பேச்சிலர் – திரை விமர்சனம்
இயக்குநர் – சதீஷ் செல்வகுமார்
நடிகர்கள் – ஜீவி பிரகாஷ், திவ்ய பாரதி, பக்ஸ்
திரை மொழி என்பது அத்தனை எளிதானதல்ல, திரையில் நிகழும் தருணத்தை பார்வையாளக்கு கடத்தும் திரக்கலையை கமல், மணிரதனம், பாலுமகேந்திரா என ஜாம்பவான்கள் நிகழ்த்திய அற்புதத்ததை, கைக்கொண்டு திரையில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் இயக்குநர் சதீஷ்.
இந்தப்படம் எப்படியிருந்தாலும் திரையில் வரும் சில தருணங்கள் தமிழ் சினிமாவிலேயே இது வரை நிகழாதாது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஆச்சர்யத்தை ஒளித்து வைத்து விளையாட்டு காட்டுகிறது இந்த ஆக்கம்.
ஒளி, ஒலி, சுற்றுப்புறம், வாசனை, கடந்து போகும் ஆளின் முகபாவம், எழுதவே முடியாத அதிசயாமாக பாதி மட்டுமாக வந்து விழும் வசனம், என திரையில் ஒரு மேஜிக் நிகழ்கிறது. இயக்குநருக்கு திரையோடு ரசிகனை கட்டிப்போடும் திறமை இருக்கிறது
இளைஞர்களுக்கு உண்டான சினிமா இங்கு பல காலமாக வராமல் இருக்கிறது.
இளைஞர்களுக்கான படம் என்றால் ஆபாசம் நிறைந்த படங்கள் என பலரும் தவறாக நினைக்கிறார்கள். இளைஞர்கள் வாழ்வில் ஆபாசம் இருக்கும், ஆனால் அது மட்டுமே இருக்காது. இந்த படமும் அது போல தான். ஆபாசங்கள் என பலர் நினைக்கும் காட்சிகள் படத்தில் இருந்தாலும், இது பல இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய வாழ்கை தான். அதனூடகா அவர்களின் வாழ்வை நாமும் நெருங்கி கவனிக்கும் வாய்ப்பை தருகிறத
சிறிய நகரத்தில் இருந்து, பெரிய நகரத்திற்கு இடம்பெயரும் இளைஞன், அந்த கலாச்சார வாழ்கைக்குள் திளைக்க ஆசைப்படுகிறான். அதில் ஒன்று live-In வாழ்கை, அப்படி அந்த வாழ்கையை அடைந்த பின்னர், அந்த உறவினால் அவனுடன் இருந்த பெண் கற்பமாகிறாள். முற்போக்கான வாழ்கைமுறை என இவன் நினைத்த இந்த வாழ்கை, அந்த பெண் அந்த குழந்தையுடன் வாழ நினைக்கும் போது, சிக்கலுக்குள்ளாகிறது. அதிலிருந்து இவன் மீண்டான, இல்லை அந்த சிக்கலுக்குள் நுழைந்தானா என்பதே கதை.
நேர்த்தியான இயக்கம் படத்தை முக்கியமான தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. ஒளிப்பதிவு, படதொகுப்பு மற்றும் அதற்கு பயன்படுத்திய யுக்திகள், படத்யின் தரத்தை கூட்டியுள்ளது.
பேச்சுலர் இளைஞர்களின் நக்கல், காதல் , ஜாலி, காமம் நிறைந்த வாழ்கையை நெருக்கமாக பதிவுசெய்துள்ளனர்.
ஆண் பெண் உறவென்பதே வெகு சிக்கலானது அதிலும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை பல குழப்பங்களால் அவர்களை குழப்பிக்கொண்டு நம்மையும் சிக்கலில் இழுத்திவிடும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கையை அச்சுஅசலாக திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். முதல் காட்சியிலேயே படத்தின் வித்தியாசமும் படம் அதை நோக்கி பயணிக்கிறது எனபது தெளிவாகி விடுகிறது.
