ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எழுத்தாளர்களில் பலரும், திரைப்பட இயக்குநர்களில் பலரும் தங்கள் சிறுவயதிலும், இளமைப் பருவத்திலும் விருப்பக் கனவாய் கொண்டிருந்தவைகளையே பிற்காலத்தில் படைப்பாக்குகிறார்கள்.‘ஸ்பீல் பெர்க் ‘கும் அப்படித்தான். ஆனால், அவருடைய கனவு கள் வித்தியாசமானவை, மிகப் பெரியவை. ஸ்பீல் பெர்க் சக்திமிக்க இயக்குநராகி பெருமளவில் செல்வத்தைக் குவிப்பதற்குக் காரணமாயிருந்தது அவருடைய நுண்ணறிவேயாகும்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1947-ல் இதே டிசம்பர் 18-ஆம் நாள் பிறந்தார். பிறந்த இடம் ஸின் ஸினாட்டி (அமெரிக்க ஓஹியோ மாநிலம்). சின்ன வயதிலேயே விசித்திரமான பொருட்களின் மீதும், அதிசயமான விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அவர். வானத்தில் இருந்து எரிகற்கள் மழையாய் விழு வதைப் பார்க்க அதிகாலை 3 மணிக்குத் தனது தந்தை யோடு மலைப்பக்கம் சென்றிருக்கிறார். அவருடைய தந்தை ஓர் எலக்ட்ரிகல் என்ஜினீயர். அமெரிக்கா அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கியிருந்தது. அவர் தனது தொழிலை முன்னிட்டு குடும்பத்தோடு ஊர் ஊராய் மாறியபடி இருந்தார்.

தந்தையின் நேர உணர்வு, எதையும் நேர்த்தியாகச் செய்யும் தன்மை அப்படியே ஸ்பீல் பெர்க் இடமும் படிந்தது. தாய் அற்புதமாய் பியானோ வாசிப்பார். ஆனால் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி ஸ்பீல் பெர்க் சிந்திக்கும் போதெல்லாம் தாம் ஒரு நாளும் அவர்களுடைய வேலையைச் செய்யப் போவதில்லை என்று சொல்லிக் கொள்வார். அவர் தனது இஷ்ட தெய்வமான வால்ட் டிஸ்னியுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார். ஹிட்ச்காக் அவருடைய மானசீக குரு.

ஒரு சமயம் ஸ்பீல்பெர்க்கின் தாய் தனது கணவருக்கு பிறந்த நாள் பரிசாக 8 எம்.எம். காமிரா ஒன்றை வழங்கினார். அவருக்குப் படம் பிடிப்பதில் ஆர்வமில்லை. ஸ்பீல்பெர்க் அந்தக் ‘காமிரா’வைக் கையில் எடுத்துக் கொண்டார். அன்று முதல் படமெடுப்பது அவருடைய குறிக்கோளாயிற்று. அந்த வகையில் 1964-ல் ‘Fire Light’ என்றொரு படம் எடுத்தார். அது ஒரு விஞ்ஞானப் புதினம். அதைப் பட மாக்கியபோது அவருக்கு வயது பதினாறு. அந்தப் படம் 500 டாலர் பட்ஜட்டில் எடுக்கப்பட்டது.

(அதற்குமுன் அப்பாவின் காமிராவில் பதினைந்து படங்கள் எடுத்தார், அவை துண்டுப் படங்கள்). தமக்குத் தெரிந்தவர்களையெல்லாம் படம் பார்க்க அழைத்து 600 டாலர்களை அவர் வசூல் பண்ணிவிட்டார்.

சரித்திரம் படைத்த அவர் முறையான இயக்குநர்’ என்ற பெயரைப் பெற 1970 வரை காத்திருக்க நேர்ந்தது. டென்னிஸ் ஹாஃப்மன் என்கிற மூக்குக் கண்ணாடி தயாரிப்பாளர் முதலீடு செய்ய ‘Ambim’ என்ற படத்தை ஸ்பீல் பெர்க் எடுத்துத் தந்தார்.அவருடைய முதல் 33 மி.மீ பிலிமில் தயாரான படம் அது.

ஸ்பீல்பெர்க் தம்முடைய 17 வயதில் யுனிவர்சல் மாதிரி பெரிய ஸ்டூடியோக்களில் நுழைந்தார். வாய்ப்பு கிடைத்த பாடில்லை. எனினும், ஒரு சினிமாப் படம் எப்படித் தயாரிக்கப்படுகிறது, எத்தனை கட்டங்களைத் தாண்டி அது வெளியில் வருகிறது என்பதை அங்கே அவர் புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தீவிர முயற்சிகளுக்குப் பிறகு டி.வி. சீரியல்களுக்கு ‘பைலட்’ (முன்னோட்டம்) தயாரிக்கிற வேலை கிடைத்தது. பிறகு சொல்லிக் கொள்ளும்படியாய் சில ‘எபிஸோட்’கள்.

