குருதி ஆட்டம் எப்படி இருக்கு?

எழுத்து & இயக்கம் : ஸ்ரீ கணேஷ்
நடிகர்கள்: அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதா ரவி, கண்ணா ரவி, ஆறுமுகம், வட்சன்.
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ராக்போர்ட் முருகானந்தம்

கபடி ஆட்டத்தில் தொடங்கும் சிலரின் வாழ்கை எப்படி குருதி ஆட்டத்தில் போய் முடிகிறது என்பதே கதை.

ஒரு பக்காவான ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான ஒன்லைன் கதையை வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அதுமட்டுமில்லாமல் அவர் கதையை டீல் செய்யும் விதம் அபாரம், ஒரே நோக்கில் கதையை பயணிக்கவிடாமல், பல கோணங்களுக்கு கதையை எடுத்து செல்லும் வித்தை அவரிடம் இருக்கிறது. இது தனித்துவமான ஒரு வித்தை, ஒரு நாவலை போன்று திரைப்படத்தை கையாளும் யுக்தி இது.

ராதிகாவின் ஒப்பனிங் காட்சி, பல கேங்க்கள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்பம் பரபரவென தொடங்குகிறது. ஒரு ராவான கேங்ஸ்டர் படத்திற்கான அத்தனை அம்ஷங்களும் அழகாய் பொருந்திய ஒரு திரைப்படமாக வரவேண்டிய அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது.

ஆனால் இதுவெல்லாம் இருந்து என்ன புரோயோஜனம் என ஆகிவிடுகிறது மற்ற காட்சிகள், வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எமோசன் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. திரைக்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் மேல் நாம் ஒன்றி போகவில்லை. அவர்களுக்கு நடக்கும் பாதிப்புகள் நம்மை தாக்கவில்லை. அதற்குண்டான காட்சிகள் இல்லை.

நாம் பார்த்த பல திரைப்படங்களில் இருக்கும் பல கிளைக்கதைகள் படத்தில் இருக்கிறது. ஆனால் படம் ஒரு கோர்வையாக இல்லாமல், தனிதனியாக இருக்கிறது. ஒன்று ஆரம்பித்து போய் கொண்டிருக்கும் போதே, அதை பாதியில் விட்டுவிட்டு வேறு இடத்திற்கு போவது போல் இருக்கிறது. முழுதாய் கோர்க்கபடாத ஒரு படமாக இருக்கிறது.

அடுத்ததாக பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் சோபிக்கவில்லை. ஆனால் பின்னனி இசை சில இடங்களில் ஆச்சர்யம் தரும் ஒன்றாக இருக்கிறது. யுவனின் வேலையும் பாதியில் நிற்கிறது. கண்ணா ரவி, வட்சன், பிரகாஷ் என பல துணை கதாபாத்திரங்கள் நடிப்பு கவனத்தில் கொள்ளும் படி இருக்கிறது.

மொத்தத்தில் சிறப்பான ஒன்றாய் வரவேண்டிய திரைப்படம், பாதி இடங்களில் பாதி வெந்தும், பாதி இடங்களில் அதிகமாய் வெந்தும் சாப்பிட முடியாமல் இருக்கிறது.