நாயகனாக ஜி வி பிரகாஷ், தமிழில் எந்தவொரு நாயகனும் ஏற்கதுணியாத பாத்திரத்தை அசால்ட்டாக செய்து அசத்தியிருக்கிறார். திரையில் அவரது மௌனமே பல காட்சிகளில் பலதையும் பேசுகிறது. இன்றைய தலைமுறை இளைஞனை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மிஷ்கினுடனான காட்சிகள், க்ளைமாக்ஸில் உருகி மருகுவதெல்லாம் அசத்தல் ரகம்
நாயகி திவ்யா பாரதி, ஒரு அழகான தேவதை. தமிழ் சினிமா நாயகிகள் ஊறுகாய் போல் தான் படத்தில் இருப்பார்கள், ஆனால் முதல் படத்திலேயே மிக மிக அழுத்தமான பாத்திரம் ஆனால் பல வருட அனுபவம் வாய்ந்த நடிகைகளையே மிஞ்சும் நடிப்பை தந்திருக்கிறார். ஹாஸ்பிடலில் ஜீவியிடம் கெஞ்சும் காட்சியிலும், கோர்ட்டில் ஜீவி அம்மாவை பார்த்து கலங்குமிடத்திலும், நம்மை கண் கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகன் நாயகி தவிர்த்து, ஒரு பெரும் நண்பர் கூட்டம் நடித்திருக்கிறது யாருக்குமே கேமரா பயம் என்பதே இல்லாமல் பின்னி எடுத்திருக்கிறார்கள். நகைச்சுவையும், எதார்த்தமும் நிறைந்த பேச்சுலர் வாழ்கை காட்சிகள், ஒரு பிரச்சனை சமாளிக்க ஒரு பேச்சுலர் கும்பல் செய்யும் குழப்பங்கள் என ரசிக்கும்படியான காட்சிகள் நிறைய உள்ளன. பக்ஸ் மற்றும் முனிஸ்காந்த் வரும் காட்சிகள் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.
இசை மற்றும் பின்னணி இசை படத்தின் கதையோட்டத்திற்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் தனியாக ரசிக்கும்படி கவனிக்கும்படி அமைந்திருக்கிறது சித்துகுமாரின் பின்னனி இசை. லோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம். படத்தில் பாராட்டபட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒலிஅமைப்பு. படத்தின் ஒலியமைப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
ஆண் பெண் உறவென்பதே வெகு சிக்கலானது அதிலும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை பல குழப்பங்களால் அவர்களை குழப்பிக்கொண்டு நம்மையும் சிக்கலில் இழுத்துவிடுவார்கள்.
இளைஞன் காதலிக்கிறான், கலவி புரிகிறான், அவள் கற்பமாகிறாள், அதனை வேண்டாம் என அவன் நிற்கிறான். இந்த மாதிரி கதைகளங்களில் இருக்கும் முக்கிய சிக்கல் கதையினை அடுத்த கடத்திற்கு எடுத்து செல்வதும் அதற்கான தீர்வையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகனை திருப்தி படுத்துவதே. ஆனால் அந்த வகையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் பிரச்சன ஆரம்பமாகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கோபமும் அவள் பக்க பார்வையும் படத்தில் பதிவாகவே இல்லை,
அவன் வேண்டாம் என்று அந்த பெண் முடிவெடுக்கும் காட்சிக்கு அழுத்தமான காரணங்கள் அமையவில்லை. அவள் ஏன் அவன் வேணும் என்று நினைத்தால் என்பதற்கும் காட்சிகள் இல்லை. இந்த உறவை பெரிதாக கற்பனை செய்துகொள்ளாதே என ஹீரோவுக்கு அட்வைஸ் செய்யும் ஹீரோயின் இந்த உறவுக்குள் ஆழமாக விழுகிறாள். அதனால் அவள் இறுதியில் எடுக்கும் முடிவு ரசிகனை சரியாக போய் சேரவில்லை. live-In வாழ்கை, பற்றி அதிகம் பேசாத சினிமாவில் ஆறுதலாக அமையாமல் இதுவும் ஒரு குழப்பமாகவே கடந்து போகிறது இந்தப்படம்.
இளைஞர்களின் மன அலைபாய்த்ததலை படம் சொல்வதாக இருந்தாலும், அது அழுத்தமாக பதிவுசெய்யபடவில்லை. இளைஞர்களுக்கு அலைபாயும் மனது, அவர்கள் எப்பொழுது எந்த முடிவு வேண்டுமானாலும் எடுப்பார்கள் என்ற கருத்தை நமக்கு ஆழமாக விதைத்திருந்தால், படத்தில் எந்த கேள்வியும் கேட்காமல் ஒன்றிபோய் இருக்கலாம்.
மொத்ததில் பேச்சுலர் படம், இதுவும் இளைஞர்கள் வாழ்கை என காட்டியுள்ளது.