எம்ஜிஆர் நடிப்பில் 48 வருடங்களுக்கு முன் அதாவது 1975, ஆகஸ்ட் 22-ஆம் தேதி இதே நாளில் வெளியான படம் இதயக்கனி. 🫶 48 வருடங்களுக்கு முன் இதயக்கனி வெளியான போது அது திரைப்பட வெளியீடாக மட்டுமின்றி, அரசியல் செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது.
1972-ல் தான் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்திருந்தார். அவர் பின்னால் கணிசமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இந்த நேரத்தில் ஒரு திரைப்படம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியானால் என்ன விதத்தில் அது எதிர்கொள்ளப்படும் என்பது அறியாததல்ல.
படம் வெளியான முதல் நாளிலேயே அதன் வெற்றி உறுதியானது. காதல், சென்டிமெண்ட், சமூக அக்கறை, த்ரில் என அனைத்தும் கலந்த பூவை கிருஷ்ணனின் கதைக்கே முதலிடம் தர வேண்டும். அவரது கதைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் திரைக்கதை அமைத்தார். அவரது சத்யா மூவிஸ் தான் படத்தை தயாரித்தது.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சினிமாவுக்கென, வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு. அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா… எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்… ‘இதயக்கனி’.
திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப் பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபால கிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிச்சாய்ங்க
காசு போட்டு படம் எடுக்கிறோம், கலெக்ஷனும் வரணும், எலெக்ஷனுக்கும் உதவணும் என்று இருபெரும் திட்டங்களுடன் தான் படத்தை எடுத்தார் எம்ஜிஆர். இயக்குநர் ஜகந்நாதன் என்றாலும் எம்ஜிஆர் படங்களில் அவரது விருப்பமே செயல்படுத்தப்படும். படத்தின் ஆரம்பத்தில் அண்ணாவின் படத்தைக் காட்டி, அண்ணாவின் இதயக்கனியாக எம்ஜிஆர் எப்படி ஆனார் என்பது விளக்கப்பட்டிருக்கும். அதாவது படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அண்ணாவின் ‘இதயக்கனி’ சப்ஜெக்ட் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிஞ்சதும் நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற பாடல் காட்சி. சத்யா காபி தோட்ட தொழிலாளர்கள் தங்களின் முதலாளி எம்ஜிஆரை போற்றிப் பாடுகிற பாடல். இரட்டை இலை, கறுப்பு வெள்ளை சிவப்பு கொடி என கட்சி பிரச்சாரமாக முதல் பாடல் அமைக்கப் பட்டிருந்தது. பாடல் என்றில்லை, எம்ஜிஆர் நடந்து போகிற காட்சியிலும் பின்னணியில் அதிமுக கொடி பறப்பது போல் பார்த்துக் கொண்டார். சிவப்பு கோட், வெள்ளை பேன்ட், கறுப்பு பெல்ட் என்று காஸ்ட்யூமையும் விடவில்லை. இப்படி இரட்டை இலையையும், அதிமுக கொடியையும் முடிந்தளவு இதயக்கனியில் பயன்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்தாய்ங்க (கட்டிங் கண்ணையா)
எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார். கூடவே ’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்பது போன்ற டயலாக்கைக் கேட்டு தியேட்டர் அதிரும் வகையில் விசில் சத்தம் எதிரொலிக்கும்.
எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், எல்லாமே கிளாமர் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும். அதிலும் இதில் ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் விசேஷமாக பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ‘இன்பமே…’ பாட்டு ஒரு டைப். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை இப்ப்ப்ப் பார்த்தாலும் அப்பவே வேற லெவல்தான் என்று வாய் விட்டு சொல்ல தோன்றும்.
நம்ம கோலிவுட் சினிமாவில் வெற்றிப்படங்களுக்கான சக்சஸ்புஃல் பார்மூலா வகுத்தவர்களின் முன்னோடி எம்ஜிஆர் என்பது திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். அப்படி எம்ஜிஆர் பார்முலா என்றே அழைக்கப்படும் இந்த இதயக்கனியால் பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள்,படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், இறுதியில் ரசிகர்கள் என சகலரையும் திருப்திபடுத்தும் விதமாகவே அமைந்ந்த படம் ரிலீசாகி 48 ஆண்டுகளானாலும் அப்படத்தின் இளமையும், ஸ்டைலும் இன்னிக்கும் நினைவில் நிற்பதென்னவோ நிஜம்.