எப்படி இருக்கிறது ஸ்டார் ?

 

இளம் நட்சத்திரம் கவின் நடிப்பில், இளம் இயக்குனர் நலன் இயக்கத்தில், இந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஸ்டார்.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் இத்தனை எதிர்பார்ப்பை தந்ததில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இன்றைய கால இளைஞர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது

சமீபத்தில் ஒரு டிரெய்லர் மிக அழகாக கட் செய்யப்பட்டு வந்தது என்றால் அது ஸ்டார் படத்திலிருந்து என்று தாராளமாக சொல்லலாம். முழுப் படத்தின் கதையையும் வாழ்க்கையையும் டிரெய்லரிலேயே படக்குழு தந்து விட்டது. இயக்குனரின் முந்தைய படம், நடிகர் கவினின் முந்தைய படமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திந் மீது ஆர்வத்தை தூண்டியது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா?

ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன் சினிமா நாயகனாக ஆசைப்படுகிறான்.
நடுத்தர வர்க்கத்து நிலைமை அவனது கனவுகளுக்கு தடை போடுகிறது. அவன் வெற்றியை நெருங்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு தடைகள் வந்து கொண்டிருக்கிறது, அந்த தடைகளை எல்லாம் கடந்து அவன் சாதித்தானா ? அவனது கனவு நிறைவேறியதா? அவன் ஸ்டாரானா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் ஒரு நாயகனின் சிறுவயதிலிருந்து அவன் சாதித்து முழு மனிதனாக மாறும் வரையிலும் அவன் வாழ்க்கையை சொல்லியது. அதுபோல் இந்த திரைப்படமும் சிறுவயதில் இருந்து ஒரு இளைஞன் வளர்ந்து அவனது கனவை அடைவது தான் படம்.

2கே கிட்ஸ் அதிகம் தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திங்கொள்ளும்படியான காட்சிகள், அவர்கள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இது தான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

இயக்குனர் இளனுக்கு சினிமா மொழி மிக அழகாக வருகிறது, ஒவ்வொரு காட்சியிலும் அதை உருவாக்கும் விதத்திலும், நல்ல இயக்குநர்களின் சாயல் தெரிகிறது, அதைத் தாண்டி காட்சிகளில் எமோசனை கடத்துவதில் அவரிடம் உருவாக்கம் சிறப்பாக இருக்கிறது.


இந்த கால இளைஞர்கள் ரசிக்கும் படி ரஜினி படம், விஜய் போஸ்டர், , காதல், காமெடி, அப்பா அம்மா பாசம், கஷ்டப்படும் நடுத்தர குடும்பம் என அத்தனையும் படத்தில் சரியாக சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் கவின் தான் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் அதே நேரத்தில், அவர்களின் பிளஸ் அறிந்து, ஒவ்வொரு படத்தையும் சரியாக தேர்வு செய்து நடித்த வருகிறார். இந்த படம் அவருக்கு இன்னும் ஒரு சிறப்பான படமாக இருக்கும்

படம் முழுக்க பலம் கெட்டப்புகளில் வரும் கவின் ஒவ்வொரு உணர்வையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் கட்டே இல்லாமல் வரும் ஷாட்டில் அசத்திவிட்டார்.

கவின் அப்பா அம்மாவாக வரும் கீதா கைலாசமும் லாலும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய துணையாகவா அவர்கள் அமைந்திருக்கிறார்கள்.

நாயகி ப்ரீத்தி முகுந்தனுக்கு முதல் படம் என்பது தெரியவில்லை நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். இரண்டாம் பகுதியில் வரும் அதிதிக்கு டப்பிங் செட் ஆகவில்லை அவர் நடிப்பது ஓவராக தெரிகிறது அது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக அமைந்துவிட்டது. கவினுக்கு சரியான ஜோடியாக இல்லாமல் போனது வருத்தம் தான்

முதல் பாதியிலேயே படம் முடிந்து விட்டது போல் அத்தனை உணர்வுகளையும் தந்து விட்டார்கள் அதனால் இரண்டாம் பாதியில் படம் பல இடங்களில் தடுமாறுகிறது. மேலும் படங்களுக்கு இரண்டாம் பாதியில் முழுக்க சோகமாக இருப்பது படத்தை பின்னுக்கு இழுக்கிறது.

பழைய கால யுவனை மீண்டும் கண்டுபிடித்தது போல் இருக்கிறது படத்தின் இசை. ப்டத்திற்கு உணர்வுகளை ஊட்டியதில் பெரும் பங்கு இசைக்கு தான், அதிலும் ஒரு நாளில் பாட்டு வரும் இடம் அட்டகாச சர்ப்ரைஸ்.

மிகப் பிரம்மாண்டமான படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறது கேமரா.

இரண்டாம் பாதியை கொஞ்சம் கவனித்து மாற்றி இருந்தால் மிக சிறப்பான படமாக அமைந்திருக்கும். ஆனாலும் இக்கால இளைஞர்களுக்கு ஸ்டார் பிடிக்கும்