F I R திரை விமர்சனம் !

இயக்கம் – மனு ஆனந்த்
இசை – அஷ்வத்
நடிகர்கள் – விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரைசா வில்சன்

ஒரு முஸ்லீம் பெயர் இருப்பாதாலேயே ஒருவன் வாழ்வில் என்னென்ன சிக்கல்களை அனுபவிக்க வேண்டி வரும். நம் நாடு இன்றைய காலகட்டத்தில் சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை இது தான் இந்த திரைப்படத்தின் மையம்.

சென்னையில் கெமிக்கல் இன்ஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞன் இர்ஃபான். அன்பான அம்மா அழகான வாழ்க்கை என எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவர் பார்ட் டைமாக வேலை செய்ய போகும் இடத்தில் நம் அரசாங்கம் கண்காணிக்கும் தீவிரவாதியை சந்திக்கிறார். நேஷனல் அதிகாரிகள் இர்ஃபானை பிந்தொடர அவர் போன இடத்தில் பாம் வெடிக்க பழி அவர் மேல் விழுகிறது. தன் முஸ்லீம் பெயரால் பழிக்கு ஆளாகியுள்ள நாயகன் அதிலிருந்து வெளிவருகிறாரா என்பது தான் படம்.

சிறுபான்மையினரான முஸ்லீம் நண்பர்கள் மீது இந்தியாவில் தற்போது நடந்து வரும் தாக்குதல்களும், அவர்கள் மீது காட்டப்படும் வெறுப்பும், உலகம் முழுக்க முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என முத்திரை குத்தப்படுவதும் என தற்போதைய உலகளாவிய பிரச்சனையை அழுத்தமான திரைக்கதையாக மாற்றியதற்கே இப்படக்குழுவிற்கு வாழ்த்து சொல்லலாம்.

மெதுவாக ஆரம்பிக்கும் படம் விஷ்ணு மாட்டும் இடத்திலிருந்து தீப்பிடித்தது போல் நகர ஆரம்பிக்கிறது. தொடர்ந்து படம் பார்க்கும் திரை ரசிகர்கள் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸை கணித்து விட முடியும் என்றாலும் படம் இறுதி வரை பரபரப்பாகவே செல்கிறது.

விஷ்ணு விஷால் தன் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுப்பார் அதை இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார் அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கும் நேரத்தில் பதறும் இடத்திலும் தன் மீதான குற்றத்தை களைய வேண்டும் என போராடுவதிலும் கவர்ந்திருக்கிறார். முக்கியமாய் இந்தப்படத்தை தேர்ந்தெடுத்து தயாரித்ததற்கே அவரை பாராட்டலாம்.

படத்தில் நாயகனை தாண்டி, ரைசா வில்சனும், கௌதம் மேனனும் கவனம் ஈர்க்கிறார்கள், அவர்கள் கதாப்பத்திரமும் அதை செய்திருக்கும் விதமும் அட்டகாசம்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்களை ஹாலிவுட் தரத்தில் தந்திருக்கிறார்கள், இசை ஒளிப்பதிவு எல்லாம் அட்டகாசம். க்ளைமாக்ஸ் பரபரப்பு எல்லாம் நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை தருகிறது.

ஒரு நாலு முஸ்லீம் பேரை சொன்னால் நாமும் தீவிரவாதி என பின்னால் ஓடிடுவோம்ல, இங்க பேரை சொன்னாவெ நார்மலா நடக்கிறதே எனக்கு நடக்க மாட்டேங்குது என் வசனங்களிலும் தீப்பறக்க வைத்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ஒரு சிறு டிவிஸ்ட்டை வைத்துக்கொண்டு அதில் அட்டகாசமான நுணுக்கங்களோடு பரபர கதை சொல்லி நம்மை ஈர்த்துள்ளார்.

படத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நிறைய லாஜிக் ஓட்டைகள் முட்டிக்கொண்டு தெரியும் ஆனால் அதை நம்மை யோசிக்க விடாமல் செய்ததில் ஜெயித்திருக்கிறார்கள்.

F I R நல்ல திரில்லர் அனுபவம்!