டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை!

கதை, இயக்கம் – தாஸ் ராமசாமி
நயன்தாரா, தம்பி ராமையா, கார்

நயன்தாராவை முழுதாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். நயன்தாரா அப்பா தம்பி ராமையாவுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கால் டாக்ஸி நடத்த திட்டமிட்டு ஒரு கார் வாங்குகிறார்கள். அந்தக் காரில் ஒரு ஆவி இருக்கிறது. அது ஏன் நயன்தாராவை தேடி வந்திருக்கிறது. அந்த ஆவி யாரை எதனால் பழி வாங்குகிறது என்பது தான் படம்.

மாயாவிற்கு பிறகு வந்திருக்கும் நயன்தாராவின் பேய்ப்படம். நயந்தாரா நடித்தாலே ஹிட் எனும் மந்திரத்தை தோற்கடிக்க வந்தது போல் இருக்கிறது.

காட்சிகளில் பாத்திரங்களில் எந்தத் தெளிவும் இல்லை. ஏனோ தானோவென்று இருக்கிறது. கார் வந்து ஒரு கொலை நடக்கும் வரை படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஒரு பக்கம் கொலை விசாரனை மறுபக்கம் பேய்க்கதை என ஒன்லைன் பிடித்தவர்கள் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டாரகள்.

ஆரம்பத்தில் இது காமெடிப்படமா பேய்ப்படமா என்றே தெரியாமல் நகர்கிறது.

நயன்தாரா சொந்தக்குரல். பேசிக் கேட்காமலே இருக்கலாம். தமிழ் தட்டுத் தடுமாறுகிறது. நடிப்பு எல்லாம் ஓகே ஒரு அந்நியன் விக்ரமை மிஞ்ச முயல்கிறார். பல காட்சிகளில் ஹீரோ பில்டப்பில் ஸ்லோமோஷனில் நடந்து வருகிறார்.

தம்பி ராமையா காமெடி எனும் பெயரில் அஷ்ட கோணல் சேஷ்டைகள் நிரைய செய்கிறார். பாவம் ரசிகர்கள் தான். ஹரீஷ் உத்தமன் மட்டுமே ஆறுதல். போலிஸாக கவர்கிறார்.
காரை பேயாக உருவாக்கியதெல்லாம் ஓகேதான் ஆனால் சாவி போட்டால் தான் பேயே வேலை செய்கிறது.

லாஜிக்கெல்லாம் கேட்கவே கூடாது. கேட்டால் மொத்தப்படமும் காலியாகி விடும்.

வரவர ஹிரோயின்கள் கற்பழிப்பை தாண்டி பரிதாபத்தை தூண்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது காட்டப்படுவது பெரும் அதிர்ச்சி. அவசியமா இது ?
ஒளிப்பதிவு மற்றும் சிஜி காட்சிகள் ஹாரர் பட உணர்வை தக்க வைக்கின்றன. இசை கோனுசம் பயமுறுத்த முயல்கிறது.

மொத்தத்தில்

டோரா யாருக்கான படம் என்ற தெளிவில்லாமல் வந்திருக்கிறது.

டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை.

 

கதிரவன்