பைரி வாழ்வியலைச் சொல்லும் படம் !!

இயக்கம் : ஜான் கிளாடி

நடிகர்கள்: சையத் மஜீத், மேகனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார்

இசை: அருண் ராஜ்

தயாரிப்பு: வி.துரை ராஜ்

பைரி என்றால் கழுகு என்று பொருள். நாகர்கோவில் நகரில் புறா பந்தயத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை வைத்து வெளிவந்திருக்கும் படம்.

முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பதிவாக மாறியிருக்கிறது.

நாயகன் சையத் மஜித், படித்துவிட்டு வேலைக்கு போகாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயமும் நடத்தி வருகிறார். ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனால் நாயகன் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார், என்பது தான் படம்

 

புறா பந்தயத்தின் பின்னணியில் மக்களின் வாழ்வை ரத்தம் சதையுமாக சொல்லி இருக்கிறது இந்த படம். பொதுவாக மக்களின் வாழ்க்கை திரையில் அவ்வளவாக படமாக்கப்படுவதில்லை, அந்தக் குறையை போக்கும் வகையில் வந்திருக்கிறது இந்தப்படம். முன்னதாக வெளிவந்த ஆடுகளம் மெட்ராஸ் படங்களை ஞாபகப்படுத்தும் வகையில் படத்தின் வாழ்வியலும் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை சொல்வது தான் ‘பைரி’. நாகர்கோயில் மக்களின் வாழ்க்கையை படம் முழுக்க பார்க்க முடிகிறது.

படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் முழுதும் வரும் விவரங்கள், விளக்கங்கள், கதைக்களம், பேச்சு மொழி என படத்திற்காக படக்குழு உழைத்திருக்கும் அபாரமான உழைப்பு, படத்தின் கதாபாத்திரங்கள் என ஒவ்வொன்றும் பிரமிப்பை தருகிறது.


தான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்யை அத்தனை தத்ரூபமாக திரையில் சித்தரித்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி. முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. நாயகனின் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி நடிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் அந்த வட்டார வாழ்வியலில் இருக்கும் இளைஞனை நடிப்பில் கொண்டு வந்துள்ளார், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் இடங்களில் அசத்தியுள்ளார்

ஒவ்வொரு சின்ன கதாப்பாத்திரமும் மனதில் அழுத்தமாக பதிகிறார்கள்.

ஒரு ஊரே மொத்தமாக கூடி நடித்திருக்கிறார்கள் அத்தனை ஜனத்திரள் படம் முழுக்க இருக்கிறது, அவ்வளவு பேரும் திரை பயமில்லாமல் பின்னியிருக்கிறார்கள். நாகர்கோவில் மக்களின் பேச்சு மற்றும் உடல் மொழி என அனைத்தும் அட்டகாசம்.

புறா பந்தய பின்னணியில் இத்தனை விசயங்கள் இதுவரை எந்த தமிழ் படத்திலும் வந்ததில்லை அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது முக்கியமான படைப்பாக இருக்கும்

படத்தின் பட்ஜெட் துருத்தி கொண்டு தெரிவது படத்திற்கு கொஞ்சம் மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் முதல் பாதி என்ன நடக்கிறது என்று தெரியாமல் படத்திற்குள் நம்மால் சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் இருந்த தெளிவு படத்தின் முதல் பாதையில் இருந்திருந்தால் இன்னும் இந்த படம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும், இருந்தாலும் தமிழ் சினிமா வரலாறு ஒரு முக்கிய படப்பாக நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது இந்த பைரி.