திருவிழா காலமும் இல்லை, தேர்தல் காலமும் இல்லை, விடுமுறை காலமும் இல்லை ஆனாலும் தியேட்டர்கள் பரபரப்பாக இருக்கிறது. தேர்வு காலம் என்றாலும் ஒவ்வொரு வீட்டின் பெண் பிள்ளைகளையும் அழைத்து கொண்டு தியேட்டர் செல்லும் பெற்றோர்கள். ஒவ்வொரு தியேட்டர்கள் முன்னாலும் விளம்பர பதாகைகள் சுவரொட்டிகள் என பளிச்சிட வைக்கிறது. வசூல் மன்னர்களாக இருக்கும் பெரிய நடிகர்களும் இல்லை, பல வெற்றிப் படங்களை கொடுத்த பெயர் பெற்ற பெரிய இயக்குனரும் இல்லை, பெரிய பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமும் இல்லை. இருப்பினும் மேலே சொன்ன அத்தனைக்கும் இணையாக எதிர்பார்ப்பினை உருவாக்கி தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வெளியாகிறது திரௌபதி என்ற திரைப்படம்.
இந்த படம் உருவான விதம் பலருக்கும், படத்தின் டிரைலர் வரும் வரை தெரியவே தெரியாது. ஏன் இப்படி ஒரு படம் உருவாகி கொண்டிருக்கிறது என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. ட்ரெயிலர் வெளியான அன்று தான் தமிழ் திரை உலகம் முழுவதும் திரும்பிப் பார்த்தது. தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் பாடலும் இப்படத்தின் டிரைலரும் ஒரே நேரத்தில் வெளியாக, தர்பாரை பின்னுக்குத்தள்ளி திரௌபதி ட்ரெய்லர் முதல் இடத்தில் சென்று கொண்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்த தருணத்தில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாக்குவதற்கு என்னதான் காரணம்? அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது? என்றால் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்த்த ஒரு சினிமாவை இதுவரை யாரும் கொடுக்கவில்லை என்ற ஏக்கம் தான் முதல் காரணம். அதனை இப்படம் பேசும் என்கின்ற நம்பிக்கையை அந்த ட்ரெய்லர் ஆனது மக்களுக்கு அளித்திருக்கிறது. படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படத்தின் கதைக்களம் இவ்வாறுதான் அமையும் என பலவாறான யூகங்கள் அனைவரிடத்திலும் இருக்கிறது. குறிப்பாக ட்ரைலரில் வரும் நாடக காதல், போலித் திருமணங்கள், கலப்பு திருமணங்கள் போன்ற வார்த்தைகள் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்த்த கதைக் கரு தான் என்பதனை உறுதி செய்தது.
கலப்புத் திருமணங்கள் என்றாலே அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், கொலை செய்து விடுவார்கள், பெண் வீட்டில், பையன் வீட்டில் மிரட்டுவார்கள் என்று தான் இதுவரை தமிழ் சினிமா உலகம் காட்டியுள்ளது. ஆனால் எத்தனை எத்தனையோ, கலப்புத் திருமணம் செய்த தம்பதிகள் இந்த சமூகத்தால் ஏற்கப்பட்டு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு எதிர்ப்பு இருக்கும், கொலை செய்யத் துணிவார்கள் என ஒரு சாராரை மட்டும் வில்லன்களாக உருவகப்படுத்தி திரைப்படம் எடுத்து வந்தார்கள். அப்படியே இறுதியில் கலப்பு திருமணம் செய்து ஒன்றிணைந்தது போல படத்தில் காட்டி விட்டு படத்தினை முடித்து விடுவார்கள். ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கு பின்னால் எவ்வாறான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை எந்த இயக்குனரும் இதுவரை காட்டவில்லை. அப்பெண் தேர்ந்தெடுத்தவன் சரியானவனா, தவறானவனா எனவும் காட்டியதில்லை. தமிழ் சினிமா இலக்கணப்படி பெண்ணின் உறவுக்காரனை வில்லனாகவும், வெளியாட்களை காதலனாகவும் காட்டுவதே வழக்கம். அதேபோல காதலன் என்பவன் அக்மார்க் குத்தப்பட்ட யோக்கியன் என்பது தான் இதுவரையிலான கதைக்களம்.
