மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது சம்பாத்தியத்தில் சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1984-ஆம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி ‘நாகேஷ் தியேட்டர்’ என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை தொடங்கினார். இந்த திரையரங்கை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திரையரங்கம் ஒருகட்டத்தில் திருமண மண்டபமாக மாறி விட்டது. இருப்பினும், இன்றைக்கும், அந்த பகுதியில் நாகேஷ் தியேட்டர் பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது. இந்த திரையரங்கை பெருமைப்படுத்தும் வகையில் தற்போது தமிழ் சினிமாவில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது.
‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் நடித்த ஆரி இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார்.. கதாநாயகியாக ஆஷ்னா சவேரியும் நடித்திருக்கிறார்கள்.தவிர அதுல்யா , மசூம் சங்கர் என்று மேலும் இரண்டு கதாநாயகிகள் .. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடித்துள்ளார்கள். காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும், திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். அத்துடன் ‘“ திரையரங்கை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படத்தின் கதையும், களமும் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. நிச்சயமாக நாகேஷ் திரையரங்கம் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பேசப்படும் திரைப்படமாக இருக்கும். ஆனாலும் இந்தப் படம், தணிக்கைக்கு அனுப்பப்பட்ட போது. ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறிய தணிக்கை குழுவினர், 19 இடங்களை வெட்டி நீக்கிவிட்டு, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.” என்றார்