வாய்தா விமர்சனம் :
நடிகர்கள்: மு ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெஸ்ஸிகா, நாசர் மற்றும் பலர் எழுத்து &; இயக்கம்: மதிவர்மன் இசை: லோகேஸ்வரன் ஒளிப்பதிவு: சேது முருகவேல் படத்தொகுப்பு: நரேஷ் குணசீலன் தயாரிப்பு: கே வினோத் குமார்
கதைக்களம்..
ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் ஒரு விபத்து நடக்கிறது.
சாலை ஓரம் அயர்னிங் கடை போட்டு நடத்தி வருகிற பெரியவர் மு ராமசாமிக்கு அடி படுகிறது. இதை சுற்றி மேல் ஜாதிக்காரர் இருவர் கோர்ட் வழக்கு வரை சென்று சண்டையிடுகிறார்கள் இதில் அந்த எளியவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே கதை.
ஒரு சிறு பைக் விபத்து அதை சுற்றி சுழலும் கதை அதில் நம் சமூக அமைப்பையும், ஏழை மக்களின் வாழ்வியலையும், கோர்ட் நடவடிக்கைகளையும் தத் ரூபமாக எடுத்துள்ளார்கள்.
பைக் பெரியவர் மீது மோதிவிட்டு பைக்காரன் பயத்தில் ஓடிவிடுகிறான்.
இதனால் பெரியவரின் பையன் வண்டியை தன் வீட்டுக்குள் எடுத்து வைத்து பூட்டி விடுகிறான்.
பைக்காரன் மீது போலீஸ் புகார் கொடுக்கலாம் என பெரியவரின் குடும்பத்தினர் சொல்கின்றனர்.
ஆனால் போலீஸை விட ஊர் பெரியவர்களும் சம்பந்தபட்டவர்களும் பேசி பணம் கொடுத்து வாங்கி சமாதானம் ஆகலாம் என்கின்றனர் சிலர்.
இந்த நிலையில் பைக் ஓனரே.. பெரியவர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். அதாவது வண்டியை திருடி விட்டதாக வழக்கை திசை திருப்ப செய்கின்றனர்.
இதனால் பிரச்சினை பெரிதாகிறது. அதன்பின்னர் கோர்ட்டில் வழக்காகிறது.
இந்த வழக்கு விசாரணையும், அதனை சுற்றி நிகழும் சம்பவங்களுமே படம்.
இறுதியில் என்ன ஆனது ? என்பதே கதை.
ராமசாமி உடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரும் பலம். அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார். இவரின் மகன்.. அந்த கிராமம் மேல் ஜாயிக்காரர்கள், வக்கீல் எல்லோரும் படம் போல் இல்லாமல் நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் போல் அழகாக நடித்துள்ளார்கள்.
உண்மையில் நீதிமன்ற வழக்குகள் எப்படி இருக்கிறது வாய்தா மேல் வழக்கு வாய்தா வாங்குவதிலேயே போய்விட, எளிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழகாக சொல்லியுள்ளது படம்
படம் வழக்கமான மசாலாவிலிருந்து விலகி இருப்பதால் அதை ஒட்டி அதன் மேக்கிங்கும் திரைவிழாக்களுக்கு செல்லும் படங்கள் போலவே இருக்கிறது.
அதனால் படத்தின் திரைக்கதையில் எந்த பரபரப்பும் இல்லை.
ஆனால் சமூகத்தில் எளியவர்களிடமிருந்து நீதியும், நியாயமும் எப்படி பறிக்கபடுகிறது.? வலியவர்களின் அதிகார எல்லை மீறல் ஆகியவை அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது.
சாதி ஆணவம், காதல், ஏழை மக்களின் வலி, இழைக்கப்படும் அநீதி என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர். அதற்காகவே இந்த படம் மிக முக்கிய ஒன்றாக மாறிவிடுகிறது
வாய்தா சமூகத்திற்கு அவசியமான சினிமா!