இயக்குனர் : வித்யாதர் ககிதா
இசை : நரேஷ் குமரன்
ஒளிப்பதிவு: விஸ்வநாத் ரெட்டி
தயாரிப்பாளர்கள்: கார்த்திக் சபரீஷ்
நடிப்பு – விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி
கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இயக்குனரின் கனவு படைப்பாக இருந்த படம், கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இப்போது திரைக்கு வந்திருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஷ்வக் சென் இப்படத்திற்கு பிறகு மூன்று படம் நடித்துவிட்டார். ஆனால் இப்போதுதான் அவர் நடித்திருக்கும் முதல் படம் வந்திருக்கிறது.
கொஞ்சம் பரிசோதனை முயற்சியாக அடித்தட்டு சினிமா ரசிகனுக்கு அதிகம் புரியாத நான் லீனியர் ஃபார்மேட்டில், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையோடு வெளிவந்திருக்கும் திரைப்படம் காமி.
இப்படத்தின் கதை நான் லீனியரில் மூன்று காலகட்டத்தில் மூன்று பேருக்கு நடக்கும் கதையாக விரிகிறது. கதையின் ஆரம்பத்தில் நாயகனுக்கு எந்த ஒரு மனிதரையும் தொட முடியாத பிரச்சனை உடலில் இருக்கிறது. அதை சரி செய்ய ஒரு யோகியின் அறிவுரையின் படி 36 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஒரு பூவை தேடி, இமயமலைக்கு பயணிக்கிறான். அதேபோல் அப்புவைத் தேடி நாயகியும் பயணிக்கிறாள். இன்னொரு புறம் தேவதாசி ஒருத்தி தன் மகளை காப்பாற்ற போராடுகிறார். மற்றொருபுறம் ராணுவ கட்டுப்பாட்டில் நடக்கும், மனித மூளை ஆராய்ச்சியில் சிக்கிக் கொள்ளும் ஒரு சிறுவன் அங்கு ரெண்டு தப்பிக்க போராடுகிறான். இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகிறது இன்னும் மூன்று கதைகளுக்கும் என்ன சம்பந்தம் இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
கதையை சொல்வதற்கே கடினமாக இருக்கும் இந்த திரைப்படம் புரிந்து கொள்ளவும் கடினமாகவே இருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளும் திருப்பங்களோடு படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் மருந்துக்கூட இல்லை. மாறி மாறி வரும் கதையும் சம்வபங்களும் அயர்ச்சியை தருகிறது. படத்தில் யாருக்கும் எந்த ஒரு நல்ல விசயமும் நடப்பதே இல்லை. லாஜிக் என்பது எந்த காட்சியிலும் இல்லை.
விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள் ஆனால் அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகியுள்ளது. அனன்யாவும் அந்த சிறுவனும் கூட நன்றாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவும் இசையும் படத்தின் மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. இமயமலை காட்சிகள் லாஜிக்காக இல்லையென்றாலும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.
கதையின் மையம் என்ன? முடிவு என்ன? எதுவும் தெரியவில்லை. யாருக்கும் புரியாத பரிசோதனை முயற்சியாக மலர்ந்திருக்கிறது காமி.