கொலைகாரன் – விமர்சனம்!

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியவில்லை என்றே சொல்லலாம். இப்போது உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்… மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்தகவல்களை வாசிக்கிறோம், செய்தித் தாளில் தலைப்புச் செய்திகளை லேசாக நோட்டமிடுகிறோம்… ஆனால், முழுமையாக ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் இணைய தேடல்களுக்குள் சிக்கி, பொழுதைக் கழிக்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால் நேரத்தை விரயம் செய்கிறோம். அவ்வளவுதான். ஆனால் 1980களில் தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் என்பது சுனாமி அலையாய் வியாபித்தது என்று சொன்னால் மிகையல்ல.. அந்த காலக் கட்டத்தில் ஏகப்பட்ட துப்பறியும் நாவல்கள் கைக்குக் கிடைக்கும்.. அவைகளைப் படித்து விட்டு செய்த காரியங்கள் சுவையானவை. அதாவது படித்த கிரைம் நாவலை தனித் தனி தாளாகக் கிழித்து கூடவே ஒவ்வொரு பக்க நம்பரையும் நீக்கி விட்டு நண்பர்களிடம் நீட்டி கரெக்டான பக்கங்களை ஒன்று சேர்க்கும் போட்டி நடத்துவோம்..அதிலும் பத்து பேரில் ஏழு பேர் சரியாக நாவல் பக்கங்களை பொருத்தி விடுவார்கள். அதெப்படி என்று புரியாதவர்கள் உங்கள் அருகில் உள்ள சினிமா தியேட்டரில் ‘கொலைகாரன்’ படம் எங்கு ஓடுகிறது என்று கண்டறிந்து போய் பாருங்கள்.. புரியும்.. ஆம்.. ஒரு முகம் சுழிக்க வைக்காத க்ரைம் நாவலை மேஜிக்காரர் மாதிரி கடைசி ஐந்து பக்கத்தை முதலிலும், ஆரம்ப பக்கங்களை நடுவிலும் கடைசியில் சகல பக்கங்களையும் மிகச் சரியாகவும் காட்டி புன்னகைக்க வைத்து அனுப்புவதை உணர்வீர்கள்..!

இந்த கொலைகாரன் கதை என்னவென்று கேட்டால் ஜப்பானிய எழுத்தளரான கெய்கோ ஹிக ஷினோ எழுதி 2005ல் வெளியான The Devotion of Suspect X என்னும் த்ரில்லர் நாவலின் ரீ மேக்தான் ‘கொலைகாரன். ஆனால் நம் ஸ்டைக்கு கொஞ்சம் மானே., தேனே போட்டுள்ளார். அதாவது சென்னை மாநநகரில் ஒரு பிணம் எரிந்து சிதைந்த நிலையில் போலீஸுக்கு கிடைக்கின்றது. அந்த பிணத்தை அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம் அடையாளம் கண்டுபிடித்து, அந்த நபருக்கு நெருக்கமானவர் நாயகி ஆஷ்மா என்பதையும் கண்டுபிடிக்கிறது. அவரிடம் விசாரணை செய்யும் போது அவர் மீதும், அவரது தாயார் மீதும் எந்தவித சந்தேகமும் வரவில்லை. அதே சமயம் அவர்களது எதிர்வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி மீது சந்தேகம் வருகிறது. அப்பேர்பட்ட விசாரணை மேலும் தீவிரமடையும்போது திடீரென விஜய் ஆண்டனி ‘நான் தான் கொலைகாரன்’ என சரண் அடைகிறார். அவர் ஏன் சரண் அடைந்தார்? உண்மையில் கொலை செய்தது யார்? கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவருக்கும் ஆஷ்மாவுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு பதில்தான் இந்த படத்தின் மிச்சக் கதை.

இன்வெஸ்டிகேட்டிவ் ஆபீசர் கார்த்திகேயனாக அர்ஜுன் வழக்கம் போல் நீட்டாக நடித்துள்ளார். நான்தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், இந்த வழக்கில் கொஞ்சம் முரண் இருப்பதாக மோப்பம் பிடித்து அதை தேடும் அவரது இன்வால்மெண்ட் ரசிக்க வைக்கிறது. ஆனாலும் அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவதா என்ற குழப்பத்திற்கு, அவர் சொன்ன முடிவும், வசனங்களும் தனிக் கவனம் பெறுகிறது.

விஜய் ஆண்டனி அதே முகம்.. அதே முகம்.. அதே முகம்.. அம்புட்டுத்தான் – இந்த படத்துக்கு  இதுவே போதும் என்பதால் பெயில் ஆகாமல் தப்பித்து விடுகிறார். ஹீரோயின் ஆஷ்மா புது முகமாம். ஆனால் தேர்ந்த நடிகை போல் தேவையான இடத்தில் பயம், கோபம், காதல் ஆகிய உணர்வுகளை மிகப் பொருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் இவர் ஒரு ரவுண்ட் வரச் சான்ஸ் அதிகம். ரிட்டயர்ட் ஆபீசர் நாசர் ரோல் மூலம் பார்வையாளரின் கோணத்தை கடத்தி இருப்பது நல்ல யுக்தி.

கிரைம் படத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் சைமன் கிங் நூற்றுக்கு நூற்றி பத்து மார்க் வாங்கி விடுகிறார். ஆனால் பாடல்கள் இரண்டும் ஒட்டவே இல்லை. முகேஷூன் கேமிரா, எடிட்டிங் உள்பட டெக்னிஷியன்கள் ஒவ்வொருவரும் கடினமான உழைப்பும் அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக டைரக்டர் கொஞ்சம் கூட சலிக்காமல் முடிச்சு மேல் முடிச்சு போட்டுக் கொண்டே போவதை பக்கத்து சீட் பெரிசு கூட ரசித்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் குடும்பத்தோடு போய் கண்டு களிக்கத் தக்க மர்ம குறுநாவல்தான் -இந்த கொலைகாரன்

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்