குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் திரைக்கு வந்திருக்கிறது. குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவு சிறப்பாக இருக்கிறதா ?
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, வி டிவி கணேஷ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்திருக்கிறது அரண்மனை 4.
சுந்தர் சி எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்ந்து போகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு அரண்மனை படம் எடுத்து ஜாலியாகி விடுவார். அவருக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதே ஜாலியை இந்த படம் கடத்தி வந்தது, அதனால் தான் இந்த படம் 3 பாகங்களை கடந்து நான்காவது பாகமாக வெளிவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு செய்து வைத்த சட்டை போல ஒரு ஹாரர் படத்தில் காமெடி கிளாமர் கமர்சியல் எல்லாவற்றையும் கலந்து ஒரு விருந்து சாப்பாடை தயாரித்து வைத்திருந்தார் சுந்தர் சி.
அரண்மனை படங்கள் அனைத்துமே கதை ஒன்றாக தான் இருக்கும், ஒரு அரண்மனை அங்கிருக்கும் பேய், அல்லது ஒரு கொலை நடக்கும் கதையின் மெயின் கேரக்டருக்கு பேய் பிடிக்கும் அதை யாராவது விசாரிப்பார்கள், அதற்கு பின்னால் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பார்கள், இறுதியில் பேய் ஓட்டுவார்கள் அதற்கு இந்தப்படமும் விதி விலக்கல்ல.
இந்தப் படத்தில் பேய்க்கு ஒரு புதிதான தீம் பிடித்திருக்கிறார்கள் பாக் எனும் வட இந்திய பேய் எப்படி இங்கு தமிழ் நாட்டுக்கு வருகிறது, அது இங்கு என்ன செய்கிறது என்பதுதான் கதையின் மையம்.
சுந்தர் சி யின் தங்கை தமன்னா, ஆமாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், அவர் காதலித்து ஓடிப் போய் விடுகிறார் 10 வருடமாக அவரைக் காணவில்லை. ஒரு கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப் பாக் எனும் பேயால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து தமன்னாவும் கொல்லப்படுகிறார். குழந்தைகள் அனாதை ஆகிறது, இந்த தகவல் சுந்தர் சிக்கு தெரியவர, அந்த அரண்மனைக்கு செல்கிறார். அங்கு எப்படி அந்த மரணம் நிகழ்ந்தது என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு விடை கிடைத்ததா? அந்த பேயை ஒட்டி, அந்த கிராமத்தை காப்பாற்றினாரா? இதை காமெடியுடன் கலந்து, கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
வழக்கமாக சுந்தர்சி படங்களில் காமெடியும், கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கும். திரைப்படத்தை காண வரும் எல்லா ரசிகர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக இதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் சுந்தர் சி. ஆனால் இந்த படத்தில் காமெடியும் கொஞ்சம் கம்மி, கவர்ச்சியும் கொஞ்சம் கம்மி. இரட்டை அர்த்த வசனங்களும் சுத்தமாக இல்லை. முழுக்க, முழுக்க கதைக்கும், ஹாரர் பகுதிகளுக்கும் இடம் கொடுத்து திரைக்கதையை கொஞ்சம் வலுவாக எழுதியிருக்கிறார். உருவாக்கத்திலும் நிறைய மாற்றங்ள் செய்திருக்கிறார். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் படம் எங்கேயும் போரடிக்காமல் செல்கிறது
ஒரு கமர்சியல் படத்திற்கு குழந்தைகளும் குடும்பங்களும் ரசிக்க என்னென்ன வேண்டுமோ, அதை அங்கங்கு வரிசையாக தூவி அவர்களை பயப்பட வைத்து, ஒரு சரியான கமர்ஷியல் படம் பார்த்து திருப்தியை தந்து அனுப்பி விடுகிறார் இறுதியில் குஷ்பூவும் சிம்ரனும் நடனமாடுகிறார்கள், அவர்களைத் தாண்டி தமன்னாவும் ராசி கண்ணாவும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்து அனுப்பி வைக்கிறார்கள்
யோகிபாவும் விடிவி கணேஷும் காமெடி எனும் பெயரில் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்கிறது, ஆனால் குழந்தைகள் அதை ரசிக்கவே செய்கிறார்கள்
தமன்னாவுக்கு இந்த படத்தில் மிக முக்கியமான பாத்திரம் கண்டிப்பாக நடித்தே தீர வேண்டிய பாத்திரம் நடிக்கவும் செய்திருக்கிறார். வந்து போகும் கேரக்டர் தான் என்றாலும் தனக்கு தந்ததை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
சுந்தர் சி தான் முழு படத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார்
படத்தின் விஷுவல்கள் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம், ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான விஷூவல் எபெக்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. படம் வண்ணங்களால் ஜாலம் செய்யும் வகையில் நம்மை ஈர்த்து பிடித்து வைத்துக் கொள்கிறது
தன் பாணியிலிருந்து மாறி சுந்தர் சி பாணிக்கு என்ன தேவையோ அந்த இசையை சந்திக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. கேமராவும் சிறப்பாக இருக்கிறது.
இந்த கோடைகால விடுமுறைக்கு குழந்தைகளோடு கொண்டாட ஒரு அருமையான திரைப்படமாக அரண்மனை 4 வந்திருக்கிறது. மேலும் தமிழ் சமீப காலமாக தத்தளிக்கும் நிலையில் தமிழ் சினிமாவையும் ஹவுஸ்புல் திரையரங்குகளாக அரண்மனை காப்பாற்றியுள்ளது.