காளிதாசரால் எழுதப்பட்ட ‘சாகுந்தலம்’ எனும் புராணக்கதை தான் சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக வந்திருக்கிறது. தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கிறார்.
சாபத்தால் பிரிந்த காதல் எப்படி விமோசனம் பெற்றது என்பது தான் கதை.
காட்டுக்குள் அநாதையாக கிடக்கும் குழந்தைக்கு ‘சாகுந்தலம்’ எனப்பெயரிட்டு வளர்க்கிறார் கண்வ மகரிஷி.
ரிஷி ஆஸ்ரமம் இருக்கும் காட்டு பகுதியில் சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சாகுந்தலாவும் துஷ்யந்தனை காதலிக்கிறாள். இருவரும் யாருக்கும் தெரியாமல் மணமுடித்துக்கொள்ள, விரைவில் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி துஷ்யந்தன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். வாக்களித்தபடி துஷ்யந்தன் வந்தாரா? இல்லையா? சாகுந்தலாவின் காதல் என்னவானது? என்பதுதான் படத்தின் கதை.
ஒரு புராணக்கதை அதுவும் காதல் கதை இப்போது இவ்வளவு பிரமாண்டத்தில் ஏன் சொல்லப்பட வேண்டும். இந்தக்காலத்திற்கு ஏற்றவாறல்லாமல் முழு சீரியல்தனமாக இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. புராணம் வாசிக்கும் பெரியரவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறைக்கு..
படம் ஆரம்பித்த அரை மணி நேரம் கழித்தே சமந்தா வருகிறார். அதுவரை காட்டு விலங்குகளின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகன் ஊடே வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைக்கதை முழுக்க இந்த தடுமாற்றம் இருக்கிறது.
சமந்தா மட்டுமே ஆறுதலாக இருக்கும் படத்தில் அவருக்கும் பெரிய அளவில் நடிக்க காட்சிகள் இல்லை என்பது சோகம். அழகு நிறைந்த அப்பாவி பெண் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். ‘காதல் காவியம்’ என தொடக்கத்திலேயே அடைமொழியிடப்பட்ட படத்தில் சமந்தாவுக்கும் நாயகன் தேவ் மோகனுக்கும் இடையிலான காட்சியில் துளியும் காதலில்லை.
படமே தெரிந்த கதை அதிலும் சுவாரஸ்மில்லாத திரைக்கதை, வலுவே இல்லாத காட்சிகள், பிரியும் காதலர்கள் இறுதியில் இணைகிறார்கள் நமக்கு இப்ப அதுக்கு என்ன என்பதாகத்தான் தோன்றுகிறது.
அதிலும் தெலுங்கில் எடுத்த படத்தின்
தமிழ் டப்பிங் புரியாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் ஒரு ஆறுதல் சிஜி ஒளிப்பதிவு அபாரம். இசை இருக்கிறது ஓரமாக. ஆனால் படத்தின் தொழில் நுட்பம் சிஜி, ஆடை அலங்காரம் எல்லாம் அட்டகாசமாக செய்யப்பட்டிருக்கிறது.
ஹரீஷ் உத்தமன், மோகன் பாபு மற்றும் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா அதிதி என பலரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக்காலத்திற்கு ஒட்டாத ஒரு காதல் கதை எந்தவித ஈர்ப்பையும் தரவில்லை.