ஆனால் இந்த படம் அப்படி இருக்காது, பெண்களுக்கு துணை என்பவன் யார், அவன் எப்போது வருவான் என்பதனை காட்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதுதான் கதைக்களமா என்றால் அதுவும் தெரியாது, படம் வெளியானால் மட்டும்தான் தெரிய வரும். இப்படத்தில் போலித் திருமணங்கள் என்பது எவ்வாறு நடைபெறுகிறது, அதற்கான சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகிறது, அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பன போன்றவற்றை படத்தில் காட்டி இருப்பது போல ட்ரைலரை பார்க்கும் பொழுது தெரிகிறது.
இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு வீட்டுப் பெண்களும் பள்ளி கல்லூரியை தாண்டி பணிக்கும் சென்று வரும் நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது? அவர்கள் இந்த சமூகத்தில் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்? என்பனவற்றையும் இப்படம் கூறியிருப்பதாக தெரிகிறது. பலரும் இதனை ஒரு சமூகத்திற்கு எதிரான படமாக பார்க்கபடுவதாக கூறி வருகிறார்கள். ஆனால் நிச்சயமாக இப்படம் அவ்வாறு இருக்காது எனவும், அனைத்து மக்களுக்குமான விழிப்புணர்வு படமாக மட்டுமே இருக்கும் எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு என்பதை முன்னிறுத்தி இப்படத்தின் விளம்பரங்கள் அமைந்திருப்பதாலும், அதனை ஒட்டிய காட்சிகள் அடுத்தடுத்து வந்திருப்பதாலும், படம் வெளியாகும் முன்னரே தமிழகம் முழுவதும் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது திரௌபதி. ஒவ்வொரு வீட்டின் பெண்ணையும் காக்க வேண்டிய கடமை, அவ்வீட்டின் அப்பா, அண்ணன் தம்பி என அனைவருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட அப்பா அண்ணன் தம்பி என உறவுகள் வரவேற்கும் படமாக இப்படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது. இப்படத்திற்கு படக்குழு விளம்பரம் செய்ததோ இல்லையோ தன்னார்வலர்கள் ஆக ஒவ்வொரு பகுதியிலும் சுவரொட்டிகளும் பேனர்களும் சமூக வலைத்தளம் விளம்பரங்களும் என பார்க்கும் இடமெல்லாம் திரௌபதி மயமாகவே இருக்கிறது.
இதற்கு இயக்குனர் மீது உள்ள ஒரு நன்மதிப்பும் காரணமாக அமைந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்த வெகுசிலரில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மோகனும் ஒருவர். அதேபோல அவர் பொது சேவையிலும் சளைத்தவர் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கஜா புயலுக்காக மேற்கொண்ட நிவாரண பணிகளே சாட்சியாக இருக்கிறது. கஜா புயலின் போது அவர் முன்னின்று செய்த பணிகளை இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் முதற்கொண்டு பகிர்ந்து வரவேற்றது வரை அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு நன்மதிப்பைப் பெற்று தந்தது. அந்த நன்மதிப்பும், அவர் தற்பொழுது இயக்கி இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட செய்துள்ளது.
திரைப்படத்திற்கான கதைக்கரு சென்னையின் ஒரு பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவமாக இருப்பினும், அந்த சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கை, செய்தியாக வெளியானது தான் படத்தின் கதைக்கான மூலம் எனவும் வெளிப்படையாகவே படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். அதற்கேற்றார் போல் இந்த படத்தினை முதல் ஆளாக நான் வந்து பார்ப்பேன் என பேசிய டாக்டர் ராமதாஸ் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், (இந்த கட்டுரை எழுதும் சமயம்) தற்போது சிறப்பு காட்சியினை அவர் குடும்பத்துடன் பார்த்தும் வருகிறார்.
