகர்த்தா என கதாசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு டைட்டிலில் முன்னுரிமை கொடுத்து அவர்களைப் பெரிதும் மதித்தார் பீம்சிங். ‘பாசமல’ரின் சாதனைகளை பட்டியலுக்குள் அடக்க முடியாதுதான். அந்தப் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு, அதற்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸுக்கு உண்டு. இளமையும் எளிமையும் இலக்கிய நயமும் மிகுந்த ‘பாசமல’ரின் வசனத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தனிபெரும் கதை, வசனகர்த்தாவாக உருவெடுத்தார் 24 வயதே நிரம்பியிருந்த ஆரூர்தாஸ். தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரை, ‘பாசமல’ருக்கு வசனம் எழுதும் வாய்ப்பினை சிவாஜியிடம் பெற்றுக் கொடுத்தவர்கள் ஜெமினியும் சாவித்திரியும். அதேபோல், ‘பதி பக்தி’க்குப் பிறகு பீம்சிங்கின் இயக்கத்தில் அடுத்த வெற்றியாக அமைந்த ‘பாகப் பிரிவினை’ படத்துக்குப் பாடல்கள் எழுதி வெளிச்சம் பெற்றிருந்த கண்ணதாசனையும் இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையையும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளிகள் ஆக்கியது ‘பாசமலர்’.

நம் கிராமங்களில் கூட பாசத்துடன் இருக்கும் அண்ணனைப்பார்த்து ‘ம்… பெரிய பாசமலர் அண்ணன்தான் போ!’ என்று சொல்லுமளவுக்குப் பாசமலர் கிராமத்து மக்களிடையேயும் பிரபலமானதே அதன் வெற்றிக்குச் சான்று. 1962-ம் ஆண்டில் இரண்டாவது சிறந்த தேசிய திரைப்படமாகப் ‘பாச மலர்’ விருது வாங்கியது. இன்றளவும் பார்த்தவர்கள் இதயத்திலெல்லாம் ஒட்டிக் கொண்டுள்ளது. நடித்தவர்களில் பெரும்பாலோர் நம்மை விட்டுச் சென்றுவிட்ட பிறகும்கூட பாசமலரின் வாசம் வீசிக் கொண்டேதான் இருக்கிறது. நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி அது நடந்து கொண்டேதான் இருக்கும். தென்றலும் தமிழும் உள்ளவரை பாசமலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

பாசமலர் ரிலீஸான தின ( 1961 மே 27)சிறப்புக் கட்டுரை