எல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன ? – நடுவன் திரை விமர்சனம்

நடுவன் திரை விமர்சனம்

இயக்கம் – சரண் குமார்

நடிகர்கள் – பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த்

கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம் செய்கிறார்கள் என தெரியவர, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.


எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது அதை கழட்டிவிட்டு பார்த்தால், நாம் அனைவருமே அகோரமாகதான் இருப்போம். இங்கு எவனுமே நல்லவன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பச்சோந்தி தான், என சொல்ல வருவது தான் இந்த நடுவன். ஒரு படத்தை பார்க்க, நமக்கு அக்கதை ஒரு ஈர்ப்பை தர வேண்டும், அல்லது நம் உணர்வுகளை அது பாதிக்க வேண்டும். இரண்டுமே இப்படத்தில் இல்லை பின் எதற்காக இந்த படம் ?

ஒரு மலை உச்சியின் நகரத்தில் பனிபடலம் சூழும் பின்னணியில் கதை நடக்கிறது. படத்தின் ஒரே ஆறுதல் அது தான். காட்சிகள் பார்க்க அழகாக இருக்கிறது. பரத் பிஸினஸ் என அலைய அவர் மனைவிக்கும் அவரது நண்பருக்கும் தொடர்பு இருப்பது வேலைக்காரனுக்கு தெரிய வருகிறது இந்த ஒற்றை வரி கதையை இடைவேளை வரை காட்டி நம்மை சோதிக்கிறார்கள். இடைவேளைக்கு பிறகு வேறு ஒரு கதையும் சொல்கிறார்கள் நான்கு இளைஞர்கள் போதையில் ஒரு கொலை செய்துவிட, அதிலிருந்து தப்பிக்க நினைத்து பரத் வீட்டுக்கு திருட வருகிறார்கள். அங்கு மனைவியை கொல்ல பரத் காத்திருக்கிறார் இதில் என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் அதில் நமக்கு எந்த வித சுவாரஸ்யமும் தோன்றுவதில்லை.

படம் எதை நோக்கி போகிறது என்கிற குழப்பம் படத்தை பார்ப்பவர்களுக்கு பலமாய் ஏற்படுகிறது. படத்தை எடுத்தவர்களுக்கே அது தெரியுமா என தெரியவில்லை. மனைவி துரோகம் செய்தால் அதன் தீர்வு என்ன, என்ன செய்யலாம் கொலை செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கலாம், மன்னிக்கலாமா, இப்படி அவர்கள் எதை சொல்கிறார்கள் எனும் குழப்பங்கள் படம் முழுக்க இருக்கிறது. எல்லோருக்கும் முகமூடி இருக்கிறது ஓகே, ஆனால் அதறகப்புறம் படத்தில் என்ன இருக்கிறது என்றால் ஒன்றுமே இல்லை. கொஞ்சம் கூட ஈர்க்காத திரைக்கதை படத்தை பின்னால் இழுக்கிறது.

படத்தின் பின்னணி இசை எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி திரில்லர் இசையை இழுத்துகொண்டே இருக்கிறது. படத்தின் டெக்னிகல் டீம் சிறப்பாக செய்திருக்கிறது. காட்சிகளில் ரிச்னெஸ் இருக்கிறது. ஆனால் அது படத்தை காப்பாற்றவில்லை. பரத் ஏன் இப்படத்தில் நடித்தார். ஏன் இப்படம் எடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். மொத்தமாக நடுவன் அதளபாதாளத்தில் விழுந்திருக்கிறது.

நடுவன் 2/5 ⭐️