இன்றைய இளைஞர்களிடம் ஒரு விஷயம் சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்றால் அதை சினிமாவில் பாடலாக வெளியிட்டால் போதும். அவர்கள் அதை உடனே ‘கப்’ என்று பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல சிறுவர்கள், சிறுமியர்கள் கூட பாடலின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் அதில் இருக்கும் வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியாமல் அவர்களாகவே பாட ஆரம்பித்துவிடுவார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடி வெளிவந்த ‘பீப்’ பாடல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால், அனிருத் அந்தப் பாடலுக்கு தான் இசையமைக்க வில்லை என்று சொல்லிவிட்டார். அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. இப்போது, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ என்ற பாடல் நேற்று ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டது.
அந்தப் பாடல் கருப்பானவர்களுக்கு ஆதரவான பாடல் என்பது தெரிகிறது. இருந்தாலும் அந்தப் பாடலில் ‘கலீஜு, கொய்யால’ என்ற வார்த்தைகள் இடம் பெற்று பாடலின் தரத்தை, அவர்கள் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ‘கலீஜ்’ ஆக்கிவிட்டது.
‘கொய்யால’ என்பது கெட்ட வார்த்தையாக பயன்படுத்தப்பட்டு வருவது கூடவா பாடலை எழுதியவருக்கும், அதை அனுமதித்தவர்களுக்கும் தெரியாது. இடையிடையே ‘தக்காளி’ என்ற வார்த்தை வேறு. ‘தக்காளி’ என்ற வார்த்தைய எதற்குப் பயன்படுத்துவார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான்.
எத்தனையோ நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்க, ‘கலீஜ், கொய்யால’ என்ற வார்த்தைகளுடன் இந்தப் பாடலை எழுதி ஏன் இளம் வயதினர் மனதைக் கெடுக்க வேண்டும். இந்த கவித்துவமான பாடலை எழுதியிருப்பவர் விவேகா. இசையமைத்து பாடியிருப்பவர் அனிருத்.
கருப்பா இருப்பவர்கள் உழைப்பாளிகள் என்ற உயரிய கருத்தைச் சொல்லும் பாடலில் நல்ல தமிழ் வார்த்தைகள் கிடைக்கவில்லையா ?. ஆச்சரியம்தான்… இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் அவர்கள் குழந்தைகள் இந்தப் பாடலைப் பாட அனுமதிப்பார்களா ?.சென்சார் குழுவினர் இந்தப் படம் சென்சாருக்கு வரும் போது இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும், அப்போதுதான் இது மாதிரியான பாடல் கொலைகள் தொடராமல் இருக்கும்.