சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் 2018-ம் ஆண்டிற்கான தீபாவளி மலர் வெளியீட்டு விழா கடந்த 5-ம் தேதியன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் மற்றும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் பாலேஷ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், இணை செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சேவியர், வின்சன்ட், சுகுமார் மற்றும் முன்னால் தலைவர் மேஜர்தாசன் உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

cinema pathirikaiyaalargal sangam-1

விழாவில் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன் தலைமையில் உருவான 2018-ம் ஆண்டிற்கான தீபாவளி மலரை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி மலர் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.  சிறப்பு விருந்தினர்களாக பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல் மற்றும் பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சர்கார்’ படப் பிரச்சினைல நான் வருணுக்கு பணம் வாங்கிக் கொடுத்தேன்னு எல்லாரும் பேசுறாங்க. பெயர் வாங்கிக் கொடுத்தது மட்டும்தான் நான். நான் ஏதோ பெரிசா சாதனை செய்தது மாதிரி இப்போ பேசுறாங்க. அது அப்படியில்லை. நிறைய பேர் இதுக்கு முன்னாடி இதுபோல் நிறைய பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனோட வெளிப்பாடுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு.

இது வேதனையில்லை. சோதனைதான். இந்தப் பிரச்சினையை ஆரம்பிக்கும்போதே தெரியும். இது எங்க போய் முடியும்.. எத்தனை பிரச்சினைகள் வரும்ன்னு. எல்லாத்தையும் எதிர் பார்த்துதான் இதுல இறங்கினோம். ஆனால் வரக் கூடாதது வந்திருச்சு. அது கூட எனக்குப் பிரச்சினையில்லை.

நான் இப்போ சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது ஏனென்றால், ஒவ்வொரு முறையும் இது மாதிரி போராட்டமெல்லாம் நடத்த வேண்டாம். அடு்த்த முறைல இருந்து ஸ்மூத்தா எல்லாத்தையும் செய்யணும்ன்னு நினைச்சுத்தான் முறையா தேர்தல்ன்னு நின்னு ஜெயிச்சு வரலாம்ன்னுதான் ரிஸைன் செஞ்சேன்.

இந்த பத்திரிகையாளர் சங்க விழால அதை ஒரு பிரச்சினையாக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன். திடீர் சாம்பார், குழம்பு, ரசம் மாதிரி இந்த சினிமா பத்திரிகையாளர் சங்கத்துல திடீர்ன்னு மூணே நாள்ல தீபாவளி மலர் கொண்டு வந்திருக்காங்க.

இந்த தீபாவளிக்குத்தான் எங்க ‘பாக்யா’ பத்திரிகைல தீபாவளி மலர் கொண்டு வர முடியலை. இந்த சர்கார் மேட்டர் ஆரம்பிச்சதுல இருந்தே எனக்குப் பெரிய தலைவலி. நிறைய வேலைகள். அலைச்சல்கள். அதனாலேயே பாக்யா பத்திரிகை வேலைல என்னால ஈடுபாடு காட்ட முடியலை. அதனாலதான் யோசிச்சு இந்த தீபாவளிக்கு மலர் வேண்டாம். வர்ற பொங்கலுக்கு பார்த்துக்கலாம்ன்னு தள்ளிப் போட்டுட்டேன்.

நான் ‘பாக்யா’வை ஆரம்பிச்சதுகூட எழுத்துல எனக்கு இருந்த ஆர்வத்துனாலதான். ‘புதிய வார்ப்புகள்’ படம் வெளியான உடனேயே நான் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கணும்ன்னு நினைச்சேன். அப்போத்தான் நிறைய பேர் எனக்கு அட்வைஸ் செஞ்சாங்க. ‘இப்பத்தான் நீங்க நடிக்கவே ஆரம்பிச்சிருக்கீங்க. இப்போ போய் எதுக்கு இரண்டு குதிரைல சவாரி செய்றீங்க..? பின்னாடி மெதுவா கொண்டாங்க’ன்னு சொன்னாங்க.

ஸோ.. அதுனால அப்போ தள்ளித் தள்ளிப் போட்டுட்டு கடைசில நான் சினிமால பெயரெடுத்த பின்னாடிதான் ‘பாக்யா’வை ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் பணத்துக்காக இல்லைன் னாலும், ஒரு ஆத்ம திருப்திக்காக எனது எழுத்துப் பணிக்காக அதைத் தொடர்ந்து நடத்திட்டு வரேன்.

‘பாக்யா’ல சினிமா விமர்சனம், அரசியல் விமர்சனமெல்லாம் இதுனாலதான் பண்றதில்லை. விமர்சனம் செய்யப் போய் அது யாரையாவது பாதிச்சா… ஒரே தொழில்ல இருக்கோம். அப்புறம் நமக்குத்தான் கஷ்டமாயிரும்ன்னு வேண்டாம்ன்னு முடிவெடுத்திட்டேன். அதே மாதிரிதான்.. அரசியலும்.. கார்ட்டூன் போடுறதோட சரி.. அதுக்கு மேல எழுதுறதில்லை. மற்றபடி கதை, கவிதை, கட்டுரைன்னு பாக்யா நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு.

இந்த சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60-வது வருட பாரம்பரியம் கொண்டது. இப்பவும் நல்ல முறைல செயல்பட்டு வருவது குறித்து எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

விழாவின் முடிவில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் அண்ணாதுரை நன்றியுரை நிகழ்த்தினார்.