அன்பிற்கினியாள் – விமர்சனம்!

முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின் பலான கதைகள்தான் முன்னிலை யில் எட்டிப் பார்க்கும். ரொம்ப காலமாகவே தொடரும் இம்மாதிரியான சூழலில் கோலிவுட்டில் அவ்வப்போது அப்பா + மகள் உறவை, பாசத்தை, நேசத்தை, பிரியத்தை அடிப்படையாகக் கொண்டு நெகிழ வைக்கும் சினிமாக்கள் வருவதுண்டு. அந்தப் பட்டியலில் இணைந்து விட்டது இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ‘அன்பிற்கினியாள்’. இதில் விசேஷமாக குறிப்பிடத் தக்கது நிஜ அப்பா – மகளே நிஜமாகவே வாழ்ந்து அசத்தி இருப்பதுதான்.

நம்மில் பெரும்பாலானோர் போல் மிடில் கிளாஸைச் சேர்ந்தவர். மனைவியை இழந்தவர், அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்சிங் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். கூடவே ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார்.. அப்படி ஜாப்-ப்புக்கு போன இடத்தில் பிரவீன் ராஜை லவ்வுகிறார். இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரிய வந்த அதே நாள் கீர்த்தி பாண்டியன் எதிர்பாராவிதமாக சிக்கன் ஹப்பின் சில்லிடும் குளிர் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். லாக்கர் ரூம் மாதிரி அதிலும் உடலை உறைய வைக்கும் அந்த அறைக்குள் நாயகி படும் அவஸ்தையுடன், மகளைக் காணாமல் தந்தை பதறும் சம்பவங்களும்தான் படம்..

கோலிவுட்டில் எண்ட்ரியாகி 18 வருஷங்கள் ஆனாலும் இன்றைக்கும் தமிழ் ரசிகர் களின் நினைவில் இருக்கும் அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். 100 படங்களுக்கு மேலான தன் அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் தன்னால் முடிந்த அளவு உணர வைக்கிறார். சில இடங்களில் நாடக நடிகர் போல் ஆக்ட் கொடுத்தாலும் போலீஸ் ஸ்டேசனில் காவலரிடம் மோதும் காட்சியை எல்லாம் அசால்டாக செய்து கைத்தட்டல் வாங்குகிறார்.

தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே டைட்டில் ரோலுக்கான திரைப்படம் கிடைத்த கீர்த்தி பாண்டியன் அந்த பாசமிகு ரோலைப் பக்காவாக உள்வாங்கி சபாஷ் சொல்ல வைக்கிறார்.

ஜாவித் ரியாஸின் பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் இந்த அன்பிற்கினியாள் மீது எக்ஸ்டரா பிரியம் காட்ட வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகள் நடைபெற்றாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. ஆர்ட் டைரக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் குளிர்சானத அறையின், கடும்குளிர் கொடுமையை நாமும் அனுபவிக்கும் உணர்வு ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் மலையாள ஹிட் படமான ஹெலன் ஒரிஜினல் திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்குநர் கோகுல் சகலரும் பார்த்து ரசிக்கும்படி வழங்கியுள்ளார்.

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்