சீதா ராமம் அழகான பேரானுபவம்!

 

இயக்குநர் – ஹனு ராகவாப்புடி

நடிப்பு – துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா

கதை – ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் ஒரு வீர தீர செயல் மூலம் பிரபலமாகிறான். அவன் அநாதை என்பது வானொலி மூலம் தெரியவர இந்தியா முழுவதிலிமிருந்து அவனுக்கு உறவுகள் என கடிதம் வருகிறது. அதில் ஒரு கடிதம் நான் உன் மனைவி என வருகிறது, அவன் அவளை தேடி போகிறான் அவளால் இவன் காதலை ஏற்க முடியவில்லை. அது ஏன்? அவர்களின் காதல் சேர்ந்ததா? என்பதே கதை.

வெகு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அழகான நாவல் போன்றதொரு கதை. காட்சிகள் மனதில் ரம்மியமாய் ஒட்டிக்கொள்ள ஒரு நாவலின் அத்தியாங்கள் போல் கதை நகர்கிறது. கதை முழுதும் ராஷ்மிகா பாத்திரத்தின் பார்வையில் விசாரணையில் நமக்கு சொல்லப்படுகிறது. அதன் மூலமே பல முடிச்சுகள் அவிழ்கின்றன.

மொத்த படமும் முடிந்து நிமிர்கின்ற பொழுது ஒரு பேரானுபவத்திலிருந்து வெளிவந்த உணர்வு.

1964, 1984 என இரண்டு காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. அந்த காலகட்டத்தை அதன் பிரமாண்டத்தை அட்டகாசமாக திரையில் வடித்திருக்கிறார்கள். படத்தின் மேக்கிங் உலகத்தரம். கேமரா எடிட்டிங் இசை , திரைக்கதை என அனைத்தும் ஒரு படத்திற்குள் எப்படி பொருந்திப் போக வேண்டும் என பாடமெடுக்க இது மிகச்சிறந்த படைப்பு.

 

துல்கர் என்ன சொல்வது ராணுவ வீரனாக காதலனாக மயக்குகிறார். இந்தப்படம் அவர் கேரியரின் முக்கிய படமாக இருக்கும். மிருணாள் அழகி சின்ன சின்ன பாவங்களில் மனதை கொள்ளை கொண்டு விடுகிறார். ராஷ்மிகா துணை வேடமென்றாலும் அசத்தியிருக்கிறார்.

உணர்வுகளை மையமாக வைத்து கதைகள் வருவது குறைந்து விட்டது அந்த ஏக்கத்தை போக்கி ஒரு மறக்க முடியாத அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது இந்தப்படம்

கண்டிப்பாக தவற விடக்கூடாத படைப்பு.