அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

 

எழுத்து இயக்கம் – இரா சரவணன்

நடிப்பு – ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி

கதை – பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை.

கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படி ஒரு காட்சி கூட இல்லை. அதனாலேயே நாம் கதைக்குள் நுழையவே முடியவில்லை.

படம் ஆரம்பித்து ஒவ்வொரு பாத்திரம் அறிமுகமாகும்போதும், அடி ஸ்கேல் நீளத்திற்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ஜோதிகா சமுத்திரகனியை மிஞ்சுகிறார். ஜோதிகாவிற்கு இது 50 வது படம். இப்படி தனக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத ஒரு படத்தை அவர் எப்படித்தான் தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை. அவருக்கு கதையில் மொத்தமாகவே 4 வசனங்கள், நாலு கோப பார்வை தவிர்த்து வேறெதுவும் இல்லை. சசிகுமார் வருகிறார் போகிறார் சண்டை போடுகிறார் அவ்வளவே தனியாக மிளிரும்படி ஒரு காட்சியும் இல்லை. கலையரசன் வளர்த்து வைத்திருந்த சினிமா கிராஃபை ஒரே படத்தில் அடித்து நொறுக்கியிருக்கிறார் இயக்குநர். பாவம் அவர். படத்திற்கு மொத்தமாகவே சூரி தான் கொஞ்சம் ஆசுவாசம் தருகிறார்.

படம் எங்காவது கொஞ்சம் ஈர்க்கும் என நினைக்கையில் படமே முடிந்து விடுகிறது. ஒன்றுமே இல்லாத உணர்வற்ற காட்சிகளில் இழுத்து பிடித்து தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறது இமானின் இசை. அவர் மட்டும் இல்லாதிருந்தால் படம் பார்ப்பது இன்னும் கஷ்டமாகியிருக்கும். ஒளிப்பதிவு தன் வேலையை சிறப்பாக செய்துள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள். இயக்குநர் தவிர்த்து. சமுத்திரகனி படம் முழுதும் வன்முறை கூடாது என சசிக்குமாரை எதிர்க்கிறார் ஆனால் இறுதியில் சசிக்குமார் சரியென ஏற்கிறார் அப்ப இயக்குநர் வன்முறை சரியென சொல்கிறாரா ? . படம் முழுதுமே இந்த முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த உடன்பிறப்பு சந்தோஷம் தரவில்லை சோகங்களை மட்டுமே தருகிறது.