வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

தனுஷ் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது ?

பெரும் பொருட்செலவிலா பயங்கரமான ஆக்சன் காட்சிகளுடன், டிரைலர் வந்தபோதே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்து இருக்கிறதா?

சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் ராஜாக்கள் அடித்தட்டு மக்களை கோயிலுக்குள் கூட வரவிடாமல் தடுத்து வைத்து அடிமைப்படுத்த, மரியாதை கிடைக்கிறது என, பிரிட்டிஷாரிடம் சிப்பாயாக போகிறான் ஈசன். அவனுக்கு அங்கு கிடைக்கும் பெயர் மில்லர். ஒரு கட்டத்தில், அவன் சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷார் கட்டளையிட, அங்கிருந்து வெளியேறுகிறான். பின் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுகிறான். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமில்லாமல், தன் மக்களை கொடுமைப்படுத்தும் ராஜாவுக்கு எதிராகவும், தன் கிராமத்திற்காகவும் போராட ஆரம்பிக்கிறான்.

எந்த காலகட்டத்திலும் அடித்தட்டு மக்களுக்கான மரியாதை, அவர்களுக்கான மதிப்பு, யார் ஆட்சிக்கு வந்தாலும் தரப்படுவது இல்லை. அவர்கள் மீது சுரண்டல் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இந்த படம் அடித்தட்டு மக்கள் சுதந்திரத்திற்கு முன்பாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கொஞ்சம் நெருக்கமாக உண்மையாக பேசியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கு, நாம் எத்தகைய வரலாறை கடந்து வந்தோம் என்பது தெரியவில்லை. இருக்கும் இப்போது ஈசியாக சொல்லிவிடலாம் ஜாதி எதுவும் இல்லை என்று, ஆனால் இன்று வரையிலுமே இருக்கும் ஜாதி பிரச்சனைகளை, இந்த செருப்பு போடக்கூடாது, கோயிலுக்குள் செல்லக்கூடாது, தலை நிமிர்ந்து நடக்கக் கூடாது என அடிமைப்படுத்தப்படும் மக்களின் வலிகளை வரலாற்றை இந்தப் படம் பேசி இருக்கிறது. அதற்காகவே இந்த படத்தை பாராட்டலாம்.

Captain Miller Teaser: Dhanush starrer Promises A Powerful Action-Packed  Entertainer

வழக்கமான அருள் மாதேஸ்வரன் திரைக்கதை அமைப்பு, அத்தியாயங்களாக பிரியும் குவண்டின் டைப் திரைக்கதை. கிராமத்தானாக வாழும் தனுஷ், மில்லராக பிரிட்டிஷாரிடம் பயிற்சி எடுக்கும் தனுஷ், பின் போராளியாக தன் மக்களுக்காக போராடும் தனுஷ், இந்த மூன்று கதையும் படத்தில் மூன்று அங்கங்களாக வருகிறது.

உண்மையில் வாழ்ந்த பிரிட்டிஷுக்கு எதிரான போராளி கேப்டன் மில்லரின் வாழ்க்கையை கொஞ்சம் கற்பனையோடு, அருமையான திரைக்கதையோடு சொல்லி இருக்கிறார்கள்.

தன் சொந்த மக்களையே கொன்ற குற்ற உணர்ச்சியில் வாழும், ஒரு போராளியாக தனுஷ் வாழ்ந்திருக்கிறார். படம் முழுக்க அவர் கண்ணில் தெரியும் வலி, அதை அவர் கடத்திய விதம், ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டிய விதம், அட்டகாசம். தனுஷ்க்கு அவரது கேரியரில் மிக முக்கியமான படம்.

தனுசுக்கு அடுத்ததாக எல்லோரின் மனதிலும் எளிமையாக இடம் பிடித்து விடுகிறார் சிவராஜ் குமார். அதிலும் இறுதிக்காட்சியில் விசில் பறக்க விடுகிறார்.
சந்திப் கிஷன், குமரவேல், காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், நிவேதிதா, என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது என்றாலும் ஒவ்வொருவரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும், தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒரே மைனஸ் பிரியங்கா மோகன் மட்டுமே பாவம் அவருக்கு இந்த கதாபாத்திரம் ஒத்துவரவில்லை.

ஒரு ஒரு திரைப்படம் என்பது உணர்வுகளை கடத்துவது, நம்மை நாம் அறிந்தராத ஒரு உலகத்திற்குள் இழுத்துச் செல்வது, இந்த படக்குழு அதை அற்புதமாக செய்திருக்கிறார்கள்.

அருண் மாதேஸ்வரன் கனவை ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா திரையில் அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார். அந்த காலகட்டத்திற்குள்ளேயே நாம் சென்று விட்டோமோ ? என்று தோன்றுகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஜிவி பிரகாஷ் குமார் தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த இசையை தந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் காட்சியின் ரிதத்தோடு ஒட்டிக் கொண்டது இசை காட்சியை விட்டு பிரித்து கூட பார்க்க முடியவில்லை அத்தனை அற்புதமான பின்னணி இசை. எடிட்டிங்கும் அப்படியே!!

படத்தில் ஒரு கோயில் செட்டு வருகிறது அது செட் என்று சொல்ல முடியவில்லை அத்தனை தத்ரூபமாக அதனை உருவாக்கி இருக்கிறார் ராமலிங்கம். படத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் பயங்கரமான உழைப்பை தந்திருப்பது படத்தில் திரையில் தெரிகிறது.

படத்தின் ஆக்சன் காட்சிகள் அத்தனை பிரம்மாண்டம் இடைவேளை காட்சியில் சேஸிங் கிளைமாக்ஸ் காட்சிகளின் பிரமாண்டமான ஆக்சன், இதுவரையிலும் தமிழ் திரை உலகம் பார்த்திராததது ! எப்படி இதை திரையில் கொண்டு வந்தார்கள் என்ற பிரமிப்பை தருகிறது. திலீப் சுப்பராயன் மாஸ்டருக்கு தனி பாராட்டுகளை கூறலாம்.

அருண் மாதேஸ்வரன் ராக்கி, சாணி காகிதம் படங்களில் இருந்து விடுபட்டு, வெகுஜன மக்களுக்காக கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். ஆனால் ஒரு முழுமையான படைப்பாளியாக மிளிர்ந்திருக்கிறார். ஒரு படைப்பில் என்ன சொல்ல வேண்டும், ஒரு படைப்பு காட்சியை எப்படி உருவாக்க வேண்டும், அதன் காட்சிகள் எந்த அளவு உணர்வுகளை கடத்த வேண்டும் அத்தனையையும் கச்சிதமாக திரையில் நிறைவேற்றி இருக்கிறார்.

பெரியார் முன்னெடுத்த கோயில் நுழைவு, இப்படி கூட திரை கதையாகுமோ ? என்று ஆச்சரியம் தரும்படி ஒரு அற்புதமான படைப்பாக மிளிர்ந்து நிற்கிறது கேப்டன் மில்லர்.

கேப்டன் மில்லர் மிஸ்டர் மிஸ் பண்ண கூடாத திரைய அனுபவம்.