இவ்வளவு எதிர்பார்ப்புக்கு இடையே நாளை திரௌபதி திரைப்படம், தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் எண்ணிக்கையில் பாதிக்கு மேலான தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை இப்படத்துடன் 7 திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், அதிலும் 18 வருடங்களாக கோலிவுட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரமபத விளையாட்டு, ஓ காதல் கண்மணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஹீரோ துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் என சவாலான படங்கள் வரும் நிலையில், அதனையும் தாண்டி இத்திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
பல முன்னணி கதாநாயகர்கள் நடிக்க தயங்கிய நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தானாக முன்வந்து நடித்துள்ளார் நடிகர் ரிஷி ரிச்சர்ட் . திரௌபதி தமிழ் திரையுலகில் ஒரு புதிய இடத்தினை அவருக்கு பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரை உலகமே கொண்டாடும் மாபெரும் நடிகராக அஜித்திற்கு மைத்துனராகவும், ஷாலினியின் அண்ணனாக இருந்தும் இதுவரை அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தாமல், தன்னுடைய தனித் திறமையால் வர முயற்சிக்கும் அவருக்கு, திரௌபதி திரைப்படம் சிறப்பான இடத்தினைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படாத இசையமைப்பாளர் ஜுபின்னும் இத்திரைப்படத்திற்கு பின்னர் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான இரண்டு பாடல்களும் மட்டுமல்லாது, ட்ரெயிலருக்கு அமைத்த பின்னணி இசையும் அவர் மீதான எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது. அதேபோல திரைப்படத்தில் திரௌபதியாக நடித்துள்ள ஷீலா ராஜ்குமார், இந்த திரைப்படத்திற்குப் பிறகு பாராட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர் நடிகைகளும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் மறுமலர்ச்சி பாரதி மீண்டும் நடிகராக தமிழ் திரை உலகில் மறுபிரவேசம் செய்துள்ளார். அதேபோல படத்தில் முக்கியமாக பேசப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்பும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த திரைப்படமானது பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாவதற்கு தேதி குறிக்கப்பட்டு, எல்லாம் முடிவான நிலையில், இத்திரைப்படத்தினை முடக்குவதற்காக பல தரப்பிலிருந்தும் நெருக்கடிகள் வந்தது. சத்தமே இல்லாமல் அமைதியாக நெருக்கடியை கொடுத்தவர்கள், இதுவரை தாமாக முன்வந்து நாங்கள்தான் நெருக்கடியை கொடுத்தோம் என்பதை வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். அவ்வாறு அறிவித்துவிட்டால் இந்த படத்தில் காட்டப்படும் குற்றங்களை செய்பவர்கள் நாங்கள்தான் என ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும் என்ற அச்சமோ என்னவோ? அவர்கள் இதுவரை தங்கள் முகங்களை வெளியில் காட்டாமல் பின்புறத்திலிருந்து இப்படத்தினை முடக்குவதற்கு பல வேலைகளை செய்தார்கள்.
டெல்லியில் புகார் கொடுத்து மும்பை வரை அனுமதி பெற்று, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பவும் செய்ய வைத்தார்கள் எதிர்ப்பாளர்கள். ஆனால் அவர்களின் துரதிஷ்டம் முதல் தணிக்கையில் கட் செய்யப்பட்ட சில காட்சிகளை கூட படத்தில் சேர்ப்பதற்கு அனுமதி அளித்தது மறு தணிக்கை குழு. தணிக்கை குழுவின் அறிவிப்பைப் பார்த்ததும் படத்தை முடக்குவதற்கு பின்னாலிருந்து வேலைகளை செய்தவர்களுக்கு சவுக்கடி கிடைத்தது போல ஆகியிருக்கும் என்கிறார்கள் படத்தினை எதிர்பார்ப்பவர்கள். அதோடு மட்டுமில்லாமல் தணிக்கை குழு படக்குழுவினரை அழைத்து பாராட்டி சிறப்பான படத்தை எடுத்துள்ளனர் பாராட்டு தெரிவித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது, அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள்.
