உறியடி மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமார் நடிப்பில், சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் எலக்சன்.
உள்ளாட்சித் தேர்தல் களப் பின்னணியில் நடைபெறும் கதை எப்படி இருக்கிறது இந்த எலக்சன்.
நாட்டின் உச்சகட்ட அரசியல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் அது உள்ளாட்சி தேர்தலில் இருந்து தான், ஆனால் அந்தக்களத்தில் கட்சிகளை விட உள்ளூர் ஆட்களின் பகை, துரோகம், ஆசை என அந்த உள்ளூர் ஆட்களின் உறவும் அரசியலும் எந்த படத்திலும் பேசவில்லை, ஆனால் இந்தப்படம் அதை நெருக்கமாக பேசுகிறது.
கட்சிகள் கோலோச்சும் அரசியலில் தொண்டன் ஒருவனின் மகன் தலைவன் ஆவதே எலக்சன் படத்தின் கதை.
வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன் உறியடி விஜய் குமார், தேர்தலில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கிராமங்களில் வாழும் மக்களுக்கு நன்றாக தெரியும் உள்ளாட்சித் தேர்தலில் என்னவெல்லாம் நடக்குமென்று, கொலை வரை எல்லாம் செல்லும் பகை சர்வ சாதாரணம். நமக்கு உள்ளாட்சித் தேர்தல் என்றால் என்னவெல்லாம் ஞாபகம் வருமோ, அவற்றை அப்படியே படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் தமிழ். கூடவே, தேர்தல் என்றால் என்ன என்றும் பாடம் எடுத்திருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலை கண் முன் நடத்திக் காட்டியிருக்கிறது படக்குழு
குடவோலை முறை தேர்தல், பிரிட்டிஷ் கால நீதிக் கட்சி, சுதந்திரத்துக்குப் பிந்தைய தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் என்னவெல்லாம் ந்டக்கும் என்பதை காட்டியதற்கு படக்குழுவைப் பாராட்டியே ஆகவேண்டும்.
ஒரு வகையில் படத்தின் மைனஸும் அது தான் இன்றைய இளைஞர்கள் அதிகம் தெரிந்து கொள்ளாத களம் என்பதால், படம் புரியாமல் போகக்கூடும்.
நாயகன் ’உறியடி’ விஜய்குமார் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். ஆனால் காதல் காட்சிகள் அவருக்கு செட்டாகவில்லை ஆனால் துரோகத்தில் அவர் காட்டும் பாவனைகள், நல்ல நடிகர் என்பதை நிரூபிக்கிறது. கூடவே ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
திலீபன், பிரீத்தி அஞ்சு அஸ்ராணி, நாச்சியாள் சுகந்தி ஆகியோரும் நடிப்பில் கவனிக்கவே வைக்கின்றனர்.
எழுத்தாளர் அழகிய பெரியவன், இயக்குநர் தமிழ், விஜய்குமார் ஆகிய மூவரின் முத்திரை வசனங்களில் தெரிவது பலம்.
வேலூர், ராணிப்பேட்டை பகுதியின் நிலவியலை, திரைக்கதைக்கு ஏற்ற விறுவிறுப்புடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், மகேந்திரன் ஜெயராஜ். கோவிந்த் வஸந்தாவின் இசை படத்திற்கு பலம்.
முதல் பாதியில் கதையின் களம் புரியாதததால் படத்திற்குள் நம்மால் முடியவில்லை ஆனால், இரண்டாம் பாதி மிக அட்டகாசமாக இருக்கிறது. படமும் மிக முக்கியமான அரசியலை அழுத்தமாக பேசுகிறது.
தமிழில் மிக முக்கியமான அரசியல் படமாக மிளிர்கிறது இந்த எலெக்சன் !!