ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல்.
தமிழ் சினிமா வர வர கதை சொல்வதை தவிர்த்து, போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சமூக கருத்துக்களையும் மட்டுமே சொல்வதை முதன்மையாகக் கொண்டு சினிமா எடுத்து வருகிறது. அந்த வகையில் கேரள பகுதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் கதையை சொல்லும் படமாக வந்திருக்கிறது ரிபெல்
சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் மூணாறு பகுதி கேரளாவுடன் இணைக்கப்பட, அங்கு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் தமிழர்களும், அருகில் அமைந்திருக்கும் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களும், எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மையம்.
தேயிலைத் தோட்டத்தில் கஷ்டப்படும் பெற்றோர்களின் கஷ்டத்தை போக்க, படித்து பெரியளாகும் கனவில் கல்லூரிக்கு செல்கிறார்கள் ஜிவி பிரகாஷும் அவரது நண்பர்களும், அங்கு கல்லூரியில் கேரள மாணவர்கள் இரு கட்சிகளாக பிரிந்து தமிழ் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். அவர்களின் கொடுமை எல்லை மீறி சென்று, ஒரு மாணவனின் இறப்பில் முடிகிறது. அதன்பின் பொங்கி எழும் ஜிவி பிரகாஷ் என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் படம்
தன் மாவிலத்திற்குள் வரும் வேற்று மொழி பேசுபவர்களை பொதுவாக அம்மநிலத்தவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மிக முக்கியமான கருத்தை இந்த படம் பேசுகிறது. படம் முழுக்க பல புரட்சி சம்பந்தமான மிக முக்கியமான கருத்துக்கள் எல்லாம் போகிற போக்கில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப செயல்படும் என்பது போன்ற மிக முக்கியமான கருத்துக்கள் கூட படத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் வெறும் கருத்து மட்டும் சொல்வதற்கு தான் படமா? அங்கு தான் ஒரு திரைப்படமாக இந்த படம் மிகப்பெரிய இறங்கும் முகத்தை சந்திக்கிறது.
ஒரு திரைப்படம் ஒரு கதை சொல்ல வேண்டும், அந்த கதைக்குள் நம்மை ஈர்க்க வேண்டும், கதை கதாபாத்திரங்களுக்கு நடப்பவற்றை பார்த்து நாம் வருந்த வேண்டும், அல்லது சிரிக்க வேண்டும், இது எதுவுமே இல்லாமல் கதைக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் படம் முதலில் இருந்தே நகர ஆரம்பிக்கிறது. இறுதி வரைக்கும் கூட நம்மாள் கதைக்குள் நுழையவே முடியவில்லை என்பது படத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
ஜிவி பிரகாசுக்கு நல்லா வேடம், நன்றாகவே நடத்தி இருக்கிறார் அவர் நடிப்பை விட இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. பிரேமலு படம் மூலம் மிகப்பெரிய பிரபலமான நாயகி மமிதா பைஜுவை இப்படத்தில் வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். ஜி வி பிரகாஷ் உடன் வரும் நண்பர்கள் மிகப் பெரிய திருப்புமுனையாக இப்படம் இருக்கும் என்ற நம்பிக்கையில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் நடிப்பும் நன்றாக இருந்தது படம் நன்றாக இல்லாததது தான் ஒரு வருத்தம்.
படத்தின் படத்தின் மிகப்பெரிய பலம் ஓளிப்பதிவு. காட்சிகள் எல்லாம் கண்ணுக்குள் ஒத்திக் கொள்வது போல் அத்தனை அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் திரைக்கதையில் எந்த சுவாரசியங்களும் இல்லாமல் படத்தை இறுதிவரை எடுத்துச் சென்று இருக்கிறார்கள்
மிக அழுத்தமான கதை அதை மிக அழுத்தமான திரைக்கதையாகவும் ஆக்கி இருந்தால், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருந்திருக்கும். ரிபெல் பார்ப்பதற்கு நாம போராளியாக மாற வேண்டும்.