சூப்பரான நடிகர் முதல் சில முன்னணி நடிகர்களை கொண்டு சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட இயக்குனர் கூட திரௌபதி என்ற படத்தின் பெயரை கேட்டாலே தலைதெரித்து ஓடக் கூடிய அளவிற்கு, இப்படத்திற்கான வரவேற்புமும் கதைக்களமும் அமைந்து இருக்கிறது. இப்படத்தை வரவேற்பவர்கள் முதலில் பார்க்கிறார்களோ இல்லையோ எதிர்ப்பவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். அதேபோல இத்திரைப் படத்திற்கான வரவேற்பை கெடுக்கும் விதமாக, படம் வெளியாவதற்கு முன்பாகவே விமர்சனம் என்ற பெயரில் தவறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு விமர்சன வீடியோக்களை சிலர் தயார் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியில் நாளை காலை 8 மணிக்கு சிறப்பு காட்சியுடன் திரௌபதி திரைப்படமானது வெளியாகிறது. இத் திரைப்படத்தினை பார்ப்பவர்களுக்கு, இதுவரை படத்தில் வரும் சம்பவங்களை அனுபவித்தவர்களுக்கு அது ஒரு நினைவூட்ட லாகவும், அனுபவிக்காதவர்களுக்கு இப்படியும் நடக்குமா? நடக்கிறதா? என்ற ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான கேள்வியுடன் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த சிந்தனையுடன் வெளியே வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
தற்போது பேசப்பட்டு வருவது போல படத்தில், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியோ, எவ்வித முரண்பட்ட தகவலையோ இயக்குனர் மோகன் திணிக்கவில்லை என படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்தவர்கள் தெரிவித்து சென்றுள்ளார்கள். படத்தினை எதிர்த்தவர்களும், இந்த படத்தினையா எதிர்த்தோம்? என வெட்கி தலைகுனியும் அளவிலான, குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக அமைந்திருப்பதாகவும் புகழாரம் சூட்டி சென்றுள்ளார்கள். இந்த கதையினை நாம் நடிக்காமல் விட்டுவிட்டோமே என ஒவ்வொரு நடிகரும் நிச்சயமாக ஏமாற்றதத்தினை உணர்வார்கள் என்றும் கூட சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்.
திரௌபதி திரைப்படம் சமூகத்தில் விழிப்புணர்வை, மாற்றத்தை உருவாக்குகிறதோ இல்லையோ, மிகவும் நலிவடைந்துள்ள தமிழக சினிமாவை மாற்றும், காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறை யினருக்கே உருவாகியுள்ளது. கோடிகளில் புரளும் சினிமா உலகத்தில், லட்சங்களில் இவ்வளவு தரமான படம் கொடுக்க முடியுமா என்ற கேள்வியை நிச்சயமாக உருவாக்கும். படம் எடுப்பதற்கு கோடிகள் தேவையில்லை. கோடிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட தேவையில்லை. நல்ல கதையும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் தேர்வுமே போதும் என சாட்டையால் அடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் மோகன் என திரைத்துறை வட்டாரத்திலே பேசிவிட்டார்களாம்…
அழகான பாடல் வரிகளோடு, காதுகளில் கேட்கும் அளவிற்கு இதமான இசையோடு, கிராமம் நகரம் என இரு சூழலிலும் எடுக்கப்பட்ட திரௌபதி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? அந்த திரௌபதிக்கே வெளிச்சம் –