ஒரு சமயம் யுனிவர்சல் நிறுவன காண்ட்ராக்டில் அதைப் படிக்காமலே அவர் கையெழுத்துப் போட்டு விட்டார். அந்த ஒப்பந்தப்படி நிறுவனம் சொல்கிற வேலைகளை மட்டுமே அவர் செய்ய முடியும். வேறு இடங்களிலோ, சுயமாகவோ எந்த வேலையும் அவர் செய்ய முடியாது. ஆனாலும், சினிமாத்துறை சம்பந்தப் பட்ட சகல விஷயங்களையும் அறிந்து கொள்கிற வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

1971-ல் யுனிவர்சல் நிறுவனத்துக்காக அவர் எடுத்த ‘ட்யூவல்’ (Duel) என்ற படம் ‘பாக்ஸ் ஆபீஸ்’ சாதனை நிகழ்த்தியது. அப்போது அவருடைய வயது 25. ஆனால் அவர் எடுத்த ‘சுகர்லாண்ட் எக்ஸ்ப்ரஸ்’ அவருக்குப் பாடமாய் அமைந்தது.

‘என்னுடைய லட்சியங்களை, கற்பனைகளை ஆதரிக்கக்கூடிய திறமைசாலிகளை என்னோடு வைத்துக் கொள்வேன். அவர்கள் மீது நம்பிக்கை வைப்பேன்’ என்று தீர்மானித்துக் கொண்டார்.

ஸானுக் – ப்ரவுன் (தயாரிப்பு நிர்வாகிகள்), வில்மாஸ் ஸிக்மவுண்ட் (காமிராமேன்), ஜான் வில்லியம்ஸ் (இசைக்கலைஞர்) இப்படித் திறமைசாலிகளைத் தேடித் தம்மோடு இணைத்துக் கொண்டார்.

ஜான் வில்லியம்ஸ் ஸ்பீல் பெர்க்கின் ஆறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஸ்பீல்பெர்க்கிற்குப் பெரும்புகழ் தேடிக் கொடுத்த படம் ‘ஜாஸ்’.

அந்தப் படத்துக்காக 300 கிலோ எடையில் மூன்று செயற்கைத் திமிங்கிலங்களை அவர் பயன்படுத்தினார். அவற்றை உருவாக்க ஒன்றரை லட்சம் டாலர்களும், இயக்க முப்பது லட்சம் டாலர்களும் செலவாயிற்று.

ஒரு கோடியே பத்து லட்சம் டாலர்கள் முதலீட்டில் 155 நாட்களில் தயாரிக்கப்பட்ட படம் அது. வசூலில் அதற்கு முந்தைய அத்தனை படங்களையும் முறியடித்து விட்டது.

ஜாஸ் படத்தில் நடித்த ரிச்சர்டு ட்ரேபஸ் என்ற நடிகரை வைத்து அதே ஆண்டில் (1975) ‘க்ளோஸ் என்கவுண்டர்ஸ்’ என்ற படத்தை சொந்தமாக எடுக்கத் தொடங்கினார் ஸ்பீல்பெர்க். பிரும்மாண்டமான தயாரிப்பு. அவரால் செய்து முடிக்க இயலாது என்றே ஆலிவுட் வட்டாரம் பேசிக் கொண்டது. படம் 1977-ல் வெளியானது. வசூலில் ‘ஜாஸ்’ படத்தை மிஞ்சியது. படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சர்வதேச அளவில் புகழ் பெற்றனர்.

அதற்குப்பின் அவர் கொடுத்த இரண்டு படங்கள் படுதோல்வி அடைந்தன. ஆனால், அவருடைய மனம் தோல்விகளில் துவண்டு விடவில்லை. பாரமவுண்ட் நிறுவனத் துக்காக அவர் இயக்கிய ‘Raiders of the Lost Arc’ படம் 22.4 கோடி டாலர்களை அள்ளியது லாபமாக. சுயேச்சையாக செயல்பட விரும்பும் ஸ்பீல்பெர்க் அந்தப் படத்தைப் பொறுத்தவரை கம்பெனி விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார். 87 நாட்களில் படத்தை முடித்துத் தரவேண்டும். இவர் 73 நாட்களிலேயே முடித்துவிட்டார். 2000 துணை நடிகர்கள் தோன்ற வேண்டிய காட்சியில் 600 பேரை மட்டுமே வைத்து (கிராபிக் உபயத்துடன்) 2000 பேர் கலந்து கொண்டது போல் தோன்றச் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேல் படத்தின் செலவை குறைத்தார். ஸ்பீல்பெர்க் தயாரிக்க ‘ET’ படம் குழந்தைகளுக்கானது. ஒரு சிறுவனுடைய கதை, உலகத்தால் நேசிக்கப்படாத, தன் தாயினால் மட்டுமே நேசிக்கப்பட்ட அதே சமயம் பெரிய அளவில் மனிதப் பண்புகள் கொண்டவன் ET. சினிமா வரலாற்றில் மிக வித்தியாசமான படம் அது. தரத்திலும், வசூலிலும் தனிப்பெரும் சாதனை நிகழ்த்தியது. முந்தையதை விட சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அவருடைய ஒவ்வொரு படத்துக் கும் இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிற, தம்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையை மெய்ப்பிக்கும் கட்டாயம். ‘ஜுராஸிக்’ படத்தில் அதைப் பூர்த்தி செய்தார் என்றே சொல்ல வேண்டும். ஸ்பீல்பெர்க் குழந்தைகளுக்காகப் படமெடுத்த வால்ட் டிஸ்னியையோ, திகில் படங்கள் எடுத்த ஹிட்ச் காக்கையோ பின்பற்றவில்லை.

தம்முடைய தனித் தன்மையைத் தமது ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பேர்பட்ட ஸ்டீபன் ஸ்பீபெர்க் பிறந்த நாள் இன்று

நீங்கள் மகத்தான வெற்றி பெற விரும்பினால் வேலையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் ஸ்பீல்பெர்க் மாதிரி